Published:Updated:

சுலபமாகச் செய்யலாம் அறிவியல் சோதனைகள்!

சுலபமாகச் செய்யலாம் அறிவியல் சோதனைகள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

 றிவியல் ஆய்வுக்கூடம் இல்லாமல், காற்று தொடர்பான சில சோதனைகளைச் செய்துபார்க்க ரெடியா?

சோதனை-1: குச்சியின் நடுவில் ஒரு நூலைக் கட்டவும். இரு முனைகளிலும் காற்று நிரப்பப்பட்ட ஒரே அளவிலான பலூன்களைக் கட்டவும். அதைத் தராசு போன்று பிடிக்கவும். பிறகு, ஒரு பலூனில் உள்ள காற்றை, ஊசியால் குத்தி வெளியேற்றவும். காற்று வெளியேறிய பலூன் இருக்கும் முனை, மேல் நோக்கி எழும்பும். காற்று நிரம்பிய பலூன் முனை கீழ்நோக்கி இறங்கும். இதன் மூலம் காற்றுக்கு எடை உண்டு என்பதை அறியலாம்.

சோதனை-2: ஒரு பாட்டிலின் வாய்ப் பகுதியில்  ஒரு புனலை வைத்து, நீர் ஊற்றுங்கள். புனலில் நீர் மெதுவாக இறங்குவதைக் காணலாம். பின்னர், புனலைச் சற்று மேலே உயர்த்தவும். நீர், முன்பைவிட வேகமாக பாட்டிலுக்குள் இறங்குவதைக் காணலாம். புனல் சரியாகப் பொருந்தியபோது பாட்டிலுக்குள் இருந்த காற்று வெளியே செல்ல முடியவில்லை. அதனால், அங்கே இடத்தின் அளவு குறைவதால், அழுத்தம் அதிகரித்து நீர் மெதுவாக இறங்குகிறது. புனலைச் சற்று மேலே உயர்த்தும்போது காற்று வெளியேறுவதால், நீர் வேகமாக இறங்குகிறது.

சோதனை-3: ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி, அதன் மீது ஒரு காகித அட்டையை வைத்து அழுத்தி மூடவும். பிறகு, குவளையைக் கவனமாகத் தலைகீழாகத் திருப்பவும். திருப்பியதும் அட்டையில் இருந்து கையை எடுக்கவும். குவளையின் நீர் கீழ்நோக்கி இருந்தாலும் அட்டை கீழே விழாது. காரணம், காற்றின் மேல்நோக்கிய அழுத்தமே.

சுலபமாகச் செய்யலாம் அறிவியல் சோதனைகள்!

சோதனை-4: ஒரு தட்டில் மெழுகுவத்தியை ஏற்றி வைக்கவும். பிறகு, தட்டில் வண்ணம் கலந்த தண்ணீரை நிரப்பவும். ஒரு கண்ணாடிக் குவளையால் மெழுகுவர்த்தியை மூடவும். அப்போது, ஆக்ஸிஜன் தீர்ந்துபோவதால், மெழுகுவர்த்தி அணைந்துவிடும். அதனால் ஏற்படும் வெற்றிடத்தைப் போக்க, வண்ண நீர் மேலே உறிஞ்சப்படுவதைக் காணலாம்.

சுலபமாகச் செய்யலாம் அறிவியல் சோதனைகள்!

சோதனை-5: ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை எடுத்து, உயரமான இடத்தில் வைக்கவும். டியூப் ஒன்றினை எடுத்து, ஒரு முனையை பிளாஸ்டிக் பாட்டிலில் செருகவும். பிறகு, மறுமுனையை வாயில் வைத்து உறிஞ்சி, ஒரு காலியாக இருக்கும் தொட்டியில் வைக்கவும். டியூபில் இருந்த காற்றை உறிஞ்சுவதால், வெற்றிடம் ஏற்படுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப, பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள நீர், டியூப் வழியாகக் கீழே உள்ள பாத்திரத்துக்கு வரும்.

சுலபமாகச் செய்யலாம் அறிவியல் சோதனைகள்!
சுலபமாகச் செய்யலாம் அறிவியல் சோதனைகள்!

சோதனை-6: இரண்டு பலூன்களை எடுத்துக்கொள்ளவும். ஓன்றில் சிறிய செலோபன் டேப்பை ஒட்டவும். ஒரு சிரிஞ்ச் மூலம் செலோபன் ஒட்டாத பலூனில் குத்தினால், பலூன் வெடிக்கும். அதேசமயம் செலோபன் ஒட்டிய பலூனில் செலோபன் உள்ள பகுதியில் குத்தினால், அது வெடிக்காது. ஊசி குத்திய துளையின் வழியாக காற்று வெளியேறும். செலோபனால் பலூனின் சுவர்கள் வலிமையாக மாறுவதால், பலூன் உடைவது இல்லை.

என்ன நண்பர்களே... படிக்கும்போதே இவற்றைச் செய்துபார்க்க ஆசையாக இருக்கிறதா? ஆசிரியர் உதவியோடு செய்துபாருங்கள். அறிவியல் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ளுங்கள்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு