Published:Updated:

ரூபாய்க்கு மூணு இன்ஜினீயரிங் காலேஜ்; பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்; வேடிக்கை பார்க்கும் அரசு! - 1

Education (Representational Image)

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிப்பதால் பொறியியல் கல்லூரிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது சாத்தியமா? இந்தக் கேள்விக்கான பதிலை, பொறியியல் கல்லூரிகளின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

ரூபாய்க்கு மூணு இன்ஜினீயரிங் காலேஜ்; பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்; வேடிக்கை பார்க்கும் அரசு! - 1

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிப்பதால் பொறியியல் கல்லூரிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது சாத்தியமா? இந்தக் கேள்விக்கான பதிலை, பொறியியல் கல்லூரிகளின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

Published:Updated:
Education (Representational Image)

`கோவைக்கு அருகில் இரண்டு, மூன்று கல்லூரிகள் விலைக்கு வருகின்றன. அவற்றில் முதலீடு செய்ய ஆள்கள் உள்ளனர். அவற்றை ஒன்றாக இணைத்து உங்களால் நடத்த முடியுமா?’

- பல்கலைக்கழகத்தின் ஒரு துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரிடம் சில மாதங்களுக்கு முன் ஒருவர் கேட்டிருக்கிறார்.

ஆம், கத்திரிக்காய் போலவே கல்லூரிகளை விலை பேசுவது தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக, பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் கிடக்கின்றன. அவையெல்லாம் விலைபோகாமலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம்? கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி வைத்த நம்முடைய அரசாங்கங்களின் தாறுமாறான நடவடிக்கைகளே!

கல்வி என்பதும் வியாபாரமே என்கிற எண்ணத்தோடு கள்ளச்சாராய முதலாளி முதல் கடத்தல் பேர்வழிகள் வரை பலரும் இதில் குதித்ததன் எதிர்விளைவே, கல்வியை இன்றைக்கு மோசமானதொரு சூழலில் சிக்க வைத்திருக்கிறது.

இதோ... அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிப்பதால் பொறியியல் கல்லூரிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது சாத்தியமா? இந்தக் கேள்விக்கான பதிலை, பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அதையும் வரலாற்றுரீதியாக ஆய்வு செய்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கட்டுரை, அப்படியோர் ஆய்வு முயற்சியே!

முனைவர் ப.வெங்கடாசலம்
முனைவர் ப.வெங்கடாசலம்

கட்டுரையாளர்: முனைவர் ப.வெங்கடாசலம். இவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர், தனியார், வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் போன்ற பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். தற்போது, தனியார் வேளாண் கல்லூரி ஒன்றின் ஆய்வுத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது என்றால், இன்றைய தலைமுறையால் நம்ப முடியாது. கோயம்புத்தூர் போன்ற பெருநகரத்தில் மூன்று பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன என்பதும், அதிலும் ஒன்றே ஒன்று மட்டுமே அரசுக் கல்லூரி என்பதும் பலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. இன்று பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பல நூறாக அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கள்ளச்சாராயம், ரியல் எஸ்டேட், கட்டடத் தொழில்... பொறியியல் கல்லூரி!

பொறியியல் கல்லூரிகளின் மாபெரும் பாய்ச்சல் 80-களில் தொடங்கி, 2000-ன் தொடக்கக் காலம்வரை நடந்துள்ளது. இந்தக் காலகட்டங்களில் தொழில் தொடங்குவது அல்லது முதலீடு செய்வது என்றால், அது பொறியியல் கல்லூரி தொடங்குவதுதான். ஏற்கெனவே, கல்வித்துறையில் இருந்த ஒரு சிலர் மற்றும் யாரிடமெல்லாம் அதிக பணம் இருந்ததோ, அவர்கள் கல்லூரியில் முதலீடு செய்தனர். குறிப்பாக, `ரியல் எஸ்டேட்’ என்ற நில பேரத் தொழிலில் இருந்தவர்கள், நிதி நிறுவனம் நடத்திவந்தவர்கள், சாராய ஆலைகளை நடத்திவந்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள், அரசியலில் பணம் சேர்த்தவர்கள் எனப் பல புதிய முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்தார்கள். இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு லாபம் தரும் தொழில். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்கள். அதனால் உடனே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி கல்லூரியைத் தொடங்கிவிட்டனர்.

College
College
Pixabay

அதற்குப் பின் கல்லூரி நடத்த என்ன தேவை, எப்படி எடுத்துச் செல்வது என்ற பெரிய தொலைநோக்கெல்லாம் எதுவும் அவர்களிடம் இல்லை. அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து பொறியியல் பட்டதாரிகளுக்கு இருந்த தேவை, குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் அறிமுகம், தொழில் வளர்ச்சி எல்லாம் இவர்களுக்குச் சாதகமாக இருந்ததால், `கல்லூரித் தொழிலி’ல் நல்ல வசூல் பார்க்க முடிந்தது.

ஒரு சில பொறியியல் கல்லூரிகள் மட்டும் விதிவிலக்காக, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு முறையான வளர்ச்சி பெற்றுள்ளன. அந்த நிர்வாகத்தினர், இன்றும் புதிய கல்லூரிகள் தொடங்கும் அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், குறைந்த விலையில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில், வங்கிக் கடனில் பொறியியல் கல்லூரிக் கட்டடம் கட்டி வசூல் செய்தவர்கள் நிலைதான் இன்று ஆட்டம் கண்டுள்ளது.

`மூணு காலேஜ் விலைக்கு வருது!'

இந்த நிலையிலிருந்து மீண்டு, கல்வியைச் சேவையாக முன்னெடுக்க முயலாமல், அதே பணம் பண்ணும் பார்வையோடு மீண்டும் புதிய புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கி, அதன்மூலம் வசூலைத் தொடர முயல்கின்றனர். பொறியியல் கல்லூரிகளில் பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, அக்ரி இன்ஜினீயரிங் போன்ற பாடப்பிரிவுகளின் திடீர் தோற்றம் எதற்காக என்பது இப்போது புரியும் என நினைக்கின்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, `கோவைக்கு அருகில் இரண்டு, மூன்று கல்லூரிகள் விலைக்கு வருகின்றன. அவற்றில் முதலீடு செய்ய ஆள்கள் உள்ளனர், நீங்கள் அவற்றை ஒன்றாக இணைத்து நடத்த முடியுமா?’ என்று கேட்டார். `என்னால் இயலாது. ஒரு தொழிலைப்போல கல்லூரிகளை எடுத்து நடத்துவது என்ற பார்வையே தவறானது’ என்றேன். அதற்குப் பின் அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை.

பூர்த்தியாகாமல் கிடக்கும் பொறியியல் கல்லூரி இடங்கள்!

தமிழ்நாட்டில் 2003-04-ம் ஆண்டுகளில் 250 கல்லூரிகள் இருந்தன. அதுவே 2015-ல் 580 கல்லூரிகளாக, இரு மடங்கு அதிகரித்தன. 2003-04-ம் ஆண்டுகளில் 78,000 பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தன. 2015-ல் 2.62 லட்சமாக அதிகரித்தது. இவற்றில் 2016 -17 ஆண்டில் 1.25 சீட்கள் பூர்த்தியாகாமல் காலியாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அந்தத் தேக்கநிலை தொடர்கின்றது.

சில கல்லூரிகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. பல நிறுவனங்கள், கல்லூரிகளை மூடிவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டன. சிலர் அந்தக் கட்டடங்களைப் பள்ளிகளாக மாற்ற முயன்று வருகின்றனர். இன்னும் சில கல்லூரிகளில் கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. சில கல்லூரிகளை விற்க முடியாமல் வங்கிக்கடன் தடுத்து வருகிறது. கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, தேர்வு விவரங்களை எடுத்தால் இன்னும் தலை சுற்றும். மொத்தத்தில் கல்லூரிகள் கல்விச் சந்தையாக மாற்றமடைந்துள்ளன. கல்வி என்ற பண்டத்தை விலைகொடுத்து வாங்குபவர்களாகப் பெற்றோர்களும் மாணவர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு ஏற்ப மாணவர், ஆசிரியர் மற்றும் இதைச் சார்ந்த அனைவரும் தங்களின் குணங்களை மாற்றிக்கொண்டுள்ளனர் அல்லது மாற்றப்பட்டுள்ளனர்.

Money (Representational Image)
Money (Representational Image)

பொறியியல் கல்லூரிகளா... தொழிற்சாலைகளா?

கல்வியை ஒரு தொழிலாக முதலீடு செய்த கல்வித் தந்தைகளா, அதற்கு அனுமதி கொடுத்து ஆசி வழங்கிய அரசாங்கமா, அதில் ஆசிரியர்களாகச் சேர்ந்து, அடிமைகளாய் மாறிவிட்ட பேராசிரியர்களா, பொறியியல் படிப்பு குறித்த மறுயோசனையே இன்றி ஆட்டு மந்தைபோல தங்களின் குழந்தைகளை அதில் சேர்த்த பெற்றோர்களா, அந்தக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களா, இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய கல்வியாளர்களா?

இவர்களில் யார் யாருக்கு, என்னென்ன பொறுப்புகள் என்பதையெல்லாம் ஆய்வுகள் செய்தால், தனிப்பொறுப்பு யாருக்கு என்பது தெரியவரும். இதில் எல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டி இருந்தாலும், அரசாங்கத்துக்கும், தொலைநோக்கு இல்லாமல் ஒரு தொழிலாகக் கல்லூரி தொடங்கியவர்களுக்குமே கூடுதல் பொறுப்பு உள்ளது.

மனிதனின் முயற்சிகள் எல்லாவற்றிலும் உள்ளதுபோலவே, இந்தப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதன் பாடத்திட்டங்களின் இலக்கைப் பொறுத்தே அதை அடையும் வழிகளும் தீர்மானிக்கப் படுகின்றன. இங்கு உயர் கல்வித்துறை திட்டத்தில், குறிப்பாக பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க தெளிவான, வரையறுக்கப்பட்ட நோக்கம் எதுவும் இல்லாதிருப்பதே இப்போது எழுந்துள்ள எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்.

`கல்வித் தந்தை’களின் தன்னிச்சை முடிவு... என்ன செய்கிறது அரசு?

பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதன் நோக்கம் என்ன? அந்தப் பாடத்திட்டங்களின் இலக்கு என்ன, எந்த நோக்கத்தை நிறைவேற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது? எதன் அடிப்படையில் புதிய புதிய பட்டப்படிப்புகள் தொடங்கப்படுகின்றன? வெறும் கட்டட வசதிகள் மட்டுமே போதுமா? தொடங்கப்படும் கல்லூரிகள் மற்றும் பொறியியல் பட்டங்களின் சமூகப் பங்களிப்பு என்ன? பொறியியல் பட்டதாரிகளின் அறிவு எங்கெல்லாம் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன? ஏற்கெனவே அந்தப் படிப்பு படித்தவர்களின் நிலை என்ன? இவ்வாறு அனைத்து நிலைகளும் ஆய்வு செய்யப்பட்டுத்தான் புதிய கல்லூரிகளுக்கும் பாடங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டதா?

College Students
College Students
Pixabay

பணம் உள்ளவர்கள் எல்லாம் பொறியியல் கல்லூரி திறப்பதற்கான `தேவையைப் பூர்த்தி செய்தால்’, கல்லூரி தொடங்கிக் கொள்ளலாம்; அவர்களுக்கு லாபம் தரும் அல்லது சந்தையில் நன்றாகப் போகும் என்று பேசப்படக்கூடிய பாடப்பிரிவுகளைப் புதிது புதிதாகத் தொடங்கி சந்தையில் விற்றுக்கொள்ளலாம். இதுதான் வரையறை. இவ்வாறு, இன்றைய தேவைக்கு பொருத்தமில்லாமல் `கல்வித் தந்தைகளின்’ லாபநோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட பாடங்களைப் படித்து முடித்துவிட்டுப் பாதிப்புக்கு உள்ளாவது, மாணவர்கள்தாம். எத்தனை கல்லூரிகள் தொடங்குவது, எத்தனை பாடங்களைத் தொடங்குவது என்று வரையறை செய்யும் பணியைக் கல்லூரி நிர்வாகமே தன்னிச்சையாக முடிவு செய்வது எப்படி? அன்றாட வாழ்வின் யதார்த்தங்களின் தேவையில் இருந்து பொறியியல் கல்லூரிகளின் நோக்கம் உருப்பெற வேண்டும் என்ற வரையறை எங்கும் பின்பற்றப்படாதது ஏன்?

- ஆராய்வோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism