வளர்ந்து வரும் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற விதமாக புதிய துறைகளை பாடத்திட்டத்தில் இணைக்க முடிவு செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
இதில் மின்சார வாகனங்கள் (EV) , ரோபாடிக்ஸ், கிளீன் எனர்ஜி, தரவறிவியல் (Data Science), Cloud Computing, ஸ்பேஸ் டெக்னாலஜி ( Space Technology) போன்ற வளர்ந்து வரும் துறைகள் இடம் பெறவிருக்கின்றன. மேலும் செயற்கை நுண்ணறிவியல், மெஷின் லேர்னிங், ஐ.ஓ.டி (Internet of things), டேட்டா அனலிடிக்ஸ் போன்றவை கட்டாய பாடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. தங்கள் விருப்பத்துறையில் 6 மாத காலம் வரை தொழிற்சாலைக்கு சென்று இன்டர்ன்ஷிப் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேசுகையில் " இன்ஜினீயரிங் மாணவர்கள் நிறைய இடங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் அதிக திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் 5,6 -வது செமஸ்டர்களில் தங்கள் விருப்பப் பாடங்களோடு சேர்த்து 8 பாடங்கள் படிப்பார்கள். EEE மாணவன் ஒருவன் பேட்டரி, செல் டெக்னாலஜி குறித்து மேலும் தன் அறிவை வளர்த்துக்கொள்ள EV துறையை விருப்பப்பாடமாக எடுக்கலாம். கடைசி செமஸ்டரில் இந்த விருப்பப் பாடம் வரவிருப்பதால், கடைசி செமஸ்டரில் உள்ள முக்கிய கோர்ஸ்கள் அனைத்தும் 2022-ம் ஆண்டிலிருந்து மூன்றாவது செமஸ்டரில் சேர்க்கப்படும் " என்று கூறினார்.
மேலும் இப்பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் உள்ள ஒரு பேராசிரியர் கூறுகையில் " ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவன் சிறப்பு நோக்க வாகனங்கள் (Special Purpose Vehicles) பற்றி படிக்க வேண்டுமென்றால், தேவையில்லாத பாடங்களை தவிர்த்து தனக்கு தேவையானவற்றை மட்டும் படிக்க இயலும். அதே நேரத்தில் கிரெடிட் பாயின்ட்களிலும் எந்தவித பாதிப்பும் இருக்காது. இதுகுறித்து விரிவான விளக்கம் விரைவில் வெளிவரும். மேலும் 2021-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடங்களில் உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் செயப்படும்" என்று தெரிவித்தார்.