Published:Updated:

புத்தகத் திருவிழா 2020: 4,700 மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்த நெல்லை மாவட்ட ஆட்சியர்!

புத்தகம் வாசிக்கும் மாவட்ட ஆட்சியர்
புத்தகம் வாசிக்கும் மாவட்ட ஆட்சியர்

நெல்லையில் நடக்கும் 4-வது புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புத்தகத் திருவிழா தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் உள்ள புத்தகப் பிரியர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. 

புத்தக விழா ஏற்பாடுகள்
புத்தக விழா ஏற்பாடுகள்

நாள்தோறும் சாகித்ய அகாடமி விருதாளர்கள் கௌரவிக்கப்படுவதுடன், முக்கிய எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய புத்தகங்கள் வெளியீடு, கவியரங்க நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி, மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் எனப் பொதுமக்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்து வருகிறது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் புத்தகத் திருவிழாவுக்கு வர வேண்டும் என்பதற்காக இலவசப் பேருந்து வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. 

அரங்கங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
அரங்கங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையிலும் வாசிப்பின் அவசியத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரே இடத்தில் 4,700 மாணவர்கள் புத்தகங்களை வாசிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நெல்லையில் உள்ள பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் கலந்துகொண்டார். ஒரே இடத்தில் 4,700 பேர் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், தானும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார். 

மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா
மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா

இது குறித்து நெல்லை மாநகராட்சி மகளிர் பள்ளி மாணவிகள் கூறுகையில், ``மாவட்ட ஆட்சியரே எங்களோடு தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்ததைப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. அவரைப் பார்த்த பின்னர் நாங்களும் நன்றாகப் படித்து அவரைப் போல உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதை நிச்சயம் நிறைவேற்றுவோம்’’ என்று தெரிவித்தனர்.

பின் செல்ல