Published:Updated:

ஆந்திரா: `எச்சரித்த நீதிமன்றம்; முடிவை மாற்றிய மாநில அரசு!’ - 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

தேர்வு ரத்து
தேர்வு ரத்து

ஆந்திராவில் கொரோனா பரவல் மிகுதியாக உள்ள நேரத்தில் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்தினால், மாணவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, ஆந்திர அரசு பொதுத்தேர்வுகளை ரத்துசெய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆரம்பத்தில், தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டுமே ஆன்லைன் வழியாகப் பாடங்கள் நடத்திவந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகின்றன. கொரோனா இரண்டாம் அலை, இந்தியாவில் தீவிரமடைந்ததால், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஆறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள ஆந்திராவில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அந்த மாநிலம் ஆரம்பம் முதலே முனைப்பு காட்டிவந்தது. இந்த மாத (ஜூன்) இறுதிக்குள் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி முடிக்க மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, பொதுத்தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. அனால், கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், மாநில அரசு மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமல் தேர்வு நடத்த முயல்வதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்வை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோரின் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆந்திரா: `எச்சரித்த நீதிமன்றம்; முடிவை மாற்றிய மாநில அரசு!’ - 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி வாரியங்கள் இரண்டு வார இடைவெளியில் மதிப்பெண் கணக்கீட்டு முறையைச் சமர்ப்பித்திருப்பது போன்று, பிற மாநிலக் கல்வி வாரியங்களும் மதிப்பீட்டு முறையை விரைவில் இறுதி செய்ய வேண்டும். இன்றைய தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். பிற மாநிலங்கள்12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், ஆந்திர அரசு மட்டும் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று தன் நிலைப்பாட்டில் இருப்பது ஏன்? கொரோனா பெருந்தொற்றுச் சூழல் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டனவா என்பது குறித்த அறிக்கையை ஆந்திர அரசு கூடிய விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால்கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம்'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆந்திர அரசை எச்சரித்தனர்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவந்த ஆந்திர அரசு, நீதிபதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவசர ஆலோசனை நடத்தி 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்துசெய்வதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.சுரேஷ் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைப்போல் ஜூலை 31-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி, முடிவுகளையும் அறிவிக்க முடியாது. அதனால், ஆந்திராவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன" என்றார்.

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகக் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு