Published:Updated:

120 நகரங்களில் 115வது இடம்! - கல்வியில் பின்தங்கிய நகரமா சென்னை?

கலிலுல்லா.ச

இந்திய அளவில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில்தான் 50 சதவிகித கல்லூரிகள் இருக்கின்றன.

உயர்கல்வி - மாதிரிப்படம்
உயர்கல்வி - மாதிரிப்படம்

உலக அளவில் உயர்கல்விக்கான சிறந்த நகரங்கள் என்று 120 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவில் 4 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 120 நகரங்கள் பட்டியலில் சென்னை 115-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமாரிடம் பேசினோம். ``கியூ எஸ் (QS) என்ற அழைக்கக்கூடிய குவாக்குரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds) என்ற நிறுவனம் உலக அளவிலே உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய ஆய்வுகளை கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்த ஆண்டு, பெஸ்ட் ஸ்டூடன்ட் சிட்டி ரேங்கிங் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கக்கூடிய நகரங்கள் என்ற அடிப்படையில் உலக அளவில் 120 நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த 120 இடங்களில் முதல் இடத்தை லண்டன் பெற்றுள்ளது. இரண்டாவது டோக்கியோவும் மூன்றாவது இடத்தை மெல்போர்னும் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் 4 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டும் லண்டன்தான் முதலிடம், இந்தாண்டு ஆய்விலும் லண்டன்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவிலே இந்தாண்டு வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், கடந்தாண்டு ஆய்வறிக்கை பட்டியிலில் மும்பை மட்டும்தான் இருந்தது. ஆனால், இந்தாண்டு இந்தியாவிலிருந்து பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை ஆகிய நான்கு நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் வருத்தம் என்னவென்றால், 120 நகரங்களில் பெங்களூரு 81-வது இடம்; மும்பைக்கு 85-வது இடம்; டெல்லிக்கு 113-வது இடம்; சென்னைக்கு 115-வது இடம். இந்தியாவில் இருக்கிற 4 நகரங்கள் பட்டியலிலே சென்னைக்குத்தான் கடைசி இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த 120 நகரங்களிலே 115-வது இடத்தில்தான் சென்னை இருக்கிறது. சென்னையையும், தமிழ்நாட்டையும் பெரும்பாலும், மெடிக்கல் ஹப், எஜூகேஷன் ஹப் என்று குறிப்பிடுகிறார்கள். மெடிக்கலிலே உலக அளவிலே தரம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிற இடமாகப் பார்க்கப்படுவதுபோல, மிக அதிக கல்வி நிறுவனங்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதுவும் சென்னையைச்சுற்றி ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

பட்டதாரிகள்- - மாதிரிப்படம்
பட்டதாரிகள்- - மாதிரிப்படம்

ஏன் குறைவான ரேங்கிங் சென்னைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது. ஆறு காரணிகள் அடிப்படையில் இந்த சர்வே எடுத்திருக்கிறார்கள். டாப் ரேங்க் யூனிவர்சிட்டி நகரத்தில் எத்தனை இருக்கிறது. மொத்த மக்கள் தொகைக்கும் அந்த நகரத்தில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம். கல்வி நிறுவனங்களிலே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தரம் எப்படி இருக்கிறது?. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் எப்படியிருக்கின்றன. செலவிடப்படும் தொகைக்கு ஏற்ற கல்வி வழங்கப்படுகிறதா?. மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பட்ட கருத்துகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகின்ற ஆய்வில் சென்னை பின்தங்கியிருக்கிறது.

சென்னை மாதிரியான பெருநகரங்களில் டாப் ரேங்கிங் பல்கலைக்கழகங்கள் இல்லை; கல்விக்கான கட்டணம் அதிகமாயிருக்கிறது என்பதும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இது இரண்டும் சென்னை பின்தங்கியதற்கு பிரதான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். புதிய கல்விக்கொள்கையில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், உலகத் தரத்துக்கு மாணவர்களை தயார்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கல்வியில் இரண்டு விஷயங்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் கலாசாரம், பண்பாடு மாறிடாமல், உலகத்தரத்துக்கு நிகரான கல்வியை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். அதற்கு உயர்கல்வி தரத்தில் பயணிக்க ரொம்ப தூரம் தேவைப்படுகிறது. அதில் புதியகல்விக்கொள்கையில் உயர்கல்விக்குத்தேவையான பலதிட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

`ஆனந்தம்' செல்வகுமார்
`ஆனந்தம்' செல்வகுமார்

புதிய கல்விக்கொள்கை அமலுக்குப் பிறகாவது உயர்கல்வித்தரம் உயரும் என நம்புகிறோம். ஆய்வறிக்கையில் மற்றொரு முக்கியமான விஷயம், இந்தியாவின் உயர்கல்வியை எடுத்துப் பார்க்கும்போது, ஜிஇஆர் (Gross enrollment ratio) ரேஷியோவில் 25.2 சதவிகிதத்தில் இருக்கும்போது, தமிழகத்தின் ஜிஇஆர் மிக அதிக அளவில் 46.9 என்ற அளவில் இருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய அளவில் 4-ல் ஒருவர் உயர்கல்வி செல்லும் நிலையில் தமிழகத்தில் 2-ல் ஒருவர் உயர்கல்விக்குச் செல்கிறார். இந்திய அளவில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில்தான் 50 சதவிகித கல்லூரிகள் இருக்கின்றன. எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் கல்வித்தரம் குறைவாக இருக்கிறது என்பதுதான் முரண்பாடான விஷயம்” என்கிறார்.