Published:Updated:

’படிக்க வசதியில்லை..!’ காய்கறி வியாபாரத்துக்கே திரும்பிய ’ஃபர்ஸ்ட்’ மாணவன்

எம்.குமரேசன்
’படிக்க வசதியில்லை..!’ காய்கறி வியாபாரத்துக்கே திரும்பிய ’ஃபர்ஸ்ட்’ மாணவன்
’படிக்க வசதியில்லை..!’ காய்கறி வியாபாரத்துக்கே திரும்பிய ’ஃபர்ஸ்ட்’ மாணவன்

த்தீஸ்கரில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டே படித்து, ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த சாதனை மாணவர், மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் மீண்டும் காய்கறி வியாபாரத்துக்கே திரும்பியுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. பலோட் மாவட்டம் லுண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரக்குமார் என்கிற மாணவர், அறிவியல் பிரிவில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்தார். இவர் பெற்ற மதிப்பெண் 98.6 சதவிகிதம். சத்தீஸ்கரில் நான்கு லட்சம் மாணவ-மாணவிகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். அந்த நான்கு லட்சத்தில் 'முதல்வன்' தேவேந்திரக்குமார்.

ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்ட தேவேந்திரக்குமாரின் தந்தை ஒரு விவசாயி. தாய் காய்கறி வியாபாரி. தாய்க்கு உதவியாக காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே படித்து வந்தார் தேவேந்திரக்குமார். கஷ்ட ஜீவனத்துக்கிடையே மாநில அளவில் முதல் இடம் பிடித்து அசத்தினார். மாநில அளவில் முதல் இடம் பிடித்த பிறகுதான் தேவேந்திரக்குமார் பல சோதனைகளைச் சந்திக்க நேரிட்டது.

இவருக்கோ ஐஐடி படிக்கவேண்டும் என்று ஆசை. ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம், ஐஐடி பயிற்சி மையங்களுக்குப் பேர்போனது. அந்தப் பயிற்சி மையங்கள், வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பவை. கோட்டாவுக்குச் சென்ற தேவேந்திரக்குமார், தன் மதிப்பெண் சான்றிதழைக் காட்டி பயிற்சி மையங்களில் சேர முயன்றார். 'பணம் இருந்தால் மட்டுமே உள்ளே வா' எனப் பதில் கிடைத்திருக்கிறது. பல பயிற்சி மையப் படிகளில் ஏறி இறங்கியும் பலன் இல்லை. 

பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் சேர முயற்சித்தார். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. தேவேந்திரக்குமாரின் மேற்படிப்புக்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தையடுத்து, சொந்த ஊரான லுண்டிக்குத் திரும்பி மீண்டும் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுவருகிறார். பாலோட் மாவட்ட நிர்வாகம், படிப்பதற்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. ஆனால், அறிவிப்பு அறிவிப்போடு நிற்கிறது.

தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சத்தீஸ்கர் மாநில அரசு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருக்கிறது. பரிசுத்தொகை, வரும் செப்டம்பர் மாதத்தில்தான் வழங்கப்படும். ஐஐடி பயிற்சி மையத்தில் சேர, உடனடியாகப் பணம் கட்டவேண்டிய நிலை தேவேந்திரக்குமாருக்கு இருக்கிறது. 

போண்டி என்ற இடத்திலுள்ள அரசுப் பள்ளியில்தான் தேவேந்திரக்குமார் படித்தார். அவருக்கு இயற்பியல் பாடம் எடுத்த ஆசிரியர் யாமினி ஷாகு, ``தன் மாணவர்களிலேயே தேவேந்திரக்குமார்தான் மிகச்சிறந்த மாணவர். மெரிட் லிஸ்ட்டில் வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், மாநில அளவில் முதல் இடத்தையே பிடித்து எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டார்'' என்றார்.

தேவந்திரக்குமாரின் தாயார், ``10 ஆம் வகுப்பிலும் என் மகன் 90 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தான். ப்ளஸ் டூ-வில் மாநிலத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளான். எங்களுக்குக் கொஞ்சம் விவசாய நிலம் இருக்கிறது. வாழ்வாதாரமே அந்த நிலம்தான். அதை விற்றுப் படிக்கவைக்க முடியாத நிலை இருக்கிறது'' என வேதனையுடன் கூறுகிறார். 

பாலோட் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி த்ரூவ், `` தேவேந்திரக்குமாருக்கு உதவிசெய்ய எங்களிடம் எந்த நிதியும் இல்லை. எனினும் `அரசு விரைவில் உதவி செய்ய வேண்டும்' எனக் கடிதம் எழுதியுள்ளோம் '' எனக் கைவிரித்துவிட்டார்.

தேவந்திரக்குமாரோ, ``எப்போதோ அளிக்கவுள்ள பரிசுப்பணத்தை இப்போது அளித்தால் மேற்படிக்கு உதவியாக இருக்கும்'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.

Pic Courtesy : Hindustan Times