இனி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனவும், 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது யுஜிசி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
யுஜிசி மூலம் நிதியளிக்கப்படும் 45 மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் தேர்வு கட்டாயம். பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (CUET) என்பது கணினிமயமாக்கப்பட்ட தேர்வு. முதன்முதலில் நடைபெற இருக்கும் இந்தத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும்.
45 பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை இனி இந்தப் பொதுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். மேலும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்தப் பொதுத் தேர்வினை எழுதுவதற்கான தகுதியாக வேண்டுமானால் 12 வகுப்பு தேர்வு மதிப்பெண்களைப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தலாம் என என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் திங்கள்கிழமை அறிவித்தார்.

சிறுபான்மையினருக்கான இடங்களை ஒதுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களும் இந்தப் பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களின் ஒதுக்கீட்டை இந்தத் தேர்வு பாதிக்காது, ஆனால் அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு மூலமே சேர்க்கப்பட வேண்டும் என யுஜிசியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வு NCERT பாடப்புத்தகங்களின் அடிப்படையில் மல்டிபுள் சாய்ஸ் கேள்விகளைக் கொண்டிருக்கும் மற்றும் தவறான பதில்களுக்கு நெகடிவ் மார்க்ஸ் உண்டு. நுழைவுத் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.