எப்பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உண்மையான பொருளை ஆராய்ந்து காண வேண்டும் என்பது வள்ளுவனின் கூற்று. தஞ்சை, பள்ளி மாணவியின் தற்கொலையில் நிகழும் அடுத்தடுத்த நகர்வுகளை ஆழமாக உற்றுநோக்கி ஆராய்ந்து அதன் மெய்ப்பொருளை காண்பது அவசியமாகும். ஒரு மெய்ப்பொருளை உள்நோக்கத்தோடு திரித்து நஞ்சாக்கும் நாசவேலையை நன்குணர்ந்து களைவதும் அவசியம். அறவழியில் அதைச் சமூகவெளியில் பறைசாற்றுவதை ஜனநாயகக் கடமையாகக் கொள்வதும் காலத்தின் தேவை.
மைக்கேல்பட்டி பள்ளியும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும்
1844-ம் ஆண்டு தஞ்சை தூய இருதய மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்று வரை 156 ஆண்டுகளாக சிறப்பான கல்விப் பணியை ஆற்றி வருகிறது. இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கட்டாயம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இச்சம்பவம் மதவாத சக்திகளால் அரசியலாக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தற்போது சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழகத்துக்கு நேரடியாக வந்தது. அதன் தலைவர் பிரியங்கா காணுங்கோ தலைமையிலான குழுவினர் 31.01.2022 அன்று பள்ளி, விடுதி, மாணவியின் குடும்பம், கல்வித்துறை, காவல்துறை, குழந்தை பாதுகாப்பு அலுவலர்களிடம் தங்களது விசாரணையை மேற்கொண்டு திரும்பியுள்ளனர். இந்த விசாரணை சட்டப்படி சரியா என்கிற கேள்வி எழுகிறது. பல்வேறு சட்ட விதிமீறல்களுக்கு நடுவே அரசியல் அழுத்தம் காரணமாகத் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இவ்விசாரணையை மேற்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் வலுக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தேசிய ஆணையம் என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக சட்டரீதியாகத் தலையீடு செய்கிற அதிகாரம் கொண்ட சட்டபூர்வ அமைப்பு. ஒரு சம்பவம் குறித்து தனக்கு வரப்பெறும் புகாரின் மீதோ, தானாக முன்வந்தோ விசாரிக்கும் அதிகாரமும் ஆணையத்துக்கு உண்டு. இந்த ஆணையம் எவ்வித பாரபட்சமும் இன்றி சாதி, மத, அரசியல் குறுக்கீடுகள் இன்றி இயங்கிடுவது அவசியம்.
தமிழகத்தில் குழந்தைகள் மீது பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நாட்டையே உலுக்குகிற சம்பவங்களும் கடந்த இரண்டாண்டுகளாக நடந்துள்ளன. இவற்றுள் சில சம்பவங்கள் பொதுமக்களின் பார்வைக்கு...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழகத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரங்கள்
1. சென்னையில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் நடந்த கொடூர பாலியல் அத்துமீறல்களில், குற்றம் சாட்டப்பட்ட இராஜகோபாலன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்.
2. கோவையில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

3. சென்னையில் மற்றொரு பள்ளியில் அதன் நிறுவனரான சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த சம்பவம்.
4. சென்னையில், திருமங்கலம் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து மனநலம் பாதித்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை.
5. திருச்சியில், 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
6. புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
7. விழுப்புரம், திண்டிவனம் அருகே 7 வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
குழந்தைகள் மீதான இக்கொடூர சம்பவங்கள் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்ன விசாரணையை நடத்தியது? இத்தகைய சம்பவங்களில் இந்தத் தேசிய ஆணையம் எந்த வகையான தலையீடுகளைச் செய்தது? என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது? மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் எல்லாம் உடனடியாக எந்தத் தலையீடும் செய்யாத ஆணையம், தற்போதைய தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலையில் அதீத அக்கறையும் வீரியமான செயல்பாடும் காட்டுவது நமக்குள் இயல்பான ஐயத்தை எழுப்புகிறது. ஏன் இந்தப் பாகுபாடு? எதனால் இந்த இரட்டை நிலைப்பாடு?
தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைச் சம்பவம் மதவாத சக்திகளால் கையில் எடுக்கப்பட்டு அவர்களது அரசியல் லாபத்துக்கான ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் என்னவோ, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இவ்வளவு விரைவாகத் தனது விசாரணையை நடத்த துடியாய் துடிக்கிறதோ!
மேற்சொன்ன எந்தக் கொடூர சம்பவங்களிலும் தமிழக மதவாத சக்திகள் வாய்திறக்க மறுத்தன அல்லது வசதி கருதி மெளனமாக ஒதுங்கிவிட்டன. இந்த மதவாத சக்திகளின் குரலோசை கேட்காததால் என்னவோ தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் எவ்வித அசைவுமின்றி வேடிக்கை பார்த்துவிட்டு கள்ளமௌனம் சாதித்ததோ?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சட்ட வரம்பை மீறி செயல்பட்ட தேசிய ஆணையம்!
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா காணுங்கோ தலைமையிலான குழுவினர் 31.01.2022 அன்று தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். தஞ்சை ரயில்வே பயிற்சி மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வழக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உட்பட பலரிடம் விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளிக்குச் சென்று நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களையும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள, உயிரிழந்த மாணவியின் சொந்த ஊருக்குச் சென்று மாணவியின் பெற்றோரையும் விசாரணை செய்துள்ளனர். இக்குழுவினரது விசாரணை முறைகள் அனைத்தும் சட்ட வரம்புக்குட்பட்டதாகத் தெரியவில்லை.
1. தலைவர் பதவி நியமனத்தில் சட்ட முரண்
கடந்த அக்டோபர் மாதம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து பிரியங்கா காணுங்கோ ஓய்வு பெற்றார். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரை நியமிக்க, இவ்வாணையச் சட்ட விதிகளின்படி, முறையாக விளம்பரம் செய்து, விண்ணப்பங்களைப் பெற்று குழந்தைகள் நலத்துறைக்கான அமைச்சர் தலைமையிலான தேர்வுக்குழு நேர்காணல் நடத்தி நியமனம் செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே பதவி வகித்து வரும் ஒருவரை நியமனம் செய்வதாக இருந்தாலும், இதே வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், ஆணையத்தின் தலைவரை நியமிக்க விண்ணப்பங்கள் கோரி எவ்வித விளம்பரமும் செய்யாமல், சட்டத்தையும் விதிகளையும் முறையாகப் பின்பற்றாமல், ஓய்வுபெற்ற உடனே மீண்டும் பிரியங்கா காணுங்கோவை ஒன்றிய அரசு, அவரை அதே தலைவர் பொறுப்பில் நியமனம் செய்தது. இந்த நியமனமே சட்டத்துக்கு முரணான ஒன்று. இவ்வாறு சட்டத்தைப் பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டவர்தான், தற்போது தஞ்சாவூரில் சட்டத்தைப் பின்பற்றாமல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

2. மாநில ஆணையம் விசாரணை செய்யும் வழக்கில் எல்லை மீறிய தலையீடு
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட மறுதினமே தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக அறிக்கை கேட்டு, அதைப் பெற்று அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஆணையம், தான் விசாரணை செய்ய விரும்பும் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏதேனும் விசாரணையைத் தொடங்கியுள்ளதா என்பதை முதலில் கேட்டறிய வேண்டும். ஏனெனில், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப் பிரிவு 13(2)-ன் படி மாநில ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ள ஒரு பிரச்னை தொடர்பாகத் தேசிய ஆணையம் விசாரணை நடத்த முடியாது. இந்நிலையில், தேசிய ஆணையம் தஞ்சாவூருக்கு வருகை புரிந்து விசாரணை நடத்தியிருப்பது, இச்சட்டப் பிரிவுக்கு முரணானதாகும்.
3. தேசிய ஆணைய விசாரணைக் குழு அமைப்பில் சட்ட முரண்
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்ட விதி எண் 21-ன் படி குறைந்தது ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்காமல் தனிநபராக தேசிய ஆணையத்தின் தலைவர் விசாரணை நடத்தியுள்ளது ஆணைய விதிகளை மீறியதாகும்.
4. தேசிய ஆணையம் நடத்தியது விசாரணையா, திறனாய்வுக் கூட்டமா?
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலர், சமூகநலத்துறை செயலர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், 13 (1) (j)-ன் படி விசாரணை நடத்த தேசிய ஆணையம் வருகிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி தெரிவிக்கவில்லை. அவ்வாறு குறிப்பிட்டு சொல்லும்போதுதான் அது `விசாரணை' என்ற விதிமுறைக்குள் வரும். இல்லை என்றால் அதைத் `திறனாய்வுக் கூட்டம்' என்றே கருத முடியும்.

5. சட்டப்படி விசாரணைக்கான அழைப்பாணை வழங்காமை
தஞ்சாவூர் நகரிலும், மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திலும் தேசிய ஆணையத்தால் நடைபெற்ற விசாரணைகளில் விசாரிக்கப்பட்டவர்கள் எவருக்கும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டப் பிரிவு 14(1)-ன் படி அழைப்பானை வழங்கப்படவில்லை. விசாரிக்கப்பட உள்ளவர்களுக்கு உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்படி விசாரணை நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றைத் தெரிவித்து போதிய அவகாசம் அளித்து அழைப்பாணை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டமாகும். ஆனால், இத்தகைய நடைமுறை எதுவும் பின்பற்றப்படாததால், ஆணையத்தின் `விசாரணை' என்று கருத முடியுமா? மாறாக பிற உண்மையறியும் குழுக்களைப் போல, புதுதில்லியில் இருந்து வந்த இருவர் நடத்திய களஆய்வு என்றே நாம் இதைக் கருத முடியும். இவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு சட்டரீதியாக என்ன அங்கீகாரம் வழங்க முடியும்?
மேற்கண்டவாறு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒருதலைப்பட்சமாக, தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாகத் தேசிய ஆணையமும் அதன் தலைவரும் செயல்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விடுத்திருக்கிற அச்சுறுத்தலாகவே கருத நேர்கிறது. இதுபோன்ற உயர்பொறுப்பில் இருப்பவர்கள் சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் தூக்கிப் பிடிப்பவர்களாக முன்னுதாரணமானவர்களாக இருக்க வேண்டும். தன்னிடம் இத்தனை சட்டமீறல்களை வைத்துக்கொண்டு எந்தத் தகுதியில் ஒரு பிரச்னையை விசாரணை செய்ய வந்திருக்கிறது இந்தக் குழு என்ற கேள்வியை சாமானியர்கள் சார்பாக எழுப்ப வேண்டிய அவசியமிருக்கிறது. இவர்கள் சட்டவிதிமுறைகளை மீறி நடத்திய விசாரணையின் அடிப்படையிலான பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
- கா.கணேசன்
குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்.