FA பக்கங்கள்
Published:Updated:

பலூனில் காற்றுப் பாடம் கற்கலாம்!

பலூனில் காற்றுப் பாடம் கற்கலாம்!

சார்லஸ் என்னும் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  அறிவியல் அறிஞர், இயற்பியல் துறையில் பணியாற்றியவர். வெப்பநிலைக்கும் கன அளவுக்கும் இடைப்பட்ட தொடர்பைக் கண்டறிந்தவர். வெப்பப்படுத்தப்படும்போது, அனைத்து வாயுக்களும் ஒரே அளவு விரிவடையும் என அறிவித்தவர். ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்ததன் மூலம் புகழ்பெற்றவர். திரவ மானியைக் கண்டுபிடித்தவரும் இவரே.

'காற்றின் அழுத்தம் வெப்பத்தினால் அதிகரிப்பதால்,  கன அளவு அதிகரிக்கிறது’ என்பதை சார்லஸ் கண்டுபிடித்ததால், 'சார்லஸ் விதி’ என அறிவியலில் வழங்கப்படுகிறது. இதனை, எளிய சோதனை மூலம் மாணவர்களைக்கொண்டே செய்தோம்.

ஒரு மாணவர், ஓமத் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தார். இன்னொருவர் பலூன், மற்றொரு மாணவர், விளக்கும் தீப்பெட்டியும் கொண்டுவந்தார்.

பலூனில் காற்றுப் பாடம் கற்கலாம்!

பலூனைப் பாட்டிலின் வாயில் பொருத்தி, விளக்கை ஏற்றி, பாட்டிலின் அடியில் காண்பித்து சூடேற்றினோம். பாட்டிலில் உள்ள காற்று வெப்பமடைந்து, அதன் கன அளவு அதிகரிப்பதால், பலூனின் பருமனும் அதிகரித்து, பலூன் விரிவடைவதை மாணவர்கள் கண்டு வியந்தார்கள்.

பலூன் விரிவடைவதற்கான காரணத்தைக் கேட்டு, சார்லஸ் விதியை மாணவர்கள் வாயிலாக வரவழைக்கலாம். இப்படிச் செய்துபார்த்துக் கற்றல் மூலம், மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். அறிவியல் உண்மைகளும் புரியும்.

இதை, ஆசிரியர் வழிகாட்டலுடன் அவர் முன்னிலையில் மட்டுமே செய்ய வேண்டும். ஆடைகளின் மீது கவனம் இருக்கட்டும்.

 - இரத்தின புகழேந்தி
அரசு உயர்நிலைப் பள்ளி
மன்னம்பாடி.