Published:Updated:

`பேய்கள் ஆய்வு பற்றிய படிப்பு; ஆயுர்வேத முறைகள்!’ - அறிமுகப்படுத்தும் பனாரஸ் பல்கலைக்கழகம்

இந்தக் கல்வியைப் பயிலும் மருத்துவர்களுக்கு, இதுபோன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத முறைகள் கற்றுத்தரப்படும். அதில் மூலிகை மருத்துவம், உணவுமுறைப் பழக்கவழக்கம், மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மருத்துவ முறைகள் பின்பற்றப்படும்.

மருத்துவம்
மருத்துவம்

மருத்துவர்களுக்காக, 'பூத் வித்யா' என்கிற பெயரில் பேய்கள் ஆய்வுபற்றிய படிப்பை வரும் ஜனவரி 2020 தொடங்கி வழங்கவிருக்கிறது, வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். ஆறுமாத காலத்துக்கு, இந்தப் படிப்பை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேதம் மற்றும் புராண இந்து சமய முறை மருத்துவத்துறை நடத்துகிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

அந்தத் துறையின் தலைவர் யாமினி பூஷன் திரிபாதி கூறுகையில், "சில இனம்புரியாத காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகளைப் பற்றிய கல்வி, 'பூத் வித்யா' எனப்படும் பேய்க்கல்வி வழியாகப் பயிற்றுவிக்கப்படும். பெரும்பாலும் இதுபோன்ற மனநல பாதிப்புகள் அமானுஷ்யங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. அதனால் இந்தக் கல்வியைப் பயிலும் மருத்துவர்களுக்கு இதுபோன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத முறைகள் கற்றுத்தரப்படும். அதில் மூலிகை மருத்துவம், உணவுமுறை பழக்கவழக்கம், மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மருத்துவ முறைகள் பின்பற்றப்படும்" என்றார்.

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கல்விக்கழகம், கடந்த 2016-ம் ஆண்டில் நடத்திய ஆய்வின்படி சுமார் 14 சதவிகித இந்தியர்களும், 2017-ம் வருட கணக்கீட்டின்படி உலக சுகாதார நிறுவனம் சுமார் 20 சதவிகித இந்தியர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இத்தனைக்கும், இந்தியாவில் 4,000 மனநல மருத்துவ நிபுணர்கள் இருப்பதாக மெடிக்கல் கவுன்சிலின் எண்ணிக்கை குறிப்பிடுகிறது.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

இவ்வளவு மருத்துவர்கள் இருக்கும்போதும், கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் மக்கள் இன்றளவும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், மாந்திரீக முறையையே நாடுகிறார்கள். இதற்குத் தீர்வு காணும் வகையிலேயே ஆயுர்வேத சிகிச்சை முறை அறிமுகப்படுத்த இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் மனநலச் சிக்கல்களுக்கு அறிவியல் ரீதியான மருந்துகள் இருக்கும்போது, இதுபோன்ற மருத்துவ முறைகளைப் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது அல்ல. இப்படியான கல்விமுறையை அறிமுகப்படுத்தித்தான் சர்வதேச தளத்தில் மருத்துவத்துறையில் நாம் போட்டியிடப்போகிறோமா? என்று மருத்துவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.