+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதத்தில் நடந்து முடிந்தன. இதன் தேர்வு முடிவுகளை, இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பொதுதேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து பல்வேறு மேற்படிப்புகளுக்கான சேர்க்கையும் தொடங்கியுள்ளன.
Engineering படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ரிசல்ட் வெளியான அதே நாளில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கடந்த 8-ம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி அண்ணா பலக்லைக்கழக பொறியியல் கலந்தாய்விற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்றைய தினத்தில் (ஜூன் 20) தொடங்கியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 19. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி https://www.tneaonline.org/. ஜூலை 19 அன்று நிறைவடையும் இந்த விண்ணப்பப் பதிவிற்கு பின்னர் மாணவர்களின் சமவாய்ப்பு எண் ஜூலை 22-ம் தேதியும் தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் வரும் 450-ம் மேற்பட்ட கல்லூரிகள் உள்ள சுமார் 1.5 லட்ச பொறியியல் இடங்களுக்கான சேர்கை இந்த ஒற்றை கலந்தாய்வின் மூலம் தான் நடைபெறும். ஆகஸ்ட் 16-ம் நாள் தொடங்கும் இந்தாண்டிற்கான கலந்தாய்வு அக்டோபர் 14-ம் தேதி அன்று நிறைவடைகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 16 தொடங்கி 19 வரையும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று 110 சிறப்பு மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது.