Published:Updated:

`இனி ஆன்லைன் மூலமே விடைத்தாள் திருத்தம்!' -அமெரிக்கக் கல்வி நிறுவனங்களோடு கைகோக்கும் அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் விடைத்தாள் திருத்தப்படும் என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Surappa
Surappa

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்போது, மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சிபெற வைத்ததாக 2018-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில், அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர்.

`இனி ஆன்லைன் மூலமே விடைத்தாள் திருத்தம்!' -அமெரிக்கக் கல்வி நிறுவனங்களோடு கைகோக்கும் அண்ணா பல்கலை

இதில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட, சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் பணம் வாங்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 10 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடந்துவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சிலர்மீது துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்தார். விடைத்தாள் விவகாரம் பூதாகரமானதையடுத்து, இதில் மாற்றம் கொண்டுவரப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். ஆசிரியர்கள் விடைத்தாள்களைக் கணினியில் திருத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். இந்தப் புதிய விதிமுறை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதலுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது.

`இனி ஆன்லைன் மூலமே விடைத்தாள் திருத்தம்!' -அமெரிக்கக் கல்வி நிறுவனங்களோடு கைகோக்கும் அண்ணா பல்கலை

இந்நிலையில், அடுத்த செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள் ஆன்லைன் முறையில் திருத்தப்படும் என துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். மேலும், அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் உயர்புகழ் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்காக, உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார் சூரப்பா.