Published:Updated:

'கனவுகளை விதைத்த ஆசிரியர்கள்!'- பிரபலங்களின் நெகிழ்ச்சி #TeachersDay

Teachers day
Teachers day

`எனக்கொரு ஆசிரியர் இருந்தார். எழுதும் பேனாவில் மை தீர்ந்து, அவரிடம் பேனா கேட்டால் எனக்குத் தரமாட்டார். ஆனால், வேறு யாராவது பேனா கேட்டால் கொடுப்பார். சாதிய ரீதியாகக் குறிப்பிட்டு அவர் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.’

தன்னம்பிக்கையாளராக இருங்கள்; உழைப்பாளியாக இருங்கள்; செல்வத்தையும் சிந்தனையையும் ஒருசேரச் சேகரியுங்கள். பகுத்தறிதலற்ற வாழ்வு பொய்த்துப்போகும். பகுத்தறிதலற்ற மனிதர் மிருகத்துக்கு ஒப்பானவர். செயலற்று இருக்காமல் செயல்படத் தொடங்குங்கள். இன்றே கல்வி கற்கத் தொடங்குங்கள். ஒடுக்கப்பட்டவர்களின் துன்பங்கள் உங்கள் கல்வியால் நீங்கட்டும்.
- சாவித்திரி பாய் பூலே

இன்று ஆசிரியர் தினம். முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே போன்ற எண்ணற்ற ஆசிரியர்களை நினைவுகூர வேண்டிய தினம் இன்று. அந்தவகையில் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள் எனச் சில பிரபலங்கள் தங்களைப் பண்படுத்திய ஆசிரியர்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்கள்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

"நான் எனது வாழ்வில் பல துறைகளில் பணியாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு துறையிலும் எனக்கு ஒவ்வொருவர் ஆசிரியராக இருந்துள்ளனர். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டுள்ளேன். அந்த வகையில் எனக்குப் பல ஆசிரியர்கள். மூன்று நபர்களை எனது ஆசிரியர்களாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அறிவொளி இயக்கத்தில் நான் வேலை பார்த்த காலத்தில் பேராசிரியர் ச.மாடசாமி எனக்கு ஆசிரியராக இருந்துள்ளார். நான் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்தேன். அவர் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்தார்.

Writer Tamil selvan
Writer Tamil selvan

அவரிடமிருந்துதான் எளிய மக்கள் எப்படிப் சிந்திப்பார்கள், அவர்களை எப்படிக் கல்விக்குள் அழைத்து வருவது போன்ற விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனது மார்க்சியம் தொடர்பான சிந்தனைகளுக்கு எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஆய்வாளர், எழுத்தாளர் நா.வானமாமலை. அவரிடமிருந்தும் அவரது எழுத்துகளிலிருந்தும்தான் சமூகத்தை எப்படிப் புரிந்துகொள்வது, மார்க்சிய பார்வை கொண்டு எப்படிச் செயல்படுவது என்பவை பற்றி அறிந்தேன்.

தமிழகம் குறித்தும், தமிழக மக்களின் வாழ்வு குறித்தும் அறிந்துகொள்ள அவரது எழுத்துகள் எப்போதும் துணை நிற்பவை. மற்றொருவர் எழுத்தாளர் ராஜ் கௌதமன். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு குறித்தும், அவர்களது வாழ்வை இலக்கியத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்" எனத் தனது ஆதர்சங்கள் குறித்துப் பகிர்ந்தார்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன்

“என்னைப் பாதித்து எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் தமிழாசிரியர் இரா.இளங்குமரனார். ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவருடன் பயணித்தேன். அவருடைய நூலகத்தில் மொத்தம் 40,000 புத்தகங்கள் இருந்தன.

Su. Venkatesan
Su. Venkatesan

நூலகம் மற்றும் புத்தகங்கள் சார்ந்த கனவுகளுக்கு விதைபோட்டது அவர்தான். இன்றளவும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது முடிவான சமயம், வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பு அவரிடம் சென்று வாழ்த்து பெற்றேன். எனது முடிவை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் நான் வெற்றிபேற வேண்டும் என வாழ்த்தினார்.”

இயக்குநர் வசந்தபாலன்

“ஆசிரியர் என்பவர் வெறும் பாடம் நடத்துபவராக இல்லாமல் நமக்குள்ளான தேடலைத் தூண்டுபவராக இருக்க வேண்டும். அந்த வகையில் எனக்கு ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பில் பாடமெடுத்த ஆசிரியர் அழகர்சாமி, தமிழாசிரியர் பால்சாமி மற்றும் ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும், கல்லூரிக் காலத்தில் என் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் ரவிச்சந்திரன்.

Vasantha balan
Vasantha balan

இவர்கள் தவிர எழுத்தாளர் பாலகுமாரன் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் முக்கியமானவர்கள். குருகுலக் கல்வி என்பது எத்தனை முக்கியம் என்பதை ஷங்கருடன் இருந்த காலத்தில் உணர்ந்தேன். இன்னமும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் செய்கிற பல்வேறு விஷயங்களைதான் என்னுடைய 26 ஆண்டுக்காலத் திரையுலக வாழ்க்கையில் பின்பற்றியிருக்கிறேன்.

இவர்கள் கடந்து என்னுடைய தந்தையும் எனக்கு ஒரு குரு. வாழ்வை சிக்கனமும் ஒழுக்கமுமாக எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொடுத்தவர் அப்பாதான். இத்தனை ஆசிரியர்கள் சூழ தான் நான் உருவாகியிருக்கிறேன்.”

கவிஞர் உமாதேவி

“நமது ஊர் அதன் இயற்கைச் சூழல் நமக்கு பலவற்றைக் கற்றுத்தரும். அந்தவகையில் எங்கள் நிலமும் அங்கிருந்த மனிதர்களும்தான் எனக்கு முதல் ஆசிரியர்கள். என்னுடைய மூன்றாம் வகுப்பு ஆசிரியர் சந்திரகுப்தன், “கண்டதைப் படிப்பவன் பண்டிதனாவான். கண்டதைத் திண்பவன் குண்டனாவான்” என்று அடிக்கடிச் சொல்வார். அவர் சொன்ன வார்த்தைதான் எதையும் ஒதுக்காமல் படிக்க வேண்டும் என்கிற சிந்தனையை எனக்குள் விதைத்தன. அதை இப்போதும் எனது மாணவிகளுக்குச் சொல்கிறேன்.

Uma devi
Uma devi

ஆசிரியரை கொண்டாடும் இந்தத் தினத்தில் ஆசிரியர்கள், பிள்ளைகளைக் கொண்டாடுவதும் எத்தனை முக்கியமானது என்பதையும் குறிப்பிட வேண்டும். நான் படித்த வந்தவாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் எனக்கொரு ஆசிரியர் இருந்தார். எழுதும் பேனாவில் மை தீர்ந்து, அவரிடம் பேனா கேட்டால் எனக்குத் தரமாட்டார். ஆனால், வேறு யாராவது பேனா கேட்டால் கொடுப்பார். சாதிய ரீதியாகக் குறிப்பிட்டு அவர் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்றவர்களுக்கு நடுவே ரத்தினமாகச் சில ஆசிரியர்களும் எனக்கு அமைந்தார்கள்.

8 லட்சம் ரூபாயில் கட்டடப் பணி, வேன் வசதி; வியக்க வைக்கும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்! #TeachersDay

ஆறாம் வகுப்பு படிக்கும்போது இருந்த மரகதவள்ளி, அழகி, புஷ்பலதா, ஹேமலதா, எஸ்தர் ஆகிய ஆசிரியர்கள் என்னை அங்கீகரித்தார்கள். ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல எல்லோரும் கை தூக்குவோம். அவர்கள் என்னைக் குறிப்பிட்டு எழுப்பி பதில் சொல்லச் செய்வார்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அந்த வயதில் அது மிகப்பெரிய அங்கீகாரம்.

அவர்களுடைய அங்கீகாரம் அவர்கள் மேல் எனக்கு அன்பை விதைத்தது. இவர்கள் தவிர, என்னை அரசியல் ரீதியாகக் கட்டமைக்கச் செய்த அம்பேத்கரின் எழுத்துகளும் பெரியாரின் சிந்தனைகளும் எனக்கு ஆசிரியர்களாக இருந்தன எனச் சொல்வேன்”

அடுத்த கட்டுரைக்கு