Published:Updated:

`என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்!’ -தாலிகட்டியதும் தான் படித்த பள்ளிக்கு மனைவியுடன் சென்ற மணமகன்!

கந்தர்வக்கோட்டை அருகே புதுமணத் தம்பதி தங்கள் திருமணம் முடிந்த கையோடு, அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் படிப்புக்காக வெண்பலகை வழங்கியதோடு, பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து ஆசிரியர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.

மாணவர்களுக்கு வெண்பலகை வழங்கிய தம்பதி
மாணவர்களுக்கு வெண்பலகை வழங்கிய தம்பதி ( வெங்கடேஷ்.ஆர் )

கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மரக்கன்று நடும் புதுமணத் தம்பதி
மரக்கன்று நடும் புதுமணத் தம்பதி
வெங்கடேஷ்.ஆர்

கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார். திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வருவதை ஆசிரியர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆசிரியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிரபு, தான் படிக்கும்போது நடந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, மாணவர்களின் படிப்புக்காக, வெண்பலகை ஒன்றை ஆசிரியர்களிடம் அன்பளிப்பாக மணமக்கள் இருவரும் சேர்ந்து கொடுத்தனர்.

தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்கு வந்ததன் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டுவிட்டுச் சென்றனர். மணமக்களின் இந்தச் செயலைக் கண்டு நெகிழ்ந்த ஆசிரியர்கள் மணமக்களை வாழ்த்தினர். இதுபற்றி பேசிய பிரபு,  ``பள்ளிக்கூடமும் ஒரு கோயில்தான். அதான், வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி கோயிலுக்கு வந்திட்டோம். நான் சிங்கப்பூரில் இருக்கும்போது, என்னோட தம்பி பள்ளிக்கூடத்துக்கு ஒரு வெண்பலகை தேவைப்படுகிறதா சொன்னாரு.

மாணவர்களுக்கு வெண் பலகை வழங்கிய தம்பதி
மாணவர்களுக்கு வெண் பலகை வழங்கிய தம்பதி
வெங்கடேஷ்.ஆர்

என்னால முடிஞ்ச உதவியைப் பள்ளிக்குச் செய்யணும்னு அடிக்கடி நினைப்பேன். என்னோட கல்யாணத்து அன்னைக்கு, வெண்பலகையை பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக வாங்கிக்கிட்டுப் போய் கொடுக்கணும்னு நெனச்சேன். அது நடந்திருச்சு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. தொடர்ந்து, இதேபோன்று, இந்தப்பள்ளிக்கூடத்துக்கு என்னால முயன்ற உதவிகளைச் செய்யணும்" என்றார்.