Published:Updated:

`நோய்களுக்கான தீர்வு நம் மூலிகைகளில் இருக்கிறது!'- ஆயுஷ் தேர்வில் முதலிடம்பிடித்த புதுக்கோட்டை மாணவி

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

முதுநிலை படிப்புக்காக நடத்தப்பட்ட ஆயுஷ் தேர்வில் புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியின் மகளும் பெண் மருத்துவருமான பொன்மணி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.

மருத்துவர் பொன்மணி
மருத்துவர் பொன்மணி

ஆயுஷ் எனப்படும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா முதுநிலைப்படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ஜூலை 14-ம் தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கான மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூரைச் சேர்ந்த விவசாயி கணேசன்-ஜெயசுதா தம்பதியரின் மகள் மருத்துவர் பொன்மணி சித்தா பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மருத்துவர் பொன்மணி
மருத்துவர் பொன்மணி

அரசுப்பள்ளியில் படித்த பொன்மணி ப்ளஸ் டூவில் 1,062 மதிப்பெண் பெற்றார். சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் படிப்பு கிடைத்தது. இளங்கலையில் பி.எஸ்.எம்.எஸ் முடித்துள்ளார். இந்நிலையில், தான் முதுநிலை படிப்புக்காக நடத்தப்பட்ட ஆயுஷ் நுழைவுத் தேர்வை எழுதி தற்போது அதில் 400 மதிப்பெண்ணுக்கு 377 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

பொன்மணியின் பெற்றோர், "மகளின் விடா முயற்சியும் ஆசிரியர்களின் ஊக்கமும்தான் எங்கள் மகளை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. எங்கள் ஊருக்கும் மாநிலத்துக்கும் பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றனர்.

`நோய்களுக்கான தீர்வு நம் மூலிகைகளில் இருக்கிறது!'- ஆயுஷ் தேர்வில் முதலிடம்பிடித்த புதுக்கோட்டை மாணவி

மருத்துவர் பொன்மணி கூறும்போது, "எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனாலும், எம்.பி.பி.எஸ் கிடைக்கவில்லை என்றாலும், பி.எஸ்.எம்.எஸ் படிப்பை விரும்பி ஏற்றுக்கொண்டு இளங்கலை படிப்பை முடித்துவிட்டேன். முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் முதல் ராங்க் தேர்ச்சி மகிழ்ச்சியளிப்பதுடன், உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள மத்திய அரசின் தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேற்படிப்பு படிக்க உள்ளேன். நம்மிடம் உள்ள மூலிகைச் செடிகளிலேயே பல்வேறு நோய்களுக்குத் தீர்வு உள்ளது. இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்" என்கிறார்.