பிரீமியம் ஸ்டோரி
ப்ளஸ் டூ பொதுத் தேர்வை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், ‘கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுக்கலாம்?’ என்பது அடுத்த பெரிய கேள்வியாக முன் நிற்கும். இதற்கு, பிசிஏ (BCA) எனும் கணினித்துறை சார்ந்த படிப்பைப் பற்றிய விரிவான தகவல்களை அளிக்கிறார் சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் கா.வாணி.
2K kids: பிசிஏ படிப்பு... கம்ப்ளீட் விளக்கம்!

பிசிஏ கோர்ஸ் என்றால் என்ன?

பிசிஏ (BCA - Bachelor of Computer Applications) என்பது கணினிப் பயன்பாடு என்கிற இளங்கலை பட்டப்படிப்பு.

இந்த கோர்ஸில் சேர ப்ளஸ் டூவில் எந்த குரூப் எடுக்க வேண்டும்?

கணினித்துறையின் அடிப்படை கணிதம். எனவே, ப்ளஸ் டூவில் கணிதப் பாடம் இடம் பெற்ற எந்த குரூப் எடுத்துப் படித்த மாணவர் களும் பிசிஏ கோர்ஸுக்கு விண்ணப்பிக்கலாம்.

ப்ளஸ் டூவில் உயிரியல் மற்றும் வணிகவியல் குரூப் எடுத்த மாணவர்களுக்கு இந்த கோர்ஸ் கடினமாக இருக்குமா?

உயிரியல் மற்றும் வணிகவியல் படித்த மாணவர்கள் தாராளமாக கல்லூரியில் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். கடினமாக இருக்காது. இந்த கோர்ஸுக்குத் தேவையான ஒன்று, ஆர்வம் மட்டுமே. கல்லூரியில் நிச்சய மாக அடிப்படையில் இருந்துதான் பாடம் நடத்தப்படும். இன்று கணினித்துறையில் பேராசிரியராக இருக்கும் என்னுடைய இளங்கலை படிப்பு, பி.எஸ்ஸி ஹோம் சயின்ஸ்.

கா.வாணி
கா.வாணி

பிசிஏ படிப்பில் என்ன பாடங்கள் கற்பிக்கப்படும்?

கணிதம், கணினியின் அடிப்படை மற்றும் நிரலாக்க மொழிகள், இயக்க முறைமை (OS), டேட்டாபேஸ் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும்.

BCA மற்றும் B.Sc (CS)... இரண்டு படிப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பிசிஏ படிக்கும் மாணவர்கள் கோர் படிப்பான கணினியுடன் சிறிது வணிகவியல் மற்றும் வியாபாரத்தின் மேலாண்மையைப் பற்றிப் படிப்பார்கள். இந்தப் படிப்பு தொழில்நுட்பத் துறையையும் வியாபாரத் துறையையும் இணைக்கும் பாலமாக இருக்கும். B.Sc (Computer Science) படிக்கும் மாணவர்கள் வன்பொருள் கூறுகள் (Hardware Components) பற்றி கூடுதலாகப் படிப்பார்கள்.

பிசிஏ முடித்த பின்னர் என்ன மேல்படிப்பு படிக்கலாம்?

பிசிஏ முடித்த பின் முதுகலையில் எம்சிஏ (MCA), எம்.டெக் (M.Tech) போன்ற படிப்புகள் படிக்கலாம். விப்ரோ நிறுவனத்தில் தாங்கள் பணியில் அமர்த்தும் பிசிஏ பட்டதாரிகளை, அவர்களே பிட்ஸ் பிலானியில் எம்.டெக் பகுதி நேர படிப்பு படிக்க வைக்கிறார்கள்.

கணினி இல்லாத மாணவர்களுக்கு பிசிஏ படிப்பு கடினமாக அமையுமா?

இன்றைய சூழ்நிலையில் கணினி என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஒருவேளை மாணவரிடம் கணினி இல்லை என்றாலும், அனைத்துக் கல்லூரிகளிலும் கணினி ஆய்வக வசதி இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் போதுமானது. இறுதி ஆண்டு படிக்கும்போது கணினி இருந் தால் பயனுள்ளதாக இருக்கும்.

ஹார்ட்வேர் ஜாப்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் ஜாப்ஸ்... என்னென்ன பணிகள்?

கணினித்துறையில் Hardware Jobs என்பது Networking, Desktop Support, Embedded System ஆகிய பணிகளை மேற்கொள்ள வைக்கும். Software Jobs என்பது Software Engineer, Programmer, Team Leader, Full Stack Developer, Technical Leader, System Analyst, Data Scientist, Artificial Intelligence, Machine Learning, Deep Learning, Cryptography ஆகிய பணிகளை மேற்கொள்ள வைக்கும்.

பிசிஏ சிலபஸ் ஹார்ட்வேர் பணி களுக்குத் தயார்படுத்துமா, சாஃப்ட்வேர் பணிகளுக்குத் தயார்படுத்துமா?

பிசிஏ மாணவர்கள் சாஃப்ட்வேர் பணிகளுக்குத் தயார்படுத்தப்படு வார்கள்.

பிசிஏ முடித்த மாணவர்களுக்கு எந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது?

பிசிஏ பட்டதாரிகளுக்கு மென்பொருள் துறையில் (Software) வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மாணவர்கள் தங்கள் பணியை Programmer ஆகத் தொடங்கி Team Leader, Technical Leader, Software Engineer, System Analyst என முன்னேறலாம். Wipro, Infosys, Tcs, Hexaware, Zoho, Freshwork போன்ற நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன.

ஐடி துறையில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது?

மற்ற துறைகளை ஒப்பிடும்போது கணினி துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. விப்ரோ நிறுவனம் ‘Women of Wipro (WoW)’ என்ற திட்டத்தைத் தொடங்கி, ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண் களைப் பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனமும் பணியமர்த்துதலில் பாலின பகிர்வு திட்டங்களை உருவாக்கியுள்ளது.

ஐ.டி துறையில் வளர்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன?

சூழ்நிலைகளைக் கையாளவும், மனிதர்களுடன் இணைந்து வேலைசெய்யவும், நடப்பு டெக்னாலஜி பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். வேலை செய்யும் திறன், நேர நிர்வாகம், அனுபவம் இவையெல்லாம் சீராக இருந்தால் முன்னேற்றம் நிச்சயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு