Published:Updated:

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் வழங்கும் ஐந்து ஆண்டு BS–MS பட்டப்படிப்புகள்!

Indian Institute of Science Education and Research, Pune
Indian Institute of Science Education and Research, Pune

இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10, +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

சமூகப் பிரச்னைகளுக்கு அறிவியல் ஆய்வின் மூலம் நிலையான தீர்வுகளைக் கண்டறிந்து, அதனைச் செயல்படுத்தி, இந்திய நாட்டை வளமிக்க நாடாக மாற்றும் நோக்கத்தில் திறன் மிக்க மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை ஆய்வுத் திறனுடையவர்களாக உருவாக்கம் செய்வதற்கு, அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் பெர்காம்பூர் (Berhampur), போபால் (Bhopal), கொல்கத்தா (Kolkata), மொஹாலி (Mohali), புனே (Pune), திருவனந்தபுரம் (Tiruvananthapuram) மற்றும் திருப்பதி (Tirupathi) ஆகிய ஏழு இடங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (Indian Institute of Science Education and Research, IISER) நிறுவப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்கள், இடைநிலை அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுகளை ஒருங்கிணைத்து, +2 முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான BS–MS எனும் இரட்டைப் பட்டப்படிப்பினை (Dual Degree Programme) வழங்கி வருகிறது.
படிப்பு
படிப்பு

படிப்புகளும் இடங்களும்

  1. பெர்காம்பூரிலுள்ள நிறுவனத்தில் உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல் எனும் நான்கு பிரிவுகளில் மொத்தம் 256 இடங்கள்;

  2. போபாலிலுள்ள நிறுவனத்தில் உயிரியல் அறிவியல், வேதியியல், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், கணிதம், இயற்பியல் எனும் ஐந்து பிரிவுகளில் மொத்தம் 252 இடங்கள்;

  3. கொல்கத்தாவிலுள்ள நிறுவனத்தில் உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், புவியியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல் எனும் ஐந்து பிரிவுகளில் மொத்தம் 240 இடங்கள்;

  4. மொஹாலியிலுள்ள நிறுவனத்தில் உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல் எனும் நான்கு பிரிவுகளில் 244 இடங்கள்;

  5. புனேயிலுள்ள நிறுவனத்தில் உயிரியல், வேதியியல், புவி மற்றும் பருவநிலை அறிவியல், கணிதம், இயற்பியல் எனும் ஐந்து பிரிவுகளில் 288 இடங்கள்;

  6. திருவனந்தபுரத்திலுள்ள நிறுவனத்தில் உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த இடைநிலையில் (Integrated Interdisciplinary (i2)) உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், தரவு அறிவியல் என்ற ஐந்து பிரிவுகளில் மொத்தம் 280 இடங்கள்;

  7. திருப்பதியிலுள்ள நிறுவனத்தில் அறிவியல் பிரிவில் 181 இடங்கள் என்று ஏழு நிறுவனங்களிலும் சேர்த்து BS–MS எனும் இரட்டைப் பட்டப்படிப்பில் மொத்தம் 1741 இடங்கள் இருக்கின்றன.

இவை தவிர, போபாலிலுள்ள நிறுவனத்தில் BS எனும் இளநிலைப் பட்டப்படிப்பாக, வேதியியல் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் பொறியியல், மின்பொறியியல் மற்றும் கணினி அறிவியல் எனும் மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 73 இடங்களும், பொருளாதார அறிவியலில் 42 இடங்களும் என்று மொத்தம் 115 இருக்கின்றன.

சேர்க்கைத் தகுதி

இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10, +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 60%, எஸ்சி பிரிவினர் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மேலும், கீழ்க்காணும் மூன்று சேர்க்கைத் தகுதிகளில் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.

  1. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) எனும் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ் 2021 – 2022 கல்வியாண்டிற்குத் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

  2. 2021 – 2022 கல்வியாண்டிற்கான JEE (Advanced) தேர்வில் பொதுத் தகுதிப் பட்டியலில் (Common Merit List) 15000 நிலைக்குள் (Rank) இருக்க வேண்டும்.

  3. மத்திய அல்லது மாநிலப் பாடத்திட்டத்தில் (State and Central Boards (SCB)) 2020 அல்லது 2021 ஆம் ஆண்டில் அறிவியல் பாடத்திட்டத்தில் தகுதி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் நடத்தும் திறனாய்வுத் தேர்விலும் தகுதி பெற்றிட வேண்டும்.

Indian Institute of Science Education and Research, Mohali (IISER)
Indian Institute of Science Education and Research, Mohali (IISER)

விண்ணப்பம்

மேற்காணும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.iiseradmission.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேற்காணும் சேர்க்கைத் தகுதியில் முதல் தகுதியைப் (KVPY) பெற்றவர்கள் மற்றும் மூன்றாம் தகுதியைப் (SCB) பெற்றவர்கள் 31-8-2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் தகுதியைப் (JEE (Advanced)) பெற்றவர்கள் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு விண்ணப்பிக்கலாம். மேற்காணும் மூன்று தகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதிளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு தகுதிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ 1000/-, மற்ற பிரிவினர்கள் ரூ 2000/- என்று விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு விரிவான வழிகாட்டல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

IISER திறனாய்வுத் தேர்வு

மேற்காணும் சேர்க்கைத் தகுதிகளில் மூன்றாவது தகுதியைக் கொண்டு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் நடத்தும் 2021ஆம் ஆண்டுக்கான திறனாய்வுத் தேர்வில் (IISER Aptitude Test 2021) கலந்து கொண்டு, அதற்கான தகுதியைப் பெற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சேலம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர் என்று 11 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்கள் உட்பட இந்தியா முழுவதும் 148 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2021ஆம் ஆண்டுக்கான திறனாய்வுத் தேர்வு 17-9-2021 அன்று நடைபெற இருக்கிறது.

10, +2 பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பெறும் இத்திறனாய்வுத் தேர்வில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 15 கேள்விகள் வீதம் மொத்தம் 60 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். மூன்று மணி நேர (180 நிமிடங்கள்) அளவில் நடைபெறும் இத்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள் அளிக்கப்படும். விடையளிக்காமல் விடப்படும் கேள்விகளுக்கு மதிப்பெண்கள் எதுவும் இல்லை. தவறான விடைகளுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வுக்கான முடிவுகள் மேற்காணும் இணையதளத்திலேயே பின்னர் வெளியிடப்படும்.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

மாணவர் சேர்க்கை

இந்தப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், சேர்க்கைத் தகுதியில் முதல் மற்றும் இரண்டாம் தகுதியைப் பெற்றவர்களுக்கு 25 சதவிகித இடங்களும், மூன்றாம் தகுதியைப் பெற்றவர்களுக்கு 75 சதவிகித இடங்களும் எனக் கொண்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாணவர்கள் சேர்க்கைக்கான மூன்று தகுதி மதிப்பெண்களுடன் 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் சேர்க்கைக்கான கூடுதல் அளவுகோல்களாக எடுத்துக் கொள்ளப்படும்.

மூன்றாம் சேர்க்கைத் தகுதிக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் காலியிடங்கள் ஏற்படும் நிலையில், அவ்விடங்கள் முதல் மற்றும் இரண்டாம் சேர்க்கைத் தகுதியைப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஒவ்வொரு சேர்க்கைத் தகுதிக்கும் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தனித்தனியாக நடைபெறும். மாணவர் சேர்க்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்பு, அக்டோபர் மாதத்தில் இப்படிப்பிற்கான வகுப்புகள் தொடங்கும்.

கணித அறிவியல் படிப்புக்குச் சென்னைக் கணித நிறுவனத்தில் விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

கூடுதல் தகவல்கள்

விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள், திறனாய்வுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து மேலும்கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது “The Chairperson, Joint Admissions Committee 2021, Indian Institute of Science Education and Research Kolkata, Mohanpur, Nadia - 741 246, West Bengal” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது ask-jac2021@iiserkol.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பெறலாம்.

அலுவலக வேலைநாள்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 022 – 61306265 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெற முடியும்.
அடுத்த கட்டுரைக்கு