Published:Updated:

மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு விரிவான வழிகாட்டல்!

நீட் தேர்வு
நீட் தேர்வு

12-9-2021 அன்று மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை, தேர்வு நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக நீட் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

6-8-2021
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

இந்தியாவிலுள்ள எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவத்திற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளிலும் (BAMS/BSMS/BUMS/BHMS) 2021-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 'தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (National Eligibility Cum Entrance Test (UG) – 2021)' அறிவிப்பினைத் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டிருக்கிறது.

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு

  • இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency), இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (National Eligibility Cum Entrance Test (UG) – 2021) நடத்துகிறது.

  • இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றிருக்கும் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட (BAMS/BSMS/BUMS/BHMS) இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிட வேண்டும். இதே போன்று, வெளிநாடுகளில் சென்று எம்பிபிஎஸ் (MBBS) படிக்க விரும்புபவர்களும் இத்தகுதித் தேர்வினை எழுதித் தகுதி பெற்றிட வேண்டும்.

  • அகில இந்திய அளவிலான 15% மருத்துவ ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் / மத்தியப் பல்கலைக்கழகங்கள் / தொழிலாளர் காப்பீட்டு மருத்துவக் கல்லூரி, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் இத்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். பிற மாநிலங்கள் / பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் எம்பிபிஎஸ் உள்ளிட்ட அனைத்து இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கும் அந்தந்த மாநில / பல்கலைக்கழக / நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டு, இத்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும்.

neet exam
neet exam
  • மத்திய / மாநில அரசுகளின் பிற படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்குத் தேவையெனில், இந்தத் தகுதித்தேர்வு மதிப்பெண்களை விதிமுறைகளின்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  • கலந்தாய்வின் போது, தேவையான தகுதிகள், சுய உறுதிமொழி மற்றும் தேவையான ஆவணங்களை உரிய அதிகாரிகள் மற்றும் / அல்லது மருத்துவம் / பல் மருத்துவம் / ஆயுர்வேதா / சித்தா / யுனானி / ஹோமியோபதி கல்லூரிகள் சரிபார்த்து மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் காலத்தில் பதிவேற்றம் செய்த தகவல்கள் / ஆவணங்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மைக்கு தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

  • தேசியத் தேர்வு முகமை விண்ணப்பங்களைப் பெறுதல் நுழைவுத்தேர்வு நடத்துதல், முடிவுகளை வெளியிடல், அகில இந்தியத் தரப்பட்டியலை இந்திய அரசின் உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உடல்நலச் சேவைகளுக்கான பொது இயக்குநரகத்துக்கு (Directorate General of Health Services) வழங்கும் பணியினை மட்டும் செய்கிறது.

கல்வி மற்றும் வயதுத் தகுதி

நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவக்கல்வி சேர்க்கையின் போது 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது 31-12-2021 அன்று 17 வயது நிறைவடைவதாக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். அதாவது, 31-12-2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும். ஓபிசி / எஸ்சி / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலம் பாடத்தையும் எடுத்துப் படித்திருக்க வேண்டும். (மேலும் தகுதியுடைய சில படிப்புகள் குறித்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்) இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பப் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் பாடங்களில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டில் மேற்காணும் +2 அல்லது அதற்கு இணையான தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
File Photo: Vikatan / T. Vijay

விண்ணப்பம்

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://neet.nta.nic.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இத்தளத்திலிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இணைய வழியிலான விண்ணப்பத்தில் நான்கு படிநிலைகள் (steps) இருக்கின்றன. முதல் நிலையில் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இரண்டாம் நிலையில், விண்ணப்பத்தை நிரப்பி, கணினி மூலம் உருவாக்கப்படும் விண்ணப்ப எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் நிலையில், விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு (Passport) அளவிலான படம், அஞ்சல் அட்டை (Post Card) அளவிலான படம், விண்ணப்பதாரரின் கையொப்பம், இடதுகைப் பெருவிரல் ரேகை (Left Thumb Impression) மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ் (X Standard Passing Certificate) ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். நான்காம் நிலையில், கொடுக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு வழிமுறையைப் பின்பற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திட வேண்டும்.

பொது – ரூ.1500/- ஓபிசி மற்றும் பொது - ஈடபிள்யூஎஸ் பிரிவினர் ரூ.1400/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ.800/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 6-8-2021.
விண்ணப்பக் கட்டணம் செலுத்திடக் கடைசி நாள்: 7-8-2021.
விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் 8-8-2021 முதல் 12-8-2021 வரை செய்து கொள்ள முடியும்.

வழிகாட்டல் நெறிமுறைகள்

விண்ணப்பம் நிரப்புவதற்கான வழிமுறைகள், தேர்வு அறை நெறிமுறைகள், சிறப்புப் பட்டியல் மற்றும் தகுதிகள், கலந்தாய்வு நடைமுறைகள், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கான தகவல்கள், தடுக்கப்பட்டவைகள் மற்றும் உடைக் கட்டுப்பாடுகள், விண்ணப்பம் நிரப்புவதற்கான பொதுச்சேவை மையங்கள் மற்றும் அதற்கான கட்டணங்கள், பாடத்திட்டம், விண்ணப்பத்துடன் இணைப்பதற்கான படிவங்கள் என பல்வேறு செய்திகள் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமிஷ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் இத்தேர்வை எழுத முடியும். அனைத்துத் தேர்வு மையங்களிலும் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழிகளில் இத்தேர்வினை எழுத முடியும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் பகுதியிலுள்ள மையங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இத்தேர்வை எழுத முடியும்.

நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம்

மத்திய அரசின் கல்வி அமைப்புகளான NCERT, CBSE மற்றும் பல்வேறு மாநிலங்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் எனும் நான்கு பாடங்களை முதன்மையாகக் கொண்டு நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நுழைவுத்தேர்வு வினாத்தாள்

மூன்று மணி நேரக் கால அளவினைக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாளில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திலும் பிரிவு A – 35 கேள்விகள், பிரிவு B – 15 கேள்விகள் என்று நான்கு பாடங்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் A பிரிவிலுள்ள 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். B பிரிவிலுள்ள 15 கேள்விகளில் ஏதாவது 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். இதன் மூலம் மொத்தமுள்ள 200 கேள்விகளில் 180 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள் தவறாக விடை அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் குறைக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 18 நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 200 நகரங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே, குவைத்தில் ஒரு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

12-9-2021 அன்று மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை, தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக https://neet.nta.nic.in/ எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் தகவல்கள்

இந்த நுழைவுத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://neet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம் அல்லது neet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் அல்லது 011-40759000 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

அடுத்த கட்டுரைக்கு