Published:Updated:

“அமெரிக்கப் பள்ளிகளில் தமிழுக்கு அங்கீகாரம்!”

மகனுடன் மாலா கோபாலன்
பிரீமியம் ஸ்டோரி
மகனுடன் மாலா கோபாலன்

ஓவியம்: கோபி ஓவியன்

“அமெரிக்கப் பள்ளிகளில் தமிழுக்கு அங்கீகாரம்!”

ஓவியம்: கோபி ஓவியன்

Published:Updated:
மகனுடன் மாலா கோபாலன்
பிரீமியம் ஸ்டோரி
மகனுடன் மாலா கோபாலன்

‘‘பகவத் கீதையின் மந்திர வாசகம், ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!' என்னைப் பொறுத்தவரை என் கடமையே தமிழின் சிறப்பை அமெரிக்காவில் பரப்புவதுதான். ஒரு நாள் தமிழை இங்குள்ள பள்ளிகள் அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்வதில்தான் அது முழுமை பெறும். அதுவரை என் பணியைச் செய்துகொண்டே இருப்பேன்...'' மாலா கோபாலின் வார்த்தைகளில் தமிழ் தாண்டவமாடுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இவர், அங்கு சாம் கண்ணப்பன் போன்ற பெரியோர்களால் நிர்வகிக்கப்பட்ட ஹூஸ்டன் வாழ் தமிழர்கள் அமைப்பு, பாரதி கலைமன்றம், தமிழ்நாடு அறக்கட்டளை, உதவும் கரங்கள் எனப் பல தமிழ் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அமெரிக்க நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள் எனும் வீரிய வித்தினை, அமெரிக்கன் தமிழ் அகாடமி துணையோடு விதைத்திருக்கிறார். அந்தப் பள்ளிகள் மூலமாகவே அமெரிக்கவாழ் தமிழர்கள் மத்தியில் சிறந்த நிர்வாகி, நடனக் கலைஞர், பாடகர், சமூக சேவகர் எனப் பல அவதாரங்கள் எடுத்திருக்கும் மாலா கோபால், தன் மகன் ஆதி கோபாலைப் பாட வைத்து ‘குறளுக்கோர் கீதம்' என்ற பெயரில் 1,330 குறள்களையும் இசைவடிவில் வெளியிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்த அந்த இசைத்தொகுப்பை நீதியரசர் மகாதேவன் அண்மையில் சென்னையில் வெளியிட்டார். சென்னைக்குத் தன் மகன் ஆதி கோபாலுடன் வந்திருந்த மாலா கோபாலிடம் பேசினேன்.

“அமெரிக்கப் பள்ளிகளில் தமிழுக்கு அங்கீகாரம்!”

‘‘சென்னைதான் என் பூர்வீகம். நான் படித்தது நர்சிங் என்றாலும் தமிழ் நூல்கள் படிப்பது என் வழக்கம். சென்னையில் சுகாதாரத்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது 1993-ல் எனக்குத் திருமணம் ஆனது. கணவர் கோபால் நெய்வேலிக்காரர். கடின உழைப்பாளி. திருமணம் முடித்த கையோடு நானும் அவரும் கையில் எந்தச் சேமிப்பும் இல்லாமல் நியூயார்க் போய்ச் சேர்ந்தோம். அதற்கு முன்பு சென்னையில் இருந்தபோது கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன். ஆங்கிலம் நன்கு வருமென்றாலும் நான் எப்போதும் தமிழில் மட்டுமே பேசுவேன். என் சக மாணவர்கள், ‘அதுதான் அமெரிக்கா போய் செட்டில் ஆகப்போறியே... அப்புறம் ஏன் தமிழ்லயே பேசிட்டு இருக்கே?' என்று கேட்பார்கள். ‘அமெரிக்கா போனதும் தமிழ் பேசத்தான்' என்று பதில் சொல்வேன்.

அமெரிக்கத் தமிழர்கள் என்னிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார்கள். நான் தமிழில் மட்டுமே பதில் பேசினேன். ஆங்கிலத்தை மேதைமையோடு தொடர்புபடுத்திப் பேசுபவர்களிடம் தமிழ் மொழியின் சிறப்பைக் கூற எனக்குத் திருக்குறள் பயன்பட்டது. திருக்குறள்மீது அவ்வளவு காதல் உண்டு எனக்கு. வார இறுதி நாள்களின் ஒன்றுகூடலில் திருக்குறளின் சிறப்புகளோடு ஒவ்வொரு குறளையும் தனித்தனியாகப் பொருளோடு எடுத்துக்கூறியபோது, அமெரிக்க நண்பர்களும் ஆச்சர்யப்பட்டார்கள். மருத்துவமனையில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் மேனேஜராக வேலை பார்த்தேன். பிறகு பிசினஸ். அதன்பிறகு தமிழ்ப்பள்ளிகள் தொடக்கம் என பிஸியாக இயங்க ஆரம்பித்தேன். எந்த இடத்திலும் தமிழ் ஆர்வம் என்னை விட்டு நீங்கவில்லை. அதுதான் குறளுக்கு இசை வடிவம் கொடுக்கச் செய்தது’’ என்கிற மாலா, அதில் எதிர்கொண்ட சவால்களையும் விவரித்தார்.

“அமெரிக்கப் பள்ளிகளில் தமிழுக்கு அங்கீகாரம்!”

‘‘திருக்குறளுக்கு இசை வடிவம் என்றதும் பல நல்ல உள்ளங்கள் பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வந்தன. ஆனால், இது என் முயற்சியில் வரவேண்டும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டேன். அனைத்து ராகங்களையும் சரிவிகிதத்தில் உள்ளடக்கி 1,330 குறள்களுக்கும் உருவம் கொடுத்தோம். என் இளையமகன் ஆதி கோபாலுக்கும் என்னைப்போலவே தமிழ் மொழிமீதும் கர்நாடக சங்கீதத்திலும் அதீத ஆர்வம் உண்டு. 21 வயதாகிறது. சிறுவயதில் அவன் அண்ணன் அகிலனுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கும்போது, இவனை உடன் தூக்கிச் செல்வேன். ஏகலைவனாய் கற்றுக்கொண்டான்.அகிலன் மருத்துவரானதால் இளைய மகன் என் க்ளோனிங்காய் கலையுலகத்துக்குள் வந்துவிட்டான். இந்த இசைத் தொகுப்புக்காக இரவு பகல் பாராமல் உழைத்தான்.

இசைத் தொகுப்பைக் கேட்ட நீதியரசர் மகாதேவன் சிலாகித்துப் பாராட்டினார். திருக்குறளை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க கண்ணனின் மயக்கும் இசை உதவியிருக்கிறது. சென்னைக்கு அடிக்கடி அமெரிக்காவிலிருந்து பறந்து வந்து இசைத் தொகுப்புக்கான வேலைகளைச் செய்ததற்குப் பின்னணியில் என் கணவர் இருந்தார். பொறுமையோடு நிதியுதவிகள் செய்தார். என் குடும்பத்தினரின் வற்றாத அன்புதான் என்னை சாதிக்க வைத்தது.

அடுத்து இசையோடு நாட்டியத்தையும் கலந்து கொடுக்க சங்க இலக்கியத்திலிருந்து பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இருக்கவே இருக்கு. அப்புறம் தமிழ்ப்பள்ளிகளை அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவில் இந்தி, ஸ்பானிஷ் மொழிகளை இரண்டாவது மொழியாக்கப் பயன்பட்ட ‘கிரெடிட் ஹவர்' இப்போது எங்கள் முயற்சியால் தமிழுக்கும் அமெரிக்காவில் சாத்தியமாகி இருக்கிறது. விரைவில் தமிழை இரண்டாவது மொழியாக அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கும். அந்த நாள் வெகுதூரமில்லை!’’