Published:Updated:

இல்லம் தேடி கல்வி - கற்றல் இடைவெளி குறைக்கவா, கணக்குக் காட்டவா?

இல்லம் தேடி கல்வித் திட்டம்

``யாரெல்லாம் இல்லம் தேடி கல்வி வகுப்புக்கு வரலைங்கற லிஸ்ட், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பப்படுது. இதனால என் பேத்திகள் ரெண்டு பேரையும் வகுப்பறையை விட்டு வெளியேத்தி, ரொம்ப நேரம் நிக்க வெச்சிட்டாங்க. இதுமாதிரி இன்னும் பல மாணவர்கள் தண்டிக்கப்பட்டுக்கிட்டு இருக்காங்க.''

இல்லம் தேடி கல்வி - கற்றல் இடைவெளி குறைக்கவா, கணக்குக் காட்டவா?

``யாரெல்லாம் இல்லம் தேடி கல்வி வகுப்புக்கு வரலைங்கற லிஸ்ட், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பப்படுது. இதனால என் பேத்திகள் ரெண்டு பேரையும் வகுப்பறையை விட்டு வெளியேத்தி, ரொம்ப நேரம் நிக்க வெச்சிட்டாங்க. இதுமாதிரி இன்னும் பல மாணவர்கள் தண்டிக்கப்பட்டுக்கிட்டு இருக்காங்க.''

Published:Updated:
இல்லம் தேடி கல்வித் திட்டம்

கொரோனா பொது முடக்கத்தின்போது, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. `இது கட்டாயம் இல்லை, மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பினால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என அரசு அறிவித்தது. ஆனால், தற்போது தனியார் பள்ளி மாணவர்களும் கூட, இந்த வகுப்புக்குக் கட்டாயம் வர வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்தான், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி மாணவர்கள் இல்லம் தேடி கல்வி வகுப்புக்குச் செல்லாத காரணத்தால் தண்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின்
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொரோனா பொது முடக்கத்தின்போது ஒன்றரை ஆண்டுகள் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனாலும், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகத் தங்களின் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தன. அரசுப் பள்ளி மாணவர் களுக்கு பெரும்பாலும் இந்த வாய்ப்பு கிடைக்காததால், படிப்பு பாதிக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்தான் கொரோனா பொது முடக்கக் காலத்தில் தடைப்பட்ட கல்வியைக் கற்பிக்க, தமிழக அரசால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் `இல்லம் தேடி கல்வி’ என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம், கொரோனாவால் கல்வியை இழந்து தவிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கானது. கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதில், வாரத்தில் ஆறு மணி நேரம், நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், தன்னார்வலர்கள் மூலமாக, குடியிருப்புப் பகுதிகளில் கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

கற்றல் இடைவெளியைக் குறைக்கப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டு வழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் என ஆறு மாதங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப் படும்; 34 லட்சம் அரசுப் பள்ளிக் குழந்தைகளில், 20 பேருக்கு தலா ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் 1.70 லட்சம் தன்னார்வலர்களையும், கூடவே தொண்டு நிறுவனங்களையும் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களை மையப்படுத்தி இத்திட்டம் உருவாக்கப்பட்டாலும், மையங்கள் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெற்று பயன் பெறலாம். ஆனால் அதே நேரம், இது கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் இதைப் பயன்படுத்தி பலனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

இந்நிலையில்தான் இல்லம் தேடி கல்வி வகுப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளி மாணவர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு, இல்லம் தேடி கல்வி வகுப்புக்கு செல்லவில்லை என்ற காரணத்தால் பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியிருப்பது, சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த வீரசேனன், ``என் பேத்திங்க ரெண்டு பேர், பட்டுக்கோட்டையில உள்ள ஒரு தனியார் பள்ளியில ஆறாம் வகுப்புப் படிச்சிக்கிட்டு இருக்காங்க. காலையில 7 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி பள்ளிக்கூடம் போனால், சாயந்தரம் 4.30 மணிக்கு மேலதான் வீடு வந்து சேருவாங்க. வீட்டுக்கு வந்ததும் டிரெஸ் மாத்தி ரிலாக்ஸாக ஒரு மணிநேரம் ஆயிடும். ஸ்கூல்ல கொடுத்த ஹோம் வொர்க்கையெல்லாம் முடிச்சாகணும். இதனால் சாயந்தரம் 5 மணியில இருந்து 7 மணி வரைக்கும் எங்க ஊர்ல நடக்குற இல்லம் தேடி கல்வி வகுப்புக்கு அவங்களால போக முடியலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா, யாரெல்லாம் இல்லம் தேடி கல்வி வகுப்புக்கு வரலைங்கற லிஸ்ட், பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பப்படுது. இதனால என் பேத்திகள் இரண்டு பேரையுமே வகுப்பறையை விட்டு வெளியேத்தி ரொம்ப நேரம் நிக்க வெச்சிட்டாங்க. அவங்க வீட்டுக்கு வந்து இதைச் சொல்லி அழுதாங்க. இதுமாதிரி இன்னும் பல மாணவர்கள் தண்டிக்கப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இது அராஜகமான போக்கு. மாணவர்களை வெளியில நிறுத்தி அவமானப்படுத்தக்கூடாதுனு விதிமுறையே இருக்கு.

வீரசேனன்
வீரசேனன்

மேலும், அரசுப் பள்ளியில படிக்குற மாணவர்களுக்கு மட்டும்தான் உயர் கல்வியிலயும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற கொள்கையை தமிழக அரசு கடைப் பிடிக்குது. தனியார் பள்ளிகள்ல படிக்குற மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு, சலுகை எல்லாம் இல்ல. இப்படியிருக்கும்போது, தமிழக அரசு நடத்தக்கூடிய இல்லம் தேடி கல்விக்கு தனியார் பள்ளி மாணவர்களும் வரணும்னு ஏன் கட்டாயப்படுத்தணும்? இது தவறான போக்கு. இல்லம் தேடி கல்வி வகுப்புகள் பெரும்பாலும் தரமானதாக இல்லை. அதுமட்டுமல்லாமல் நேரமும் விருப்பமும், தேவையும் இருந்தால்தானே அதுல கலந்துக்க முடியும்?’’ என ஆதங்கப்பட்டார்.

இவரது குற்றச்சாட்டு குறித்து பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வனிடம் பேசினோம். ``தனியார் பள்ளி மாணவர்களும் இந்தத் திட்டத்துல பயன் அடையுறது நல்ல விஷயம்தானே? ஆனாலும், கட்டாயப்படுத்தக் கூடாது. இல்லம் தேடி கல்வி வகுப்புல கலந்துக்காத மாணவர்களைத் தண்டிச்ச அந்தத் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கிட்ட விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேலயும் இதுல தவறு இருக்கானு விசாரிக்குறேன்’’ என்றார்.

தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நம்மிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பள்ளி ஆசிரியர் ஒருவர், ``மாணவர்களின் கல்வி எந்த விதத்துலயும் தடைப்பட்டு பாதிக்கக் கூடாதுங்கற நல்ல நோக்கத்துலதான் தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு பண்ணி இந்தத் திட்டத்தை செயல்படுத்து. முழுக்க முழுக்க அரசு பள்ளி மாணவர்களுக்காகத்தான் இந்தத் திட்டம். தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பப்பட்டால் இதுல பங்கு பெறலாம்னு தெளிவான வழிகாட்டல் இருக்கு. ஆனா, ஒரு சில கல்வி அதிகாரிகள் விவரம் அறியாமலும், ஆர்வக் கோளாறாலும், தங்களோட மேலதிகாரிகள்கிட்ட நல்ல பேரு வாங்கணும்ங்கற நோக்கத்துலயும் தங்களோட பகுதிகள்ல அதிக மாணவர்கள் பயன் அடைஞ்சிருக்காங்கனு கணக்குக் காட்ட ஆசைப்படுறாங்க. இதனாலதான் தனியார் பள்ளி மாணவர்களையும் இதுக்கு கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தம் கொடுக்குறாங்க. இது தேவையே இல்லை’’ எனத் தெரிவித்தார்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நோக்கம் கற்றல் இடைவெளி குறைவதா, கணக்குக் காட்டுவதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism