Published:Updated:

`பழைய வினாத்தாள், சில குறிப்புகள்!'-சி.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சென்னை மாணவியின் சக்ஸஸ் சீக்ரட்

மாணவி பிரியா
மாணவி பிரியா

சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி சி.எஸ் தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் நிறுவனச் செயலர் பதவிக்காக இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பனி செக்ரட்டரிஷிப் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் சி.எஸ் எக்ஸிகியூட்டிவ் பழைய பாடத்திட்டத்துக்கான தேர்வில் சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ICSI
ICSI

பொதுவாக சி.ஏ, சி.எஸ் தேர்வுகள் என்றாலே மிகவும் கடினமாக இருக்கும். அதற்காக நிறைய படிக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்ல நாம் கேட்டதுண்டு, ஆனால் சென்னையைச் சேர்ந்த மாணவி சி.எஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்றால் அவரை பாராட்டியே ஆக வேண்டுமல்லவா!

மாணவி பிரியா பற்றியும் இந்தத் தேர்வுக்காக அவர் தன்னை எப்படி தாயார் படுத்திக்கொண்டார் என்பதையும் அறிந்துகொள்ள அவரை தொடர்புகொண்டோம். முதலில் போனை எடுத்த பிரியாவின் தாயார், மகள் அலுவலகத்துக்குச் சென்றிருப்பதாகவும் இடைவேளையில் பேசுவார் என்றும் மகிழ்ச்சி ததும்பும் குரலில் கூறினார். வேலைக்குச் சென்றுகொண்டே படித்து தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ள பிரியாவை நினைத்து சற்று ஆர்ச்சர்யமாக இருந்தது.

Representation image
Representation image

தொடர்ந்து அவரது அழைப்புக்காகக் காத்திருந்து பேசினோம். ``விகடனின் வாழ்த்துகளுக்கு நன்றி கூறியபடியே பேசத் தொடங்கினார் பிரியா. என் தந்தை கணேசன் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். தாய் மீனாட்சி இந்தியத் தர நிர்ணய ஆணைய அமைப்பின் அதிகாரியாகப் பணி செய்து வருகிறார். நான் 8-ம் வகுப்பு வரை கோயம்புத்தூரில் தங்கிப் படித்தேன், பிறகு சென்னை வந்து மீதிப் படிப்பை முடித்தேன். பள்ளியில் படிக்கும் போதிலிருந்து வணிகவியல் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதனால் கல்லூரியில் பி.காம் கோர்ஸைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். தொடர்ந்து தற்போது மைலாப்பூரில் உள்ள எஸ்.கே.மூர்த்தி அசோசியேட்ஸ் ஆடிட்டர் நிறுவனத்தில், சி.ஏ படித்து வருகிறேன்.

இதற்கு ஒரு பகுதியாக சி.எஸும் படிக்கலாம் என்று அதையும் படித்து வந்தேன். சி.ஏ படிப்பதால் சி.எஸ்ஸின் சில பாடங்களும் அதையொட்டியே வரும். அதனால் படிக்க எனக்கு எளிதாக இருந்தது. அகவுன்ட்ஸ் (Accounts) லா (laws) போன்ற அனைத்தும் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் சி.எஸ்ஸில் லா மட்டும் கொஞ்சம் அதிகமாகப் படிக்க வேண்டியிருந்தது. லா எப்போதுமே கஷ்டம்தான். அதனால் தேர்வு நெருங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் அதில் அதிக கவனம் செலுத்திப் படித்தேன். இதை முன்பே படித்தால் மறந்துவிடும் எனத் தோன்றியது. அதனால் இதை மட்டும் இறுதியாகப் படித்தேன்.

Representation image
Representation image

லாவில் எப்போதும் நினைவுத் திறனைத்தான் சோதிப்பார்கள், அதற்காக நிறைய உழைத்தேன் மற்ற அனைத்தும் எளிதாகத் தான் இருந்தது. தேர்வு தொடங்குவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே அனைத்துச் சமூகவலைதளப் பக்கங்களையும் மூடிவிட்டுப் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அதே நேரம் நான் சி.ஏ படித்துக்கொண்டிருப்பதால் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால் இன்னும் அதிகமாகவே படித்தேன். ஆனால் என் கவனம் சி.எஸ் மீது சற்று அதிகமாக இருந்தது. ஒரு மாதமாக நிறைய வினாத்தாள்களைத் தேடி நானே விடை எழுதிப் பார்த்தேன். சி.எஸ்ஸைப் பொறுத்தவரையில் பழைய வினாத்தாள்களுக்கு விடை எழுதிப்பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தினமும் நான் படித்ததை நிறைய மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பேன், பொதுவாக எனக்குக் குறிப்பு எடுத்துப் படிக்கும் பழக்கும் உண்டு. அதுவும் என் தேர்வுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதுமட்டுமல்லாமல் நான் படித்த கல்லூரி தரப்பிலிருந்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அங்கு நடத்தும் சி.ஏவுக்கான படிப்புகள் நான் சி.எஸ் எழுதுவதற்கு எளிதாக இருந்தது. மேலும் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய சி.எஸ் வெற்றியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பரிந்துரை உத்வேகம் போன்ற அனைத்தும் என் தேர்வுக்குப் பெரிதும் உதவியது” எனப் புன்னகை மாறாமல் பேசினார்.

Representation image
Representation image

வரும் காலங்களில் தேர்வெழுதவுள்ளவர்களுக்குப் பிரியா கூறும் சில தேர்வு டிப்ஸ் :

* படிக்கும் நேரம் என்பது அனைவருக்கும் மாறும். அதன்படி அதைப் பின்பற்றிப் படித்தால் நல்லது.

* மைண்ட் மேப் தயார் செய்து படித்தால் உதவியாக இருக்கும்.

* முக்கியமாகக் குறிப்புகள் எடுப்பது, படித்ததை எழுதிப் பார்ப்பது போன்ற அனைத்தும் ஞாபக திறனை அதிகரிக்கும்.

* சி.எஸ்ஸைப் பொறுத்தவரை நிறைய வினாத்தாள்களுக்கு விடை எழுதிப் பாருங்கள், ஃபார்முலாக்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். சில ஃபார்முலாக்கள் மாறவே மாறாது. இது அனைத்தையும் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு