Published:Updated:

"இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..!" - வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

"இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..!" - வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்
"இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..!" - வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

"இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..!" - வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொண்டால் வெற்றி பெற முடியும் என்பது குறித்து இளம்பகவத் ஐ.ஏ.எஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் `பொன்மாலை பொழுது' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு `சிதையா நெஞ்சுகொள்' என்ற தலைப்பில் பேசினார். 

``போட்டித்தேர்வு எழுதுபவர்கள், நூலகத்துக்குச் செல்லாமல் தேர்வில் வெற்றியைச் சுவைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கும் நூலகத்துக்குமான உறவு பிரிக்க முடியாதது. நானும் நூலகத்திலேயே முழு நேரத்தையும் செலவழித்திருக்கிறேன். பட்டுக்கோட்டையில் ஒரு கிளை நூலகத்தில் பொன்முடி என்கிற நூலகர் குடிமைப்பணிகளுக்கு என நூல்களைச் சேர்த்துவைத்து எங்களை அழைத்து படிக்கவைத்தார். நூலக நேரம் 11.30 மணி வரை என்றாலும், எங்களுக்காக நூலக நேரத்தை நீட்டித்துக்கொண்டிருந்தார். அந்த நூலகத்தில் படித்த 39 பேர், பல்வேறு பணியில் இருக்கிறார்கள் என்பது அந்த நூலகத்துக்குக் கிடைத்த பெருமை. நூலகங்கள், அறிவை வளர்க்கும் நாற்றங்காலாக விளங்குகின்றன.

பொதுவாக போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஏகப்பட்ட ஆலோசனைகள் கிடைக்கின்றன. சில நேரங்களில் தேர்வுகளின் முடிவுகள் சாதகமாக அமைவதில்லை. இது மனச்சோர்வை ஏற்படுத்தும். இதிலிருந்து வெளியே வர, `சிதையா நெஞ்சுக்கொள்' என்ற பாரதியாரின் ஆத்திசூடியின் வரிகளை நினைவில்கொள்ள வேண்டும். 

வெற்றிக்கான சில முக்கியமான கூறுகளை நீங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்கு மூன்று பண்புகள் அவசியம். அவற்றை வளர்த்துக்கொண்டால் வெற்றி தானே நம்மை கைக்கொள்ளும். ஒன்று, இலக்கு நிர்ணயித்தல் (Goal Setting). இரண்டாவது, தீர்மானமாக இருத்தல் (Determination). மூன்றாவது விடாமுயற்சி (Perseverance ).  இதுதான் என் வெற்றிக்கான ஃபார்முலா. 

எனக்கு இந்த வேலை வேண்டும். இதற்கு இன்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்து தொடர் முயற்சியில் இறங்க வேண்டும். இவ்வாறு இலக்குகளை நிர்ணயிக்கும்போது, இலக்குகள் (Dream Big. Aim High) உயர்வானதாக இருக்க வேண்டும். நீங்கள் பெரிய அளவில் முயற்சி செய்யும்போது நீங்கள் நிச்சயம் குறிப்பிட்ட அளவு உயரத்தை அடைய முடியும். ஆகவே, எப்போதும் இலக்குகளைப் பெரியதாக நிர்ணயிங்கள். குறுகிய நோக்கத்துடன் இல்லாமல் பயிற்சிக்காகப் பல தேர்வுகளையும் எழுதிடுங்கள்.

விவேகானந்தர், எழுமின், விழுமின் குறிக்கோள் அடையும் வரை உழைமீன் என்று சொல்லியிருக்கிறார். இதை மனதில் வைத்து, உங்களுடைய குறிக்கோளை நிர்ணயித்துச் செயல்பட வேண்டும். சிறிய பதவிக்கான தேர்வுகள் என்றாலும் தவறாமல் எழுதுங்கள். இவ்வாறு எழுதுவது உங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வதற்குப் பயிற்சியாகவும், அனுபவமாகவும் அமையும்.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டு எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இருந்தால், அது வெறும் விருப்பமாகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும். இதை மாற்றி அமைக்க மனத்திட்பமும், மன உறுதியும் வேண்டும். இதற்கு மற்றவர்களின் அனுபவத்தைப் படிக்க வேண்டும். நமக்குக் கீழே கோடி பேர் என நினைத்துக்கொள்ளுங்கள். வினைத்திட்பம் என்பது மனத்திட்பம். இது இருந்தால் எல்லாம் வரும். `எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் எப்படி ஐ.ஏ.எஸ். ஆவது?' என்று நினைத்து நின்றுவிடாதீர்கள். ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேடிக் கற்றுக்கொள்ளுங்கள். திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். வெற்றியாளர்களின் அனுபவத்தைக் கேளுங்கள். அவர்களிடம் பேசியபோதுதான் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

கிராமப்புற மாணவர்கள், நாளிதழைப் படிக்கவே நிறைய தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. இருந்தாலும், இந்தச் சிக்கல்களிலிருந்து வெளியே வர வேண்டும். மளிகைக்கடையில் பொட்டலங்களாகக் கட்டப்படும் செய்தித்தாள்களை வாங்கிப் படித்திருக்கிறோம். இதையெல்லாம் கேலி செய்பவர்கள், வெற்றி பெற்ற பிறகு பாராட்டுவார்கள். ஆகையால், நீங்கள் மனத்திட்பத்துடன் இருக்க வேண்டும். வேடிக்கை மனிதர்களை எல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் வெற்றி பெற்றவுடன் கைதட்டுவார்கள். 

நான் அப்பாவின் வாரிசு வேலைவாய்ப்புக்காக, வருவாய்த் துறைக்குச் சென்றபோது, `அருகில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை கிடைத்தால் சிறப்பாக இருக்குமே!' என நினைத்திருக்கிறேன். அதைப்போலவே லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் சென்றபோது `வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்குமே!' என நினைத்திருக்கிறேன்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அலுவலராக வேலை கிடைத்தது. கிராமத்தில் இருக்கும் குடிநீர்ப் பிரச்னைக்காக அவ்வவ்போது கிராமசபைக் கூட்டங்களில் பங்குப்பெற்றபோது `வட்டார வளர்ச்சித் துறை ஒழுங்காகச் செயல்பட்டால் குடிநீர்ப் பிரச்னை இல்லாமல் இருக்குமே!' என நினைத்திருக்கிறேன். குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று ஊராட்சிப் பணிக்காகத் துணை இயக்குநர் பணி கிடைத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மேற்பார்வையாளாராகப் பணி கிடைத்தது.

ஆகவே, நான் எதுவாக நினைக்கிறாமோ அதுவாக ஆகிறோம். என்ன நினைக்கிறாமோ அதற்கான எல்லா செயல்களையும் செய்ய வேண்டும்" என்று சொல்லி ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டினார் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்

இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி இளம்பகவத், தஞ்சாவூரில் சோழன்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர்.  சொந்த கிராமத்தில் ஆரம்பக் கல்வியும், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். கிராம நிர்வாக அலுவலராக இருந்த இவரின் தந்தை மரணமடைய, வாரிசு வேலைவேண்டி போராடினார். கிடைக்கவில்லை. போட்டித்தேர்வு எழுதியவர், குரூப்-4-யிலிருந்து ஒவ்வொரு பணியாகப் பெற்றவர், 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்று மத்திய அரசுப் பணியான ஐ.ஆர்.எஸ் வேலையைப் பெற்றிருக்கிறார். மீண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதி, 117-வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ். பணியைப் பெற்றிருக்கிறார். தற்போது திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார். இவர் சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு, சிறந்த ஆலோசகராக இருந்துவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு