Published:Updated:

அறிவியல் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்; ரஷ்யா செல்லும் வாய்ப்பு; குவியும் பாராட்டுகள்!

தலைமை ஆசிரியருடன் வேதாஸ்ரீ, ரகசியா
தலைமை ஆசிரியருடன் வேதாஸ்ரீ, ரகசியா

``எங்க ரெண்டு பேரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார் நேரில் அழைத்துப் பாராட்டினதை மறக்கவே முடியாது.''

அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ரஷ்யா நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் விண்வெளிப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காகத் தனியார் நிறுவனம் நடத்திய தேர்வின் முதல் சுற்றுப் போட்டியில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர் உட்பட கல்வித் துறையைச் சேர்ந்த பலரும் அந்த மாணவிகளைப் பாராட்டி வருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்
`நான் இதுவரை கரூரைக்கூட தாண்டினதில்ல; ஆனா, இப்போ இஸ்ரோ போறேன்!' - நெகிழும் அரசுப் பள்ளி மாணவி

அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வேதாஸ்ரீ, ரகசியா. இருவரும் தோழிகள். சிறு வயதிலிருந்தே ஒன்றாக, ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். கல்வியில் சிறந்த மாணவிகளாகவும் விளங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஐ.ஏ.ஏ.ஏ என்ற தனியார் நிறுவனம், விண்வெளிப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆன்லைனில் தேர்வு ஒன்றை நடத்தியது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாகவும், ரஷ்யா நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்வெளி தொடர்பாக கொடுக்கப்படும் பயிற்சியிலும் பங்கெடுப்பார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை மட்டும் இதில் பங்கேற்க வைத்ததுள்ளது, அந்த நிறுவனம். க்விஸ் புரோகிராம் வடிவில் ஆன்லைனில் நடத்தப்பட்ட அந்த எழுத்துத் தேர்வில் சுமார் 2,000 மாணவர்கள் கலந்துகொண்டதில், 10 மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அந்த 10 பேரில், தோழிகளான வேதாஸ்ரீ, ரகசியா இருவரும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு

இதையறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இருவரையும் அழைத்துப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியிருக்கிறார். அத்துடன் அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ சின்னப்பா, மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்பராணி உள்ளிட்ட ஆசிரியர்களும் பாராட்டி வருவதால் இரண்டு பேரும் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.

இது குறித்து வேதாஸ்ரீயிடம் பேசினோம். ``அப்பா சிவக்குமார் அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும், அம்மா பாரதி தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். விண்வெளி மேல் எப்போதும் பெரிய ஈர்ப்பு இருந்ததுடன் விண்வெளிக்குச் செல்ல வேண்டும், விண்வெளி தொர்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அத்துடன், குழந்தைகள் நல மருத்துவர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. அப்பா அரசுப் பள்ளிகள் மேல் பற்றாக இருந்ததால் என்னை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார்.

அமைச்சருடன் வேதாஸ்ரீ
அமைச்சருடன் வேதாஸ்ரீ
'தமிழில் பொறியியல் படிப்புகள் ; மாணவர்கள் மீதான அக்கறையா, கல்லூரிகளுக்கு விரிக்கும் வலையா?'

ரகசியா வீடு, என் வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறது. நாங்கள் இருவரும் திக் ஃப்ரெண்ட்ஸ். படிப்பிலும் சுட்டியாகவே இருந்தோம். சென்னையில் உள்ள விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான தனியார் நிறுவனம் ஒன்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மட்டும், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆன்லைன் தேர்வுப் போட்டியை அறிவித்திருந்தது. இந்தப் போட்டியில் நானும் ரகசியாவும் கலந்துகொள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

விண்ணப்பம் செய்துவிட்டு அதற்கான பயிற்சியில் இறங்கினோம். மொத்தம் நான்கு சுற்றுகளாக இந்தத் தேர்வு நடக்க இருக்கிறது. முதல் சுற்றில் விண்வெளி தொடர்பாக ஆன்லைனில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்தோம். தேர்வாகிவிட்டோம். எங்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார் நேரில் அழைத்துப் பாராட்டினதை மறக்கவே முடியாது.

வேதாஸ்ரீ
வேதாஸ்ரீ

இந்தளவுக்குப் பேர் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எல்லோரும் எங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். அதனால் அடுத்த மூன்று கட்டத் தேர்விலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற விதை மனதுக்குள் மின்னிக்கொண்டே இருக்கிறது. முழு தேர்வும் இந்த வருடத்துக்குள் முடிந்துவிடும். இப்போது, இரண்டாம் கட்டத் தேர்வுக்காக விண்வெளி தொடர்பான குறிப்புகளை இன்டர்நெட்டில் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டோம்.

அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிற விண்வெளி தொடர்பான பயிற்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். நிச்சயம் நாங்கள் இருவருமே வெற்றி பெற்று, அரியலூரில் இருந்து ரஷ்யாவுக்குப் போவோம்'' என நம்பிக்கை மிளிரத் தெரிவித்தார்.

ரகசியா
ரகசியா

மற்றொரு மாணவி ரகசியாவிடம் பேசினோம். ``போலீஸாக இருந்த அப்பா ராஜேந்திரன் இறந்துவிட்டார். அண்ணன் ராஜாராம், பி.எஸ்ஸி முடிச்சிருக்காங்க. அம்மா சித்ராதான் எங்களைக் கவனிச்சுக்குறாங்க. எப்பவும் விண்வெளி எப்படியிருக்கும் என்பது பற்றியும், விண்வெளி தொர்பாவும் நிறைய தெரிஞ்சுக்க நினைப்பேன். என்னோட ஃப்ரெண்ட் வேதாஸ்ரீயும் அப்படித்தான். எங்க எண்ணத்துக்கு ஏத்த மாதிரி, எங்க பள்ளி மூலமாக எங்களுக்கு அந்தப் போட்டியில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சிருக்கு. முதல் சுற்றுப் போட்டியில வெற்றி பெற்றதற்கு, முகம் தெரியாவங்ககூட பாராட்டுறாங்க.

வாட்ஸ் அப் கார்டு எல்லாம் போட்டு வாழ்த்துறாங்க. இதெல்லாம் எனக்கு, இப்போவே விண்வெளியில கால் வச்ச மாதிரியான ஃபீல் தருது. நிச்சயம் நானும் அவளும் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று ரஷ்யாவில் கால் வைப்போம் என்கிற பெரும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. எங்களோட ஆசிரியர்கள், குடும்பத்தினர், ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் உற்சாகப்படுத்துனதை மறக்கவே முடியாது'' என்றார்.

வாழ்த்துகள் இருவருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு