Published:Updated:

``நம்ம ஊருக்கு ஷூ எல்லாம் சரி வருமா?" அரசுப் பள்ளியில் செருப்புக்குப் பதில் ஷூ பற்றி ஓர் அலசல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்புகளுக்கு பதில் ஷூ எனும் அறிவிப்பு பற்றி அலசல்!

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

குழந்தைகள் எந்தக் காரணத்தாலும் கல்வி கற்க வருவது தடைப்பட்டுவிடக்கூடாது என்றுதான் முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். பிறகு வந்த ஆட்சிக்காலத்தில், அது சத்துணவுத் திட்டமாக மாறியது. சத்துணவு மட்டுமன்றி, புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக அளித்துவருகிறது தமிழக அரசு. நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், `6 வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி காலணிகளுக்குப் பதில் ஷூ வழங்கப்படும்' என அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளின் சீருடையைப் போன்ற தோற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் அடுத்த கட்டமாகவே காலணிக்குப் பதில் ஷூ என்ற அறிவிக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இது பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்து, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் எனச் சிலரால் சொல்லப்பட்டாலும், தமிழகத்து வெப்பநிலைக்கு ஷூ அவசியமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசினேன்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பேசுகையில், "இந்த அறிவிப்பு பெற்றோர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நடைமுறையில் சிக்கலானது. நமது ஊரே அதிகமாக வெப்பம் உள்ள ஊர். இதில் இறுக்கமான ஷூ அணிவது அவசியமில்லையே! ஷூ அணியும்போது சாக்ஸ் அவசியம். மாணவர்கள் எப்போதும் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால், ஒரு ஜோடி சாக்ஸை குறிப்பிட்ட நாள்களுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதனால், பெற்றோர் சாக்ஸ் புதிதாக வாங்கித்தருவார்களா என்பதும் சந்தேகம்தானே? இது 6-ம் வகுப்பு மாணவர்களுக்குத்தான் என்றாலும், நாளடைவில் தொடக்க வகுப்புகளுக்கும் கொண்டுவரலாம். அப்போது எனில், செயல்முறைக் கற்றலில் 1 முதல் 3 -ம் வகுப்பு வரை தரையில்தான் அமர்ந்திருப்பார்கள் மாணவர்கள். எனவே, அவர்களுக்கு ஷூ என்பது பெரும் இடையூறாகத்தான் இருக்கும். அதை ஒரு யூகத்தில் சொல்லவில்லை. எங்கள் பள்ளியிலேயே ஓராண்டு எல்லா மாணவர்களையும் ஷூ அணிந்துவர ஏற்பாடு செய்தோம். ஆனால், அதைத் தொடர முடியாததற்கு நடைமுறைச் சிக்கல்களே ஒரே காரணம்." என்றார்.

ஆசிரியர் சுடரொளி, ``இப்போது அரசு தரும் செருப்புகளை எத்தனை மாணவர்கள் அணிந்துவருகிறார்கள் என்பதே பெரிய கேள்விக்குறி! ஏனென்றால், மாணவர்களுக்குப் பொருத்தமான சைஸில் இருக்காது; மிக அதிக எடைகொண்ட செருப்புகளைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாது. இதையே அந்தந்த வகுப்பாசிரியரின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி, வாங்கித் தர செய்யலாம் அல்லது மாணவர்களின் பெற்றோர்கள் செருப்பு வாங்கித்தந்த ரசீதைக் காட்டினால் ஆசிரியர் பணம் கொடுக்கலாம். அதுவும் இல்லையென்றால், மாணவர்களின் கால் அளவை ஆசிரியர்களிடமிருந்து சேகரித்து பின், செருப்புகளை அதற்கு ஏற்ற சைஸில் வழங்கலாம். இப்படி ஏதாவது மாற்றுவழியைப் பார்க்கச் சொல்லி வருகிறோம். இதில், 6-ம் வகுப்புகளுக்கு மேல் செருப்புகளுக்குப் பதில் ஷூ என்றால் என்ன நிலையோ? ஏனென்றால், செருப்பின் சைஸ் கொஞ்சம் அதிகமாக இருந்தால்கூட சரிசெய்து அணிந்துகொள்ளலாம். ஆனால், ஷூவின் சைஸ் கூடவோ, குறைத்தோ இருந்தால் நிச்சயம் பயன்படுத்த முடியாது. மேலும், தனியார் பள்ளி மாணவர்கள் ஷூ அணிந்துவர வேண்டும் என்பதை வேண்டாம் என்றும் பலர் சொல்லிவருகின்றனர்.

பல பெற்றோர்களால் இது நாகரிகம் என்பதாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஷூவை விடவும் செருப்பே நல்லது.
ஆசிரியர் சுடரொளி

தனியார் பள்ளிகளில் பெஞ்ச், டேபிள் என்பது கட்டாயமாக இருக்கும். ஆனால், அரசுப் பள்ளிகளில் முழுமையாக இந்த வசதி இருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியிருக்கையில் ஷூ அணிந்து தரையில் உட்காரச் சொல்வது சரியாக வராது. எங்கள் பள்ளியில் மரத்தடியில்கூட வகுப்புகள் நடக்கும். பிறகு, வகுப்பறைக்கு வெளியே ஷூவைக் கழற்றி வைத்தால், எல்லாமும் ஒரே மாதிரியாக இருப்பதால் மாற்றி, மாற்றி அணிந்துகொண்டு குழப்பம் வர வாய்ப்பும் இருக்கிறது. நம்முடைய பிரதான தேவை எல்லோருக்கும் வகுப்பறைகள். எல்லோருக்கும் பெஞ்சுகள். இவை சரிசெய்யப்பட்ட பிறகும் ஷூ அவசியமா என்றும் பார்க்க வேண்டும். பல பெற்றோர்களால் இது நாகரிகம் என்பதாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஷூவை விடவும் செருப்பே நல்லது. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. பல மாணவர்கள் காலையில் சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்குக் காலையில் சாப்பிட ஏதேனும் ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும்." என்கிறார்.

ஆசிரியர் சதீஷ்குமார், ``அரசுப் பள்ளிகளில் கட்டுமான வசதிகளில் வகுப்பறையில் ஆரம்பித்து கழிவறை வரை ஏராளம் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்துவிட்டு இவற்றை வழங்கினால் வரவேற்கலாம். இல்லையெனில், பசியோடு இருப்பவனுக்கு பட்டாடை கொடுப்பதுபோலத்தான் மாறிவிடும்." என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.