Published:Updated:

90,737 காலி இடங்கள்... தொடர்ந்து குறையும் மாணவர் சேர்க்கை! இன்ஜினீயரிங் ஆர்வம் குறைய என்ன காரணம்?!

வருண்.நா
சக்தி தமிழ்ச்செல்வன்
HARIF MOHAMED S

1,67,101 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதில் 76,364 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.

Anna University
Anna University

உயர் கல்வியைப் பொறுத்தவரை மருத்துவத்துக்கு அடுத்தபடியாக இன்ஜினீயரிங் படிப்புகளைத்தான் பலரும் ஆர்வமாகத் தேர்வு செய்வர். ஆனால், சமீபகாலமாக இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பல இடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. இந்த வருட கவுன்சலிங்கில் தமிழக பொறியியல் கல்லூரிகளிலுள்ள 1,67,101 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதில் 76,364 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. 90,737 இடங்கள் நிரப்பப்படாமலே இருந்தன. பல கல்லூரிகளில் பாதி காலி இடங்கள் இருந்தன.

இன்ஜீனியரிங் கவுன்சிலிங்
இன்ஜீனியரிங் கவுன்சிலிங்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

சில வருடங்களுக்கு முன்புவரை பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. நுழைவுத் தேர்வில் வாங்கும் மதிப்பெண்ணுடன் (100), 12-ம் வகுப்பில் கணிதம் (100), இயற்பியல் (50), வேதியியல் (50) ஆகிய பாடப்பிரிவுகளின் மதிப்பெண்ணையும் சேர்த்து மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு மாணவர்களின் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். நுழைவுத் தேர்வு ரத்தான பிறகு, 12–ம் வகுப்பு பாடத்தில் எடுக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் நடைபெறும். அதே காலகட்டத்தில் தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

2012-ம் ஆண்டு இன்ஜீனியரிங் கவுன்சலிங்கில் 593 கல்லூரிகள் பங்குபெற்றன. 2014-ம் ஆண்டில் 552 கல்லூரிகள் மட்டுமே கலந்துகொண்டன. இந்த வருடம் 2019-ல் வெறும் 479 கல்லூரிகள் மட்டுமே கலந்தாய்வில் பங்குபெற்றன. போதுமான அளவு மாணவர்கள் சேராததால் பல தனியார் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன.

இன்ஜீனியரிங் கல்லூரிகள்
இன்ஜீனியரிங் கல்லூரிகள்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில பிரிவு படிப்புகளுக்கு மவுசு அதிகமிருக்கும். சில பாடப்பிரிவுகளில் குறைவான மாணவர்களே சேர்வார்கள். எந்தப் பாடப்பிரிவில் அதிக மாணவர்கள் சேர்ந்தார்கள் என்ற எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகமே வௌியிடும்.

சமீப காலமாக கவுன்சலிங்கில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கிறது.

இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், "தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் நிறைய மாணவர்கள் பொறியியல் படித்து முடித்து வெளிவருகிறார்கள். அவர்களில் பலருக்கும் வேலை கிடைப்பதில்லை. ஆனால், உண்மையில் இன்ஜினீயரிங் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குத் திறமையாளர்கள் கிடைப்பதில்லை.

இதற்குக் காரணம் இங்குள்ள கல்லூரிகளும் பாடத்திட்டமும் மட்டும்தான். தேவைக்கு ஏற்பதான் இன்ஜினீயர்களை நாம் உருவாக்க வேண்டும். ஆனால், இங்குள்ள கல்லூரிகள் தேவைக்கு அதிகமான இன்ஜினீயர்களை உருவாக்குகிறது. அதுவும், உருவாகிற இன்ஜினீயர்களில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையுள்ளவர்கள் மிகக்குறைவே.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்த அளவு கல்லூரிகளே கவுன்சலிங்கில் பங்குபெற்றன. மொத்தமாக 479 கல்லூரிகள். அதில் நிறைய கல்லூரிகளில் பாதி இடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. இதை நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். காரணம் மாணவர்கள் போதிய தொழில்நுட்ப வசதியற்ற கல்லூரிகளில் படிக்க விரும்பவில்லை."

90,737 காலி இடங்கள்... தொடர்ந்து குறையும் மாணவர் சேர்க்கை! இன்ஜினீயரிங் ஆர்வம் குறைய என்ன காரணம்?!
லேப், டெக்னிக்கல் டிரெயினிங் வசதிகள் இல்லாத, நல்ல கோச்சிங் இல்லாத கல்லூரிகளில் இன்ஜினீயரிங் படிப்பதற்குப் பதில், வேறு படிப்பைத் தேர்வு செய்யலாம் என மாணவர்கள் முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஜெயப்பிரகாஷ் காந்தி

5 வருடங்களுக்கு முன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி நிறைய கல்லூரிகளில் மெக்கானிக்கல் பிரிவுக்கான இடங்களை அதிகமாக்கினார்கள். இந்த வருடம் மெக்கானிக்கல் படிப்பைக் குறைவான மாணவர்களே தேர்வு செய்தனர். ஐ.டி படிப்பை அதிகமாகத் தேர்வு செய்துள்ளனர். கல்லூரிகள் இப்படி விருப்பம்போல தங்கள் கல்லூரியில் சீட்டுகளை அதிகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

Engineering Courses
Engineering Courses
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

மேலும், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் இன்ஜீனியரிங் போன்ற படிப்புகளை 20 வருட அனுபவம் கொண்ட, NIRF-ல் நல்ல ரேங்க்கைப் பெற்ற கல்லூரிகள் மட்டுமே தொடங்க அனுமதிக்க வேண்டும். அதுதான் சிறப்பான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும். சமூகத்துக்கும் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் அதுவே நல்லது" என்றார்.