Published:Updated:

இளம் மாணவ விஞ்ஞானி: அறிவியல் படிப்புகளுக்கு உதவித்தொகை - தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கான வழிகாட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இளம் மாணவ விஞ்ஞானி - தேசியத் திறனாய்வுத் தேர்வு
இளம் மாணவ விஞ்ஞானி - தேசியத் திறனாய்வுத் தேர்வு

இளம் மாணவ விஞ்ஞானி ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் அறிவியல் படிப்புகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் தேசியத் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology) கீழ் பெங்களூரில் செயல்படும் இளம் மாணவ விஞ்ஞானி ஊக்குவிக்கும் திட்டம் (Kishore Vaigyanik Protsahan Yojana - KVYB) எனும் அமைப்பு வழியாக ஆய்வுப் பணியில் ஆர்வமுடைய இளம் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

ஆய்வுப்பணி ஆர்வம்

இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் மூன்றாண்டு கால இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (B.Sc / B.S / B.Stat / B.Math) அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகளில் (Int. M.Sc/Int. M.S) முதலாமாண்டு சேர்க்கை பெற விரும்பும் மற்றும் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு ஆய்வுப் பணிகளில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, மாதம் ரூ.5000 முதல் ரூ.7000 வரை உதவித்தொகை வழங்குவதற்காக, இளம் மாணவ விஞ்ஞானி ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தகுதிகள்

இந்தத் திறனாய்வுத் தேர்வு SA, SX, SB எனும் மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.
இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள்
இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள்

SA நிலை

கொரோனா நோய்த்தொற்றுச் சூழலில், ஒரு முறை அளவீட்டின்படி, 10-ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்து 2021-2022 ஆம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு சேர்க்கை பெற்றிருப்பவர்கள் இந்நிலைக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இளம் மாணவ விஞ்ஞானி ஊக்குவிக்கும் திட்டத்திற்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பெற்றவுடன், 11-ம் வகுப்பு படிக்கும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், 10+2 தேர்வில் அறிவியல் பாடங்களில் பொதுப்பிரிவினர் 60%, எஸ்சி, எஸ்டி., மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினர் 50% எனும் மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று, 2023-2024 ஆம் கல்வியாண்டில் இளநிலைப் பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களில் (B.Sc/B.S/B.Stat/B.Math) அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களில் (Int. M.Sc,/Int. M.S) சேர்க்கை பெறும் போது உதவித்தொகையினைப் பெற முடியும்.

இத்திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இடைப்பட்ட ஓர் ஆண்டு காலத்தில், தேசிய அறிவியல் முகாமிற்கு அழைக்கப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான பயணக்கட்டணம், தங்கும் மற்றும் உணவு வசதிகளை இளம் மாணவ விஞ்ஞானி ஊக்குவிக்கும் திட்ட அமைப்பே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SX நிலை

2021-2022 ஆம் கல்வியாண்டில் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் (Mathematics) மற்றும் அறிவியல் (Science) பாடங்களைத் தேர்வு செய்து, 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகளில் மேற்காணும் அறிவியல் படிப்புகளில் சேர்க்கை பெறுபவராக இருக்கும் மாணவர்கள் இந்நிலைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இத்திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், 10+2 தேர்வில் அறிவியல் பாடங்களில் பொதுப்பிரிவினர் 60%, எஸ்சி, எஸ்டி., மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினர் 50% எனும் மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று, 2023-2024 ஆம் கல்வியாண்டில் இளநிலைப் பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களில் (B.Sc / B.S / B.Stat / B.Math) அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களில் (Int. M.Sc, / Int. M.S) சேர்க்கை பெறும் போது உதவித்தொகையினைப் பெற முடியும்.

பட்டப்படிப்புகள்
பட்டப்படிப்புகள்

SB நிலை

கொரோனா நோய்த்தொற்றுச் சூழலில், ஒரு முறை அளவீட்டின்படி, 12 ஆம் வகுப்பு படிப்பை நிறைவு செய்து 2021-2022 ஆம் கல்வியாண்டில் இளநிலைப் பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களில் (B.Sc / B.S / B.Stat / B.Math) அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களில் (Int. M.Sc, / Int. M.S) முதலாமாண்டுச் சேர்க்கைக்குத் தகுதியுடையவர்கள் இந்நிலைக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இளம் மாணவ விஞ்ஞானி ஊக்குவிக்கும் திட்டத்திற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பெற்றவுடன், அறிவியல் பட்டப்படிப்பில் முதலாமாண்டு படிக்கும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், முதலாமாண்டுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் பொதுப்பிரிவினர் 60%, எஸ்சி, எஸ்டி., மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினர் 50% எனும் மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருந்தால் உதவித்தொகையினைப் பெற முடியும்.

பொறியியல் கல்லூரிகளில் பி.இ/பி.டெக் சேர்க்கை... ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு முழு வழிகாட்டல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்ணப்பம்

இந்தத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.kvpy.iisc.ernet.in/ எனும் இணைய முகவரிக்குச் சென்று, இணைய வழியில் தங்களுக்கு ஏற்ற நிலையினைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.1250/, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ஆகியோர் உரிய சான்றிதழைச் சம்ர்ப்பித்து, ரூ.625/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25-08-2021.

திறனாய்வுத் தேர்வுகள்

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை (Admit Card) அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோயில், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவில் குறிப்பிடத்தக்க 135 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 7-11-2021 அன்று நடைபெறவிருக்கும் இத்திறனாய்வுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் நடத்தப்பெறும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அறிவியல் படிப்பு
அறிவியல் படிப்பு

ஊக்கத்தொகை

இத்திறனாய்வுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்குக் கல்லூரிகளில் அறிவியல் பாடங்களில் இளநிலைப் படிப்பு (B.Sc /B.S / B.Stat / B.Math) மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு (M.Sc / M.S) படிக்கும் முதல் மூன்று வருட காலத்திற்கு மாதந்தோறும் ரூ.5000/- உதவித்தொகை அளிக்கப்படும். இதுபோல், ஆண்டுதோறும் எதிர்பாராத நிகழ்ச்சிச் செலவுகளாக (Annual Contingency Grant) ரூ.20000/- வரை வழங்கப்படும். அதன் பிறகு, இதன் தொடர்ச்சியாக முதுநிலைப் படிப்பு (M.Sc / M.S / M.Stat / M.Math) படிக்கும் இரண்டு வருட காலத்திற்கும், ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு (M.Sc / M.S) படிக்கும் காலத்தில் நான்காம், ஐந்தாம் ஆண்டுகளுக்கு ரூ 7000/- உதவித்தொகையாக அளிக்கப்படும். இதுபோல் ஆண்டுதோறும் எதிர்பாராத நிகழ்ச்சிச் செலவுகளாக (Annual Contingency Grant) ரூ 28 ஆயிரம் வரை வழங்கப்படும்.

கணித அறிவியல் படிப்புக்குச் சென்னைக் கணித நிறுவனத்தில் விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

இந்த ஊக்கத்தொகையினை ஆண்டுதோறும் தொடர்ச்சியாகப் பெற்றிடக் கல்லூரித் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பிரிவினர் 60%, எஸ்சி, எஸ்டி., மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினர் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்று, ஊக்கத்தொகை பெறுவதைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஊக்கத்தொகை பெறும் மாணவர்களுக்கு பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஏழு இடங்களில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Indian Institute for Science Education and Research - IISER) ஒரு வார கால அளவிலான ஆய்வுப்பணிகள் குறித்த கோடைக்காலப் பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், இவர்களுக்குத் தனி அடையாள அட்டை ஒன்றும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையினைக் கொண்டு இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தேசிய ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆய்வகங்கள் (Laboratory) மற்றும் நூலகங்களைப் (Library) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அறிவியல் பட்டப்படிப்பு
அறிவியல் பட்டப்படிப்பு

கூடுதல் தகவல்கள்

இத்திறனாய்வுத் தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு இவ்வமைப்பின் http://www.kvpy.iisc.ernet.in/ எனும் முகவரியிலான இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது “The Convener, Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) Indian Institute of Science, Bengaluru - 560 012” எனும் முகவரிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது 080 - 22932975, 080 - 22932976, 080 - 23601008 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டோ பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு