Published:Updated:

உணவுத் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட கல்வி வாய்ப்புகள்!

இந்தியாவில், உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு வகையான படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

உணவு
உணவு ( pixabay )

உணவு தயாரிப்பு நிறுவனங்களில், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வேதியியல், உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் நுண்ணுயிரியல் போன்ற அறிவியல் முறைகளைப் பயன்படுத்தும் உணவுத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் நிறம், வாசனை, இயற்கை நுண்ணுயிர்கள் மற்றும் நச்சுப் பொருள்களிலிருந்து மக்களின் உடல்நலத்துக்கு ஏற்றவாறு, பாதுகாப்பான முறையில் உணவு உற்பத்தி செய்ய, உணவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில், இந்தியாவில் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு வகையான படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

உணவு
உணவு
pixabay

படிப்புகள்:

இந்தியாவில், உணவு அறிவியல் (Food Science), உணவுத் தொழில்நுட்பம் (Food Technology), உணவு மற்றும் சத்துணவு (Food and Nutrition), உணவு பதனிடுதல் (Food Preservation), உணவுப் பொறியியல் (Food Engineering) எனும் ஐந்து பிரிவுகளில் மூன்று மற்றும் நான்காண்டு கால அளவிலான இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc. / B.E or B.Tech), இரண்டாண்டு கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc / M.Tech) உள்ளன.

முதுநிலை பட்டப்படிப்புகளில், உணவு அறிவியல் படிப்பில் தானிய வகைகள், பால் பொருள்கள், மதுபானங்கள், சர்க்கரை, அடுமனை மற்றும் தின்பண்டப் பொருள்கள் (Bakery and Confectionery Items), பழங்கள் மற்றும் காய்கறிகள், எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் செய்முறைகள், நொதித்தல் (Fermentation) போன்ற சிறப்புப் பாடங்களுடனான படிப்புகளும், உணவுத் தொழில்நுட்பத்தில், உணவுத் தொழில்நுட்ப மேலாண்மை, உணவு செய்முறைப் பொறியியல் மற்றும் மேலாண்மை (Food Process Engineering and Management), உணவு ஆலை இயக்கங்கள் மற்றும் மேலாண்மை (Food Plant Operations and Management), உணவு பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மை (Food Safety and Quality Management), உணவு வழங்கல் தொடர் மேலாண்மை (Food Supply Chain Management) போன்ற பல சிறப்புப் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

உணவு அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளும், உணவுத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டப்படிப்பும் ஆய்வுப் படிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவை தவிர, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்றாண்டு கால அளவிலான உணவு பகுப்பாய்வு மற்றும் தரக் காப்புறுதிகள் (Food Analysis and Quality Assurance), உணவு அறிவியல் தொழில்நுட்பம் (Food Science Technology), உணவு அறிவியல், பதனிடுதல் மற்றும் மேலாண்மை (Food Science, Preservation and Management) போன்ற பட்டயப்படிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

உணவு
உணவு
pixabay

கல்வித் தகுதிகள்:

உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு, +2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவு படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலான படிப்புகளுக்கும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

இளநிலைப் பட்டப்படிப்பு:

மூன்றாண்டு கால அளவிலான உணவு அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்புக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் உயிரியல் (PCB) அல்லது மனையியல், உணவு மற்றும் சத்துணவுகள் போன்ற தொழில் பாடப் பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால உணவுத் தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்புக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் (PCMB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். சில மாநிலங்களில், இந்த மதிப்பெண்களில் அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

முதுநிலைப் பட்டப்படிப்பு:

இரண்டாண்டுகால அளவிலான உணவு அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்புக்கு உணவு அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடப் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் (B.Sc) பெற்றிருக்க வேண்டும். உணவுத் தொழில்நுட்பம் (M.Tech) முதுநிலை பட்டப்படிப்புக்கு 60% மதிப்பெண்களுடன் உணவுப் பொறியியல் / தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது உணவு அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.

சில முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு வேளாண்மைப் பொறியியல் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech Agri) அல்லது வேளாண்மைப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc Agri) ஆகியவை மாணவர் சேர்க்கைக்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

education
education
pixabay

ஆய்வுப் படிப்புகள்:

உணவு அறிவியல் பாடத்தில், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு, உணவு அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உணவுத் தொழில்நுட்பம் பாடத்தில் முனைவர் பட்டப்படிப்புக்கு, உணவுப் பொறியியல் / தொழில்நுட்பம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.E/M.Tech) பெற்றிருக்க வேண்டும்.

பட்டயப்படிப்புகள்:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பட்டயப் படிப்புகளுக்கு, 10-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது. +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் (PCMB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றவர்கள் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையைப் பெறமுடியும்.

முதன்மைக் கல்லூரிகள்:

உணவுத் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில், கர்நாடகா மாநிலம், மைசூரிலுள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (Central Food Technological Research Institute), அரியானா மாநிலம் சோனாபட்டிலுள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பத் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (National Institute of Food Technology Entrepreneurship and Management), தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலுள்ள இந்தியப் பயிர்ப் பதனிடும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Crop Processing Technology), உத்தரப்பிரதேசம் நொய்டாவிலுள்ள அமிதி உணவுத் தொழில்நுட்ப நிறுவனம் (Amity Institute Of Food Technology), சில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institute of Technology) போன்றவை முதன்மைக் கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள சில பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு படிப்புகள் இடம்பெற்றுள்ளன.

education
education
pixabay

மாணவர் சேர்க்கை:

உணவு அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்புக்கு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. உணவுத் தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்புக்கு இந்திய அரசின் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் தேசியத் தொழில்நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் +2 மதிப்பெண்களுடன் இணை நுழைவுத்தேர்வு (முதன்மை) (JEE (Main) தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் +2 வகுப்பில் தொடர்புடைய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு சேர்க்கை நடைபெறுகிறது.

உணவு அறிவியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறுகின்றன. உணவு அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளுக்கு, முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அறிவியல் தொடர்புடைய பாடங்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) மற்றும் பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வில் (GATE) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகின்றன.

education
education
pixabay

வேலைவாய்ப்புகள்:

வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் இருக்கும் 500 மில்லியனுக்கும் அதிகமான நடுத்தரக் குடும்பத்தினருக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்திசெய்து வழங்குவதற்காக, பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் படித்தவர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகமாகிவருகிறது. இந்தத் தேவைகளைக் கருத்தில்கொண்டு உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் சேர்க்கையைப் பெறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்யலாம்.

எம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது! பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு