அரசியல்
அலசல்
Published:Updated:

‘தொலைதூர பட்டங்கள் செல்லாது!’ - சிக்கலில் அண்ணாமலை பல்கலை... தவிக்கும் மாணவர்கள்!

 சிக்கலில் அண்ணாமலை பல்கலை... தவிக்கும் மாணவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கலில் அண்ணாமலை பல்கலை... தவிக்கும் மாணவர்கள்!

திறந்தவெளி, தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி விதிமுறைகளின்படி எந்த உயர்கல்வி நிறுவனமும், யு.ஜி.சி அனுமதி வழங்கும்வரை திறந்த மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது

‘‘ ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் செல்லாது’ என்ற யு.ஜி.சி-யின் அறிவிப்பை, ரயில்வேதுறை செயல்படுத்திவிட்டதால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. அது குறித்து உங்களிடம் பேச வேண்டும்” என்று ஜூ.வி ஆக்‌ஷன் செல் (jvactioncell@vikatan.com) மின்னஞ்சலுக்கு வந்த புகாரையடுத்து, உடனே அவர்களைத் தொடர்புகொண்டோம்.

கேரளா, ஆந்திரா, ஹைதராபாத் மாநிலங் களைச் சேர்ந்த மாணவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், “கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி யு.ஜி.சி-யின் செயலர், பேராசிரியர் ரஜ்னிஷ் ஜெயின் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் கல்விக்கான நிபந்தனைகளை முற்றிலும் மீறி, யு.ஜி.சி-யின் அனுமதியின்றி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வித் திட்டங்களை நடத்திவருகிறது.

‘தொலைதூர பட்டங்கள் செல்லாது!’ - சிக்கலில் அண்ணாமலை பல்கலை... தவிக்கும் மாணவர்கள்!

திறந்தவெளி, தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி விதிமுறைகளின்படி எந்த உயர்கல்வி நிறுவனமும், யு.ஜி.சி அனுமதி வழங்கும்வரை திறந்த மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. அதன்படி 2014-2015 ஆண்டுக்குப் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை யு.ஜி.சி அங்கீகரிக்கவில்லை. அதனால் யு.ஜி.சி-யின் அனுமதியின்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய தொலைதூரப் படிப்புகள் செல்லாதவை. அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவு களுக்கும், பாதிப்புகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகமே முழுப் பொறுப்பு. எனவே, பொதுமக்களும் மாணவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழக திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது’ எனக் கூறியிருந்தார். அதிர்ச்சியடைந்த நாங்கள் அப்போது பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘யு.ஜி.சி-யிடம் பேசி பிரச்னையை சரிசெய்துவிடுவோம்’ என்று கூறினார்கள். ஆனால், யு.ஜி.சி இவர்கள் கூறும் கதைகளைக் கேட்காததால், சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை கேட்டார்கள்.

ஆனால், தடையாணை கொடுக்க மறுத்த நீதிமன்றம், அப்போது தேர்வெழுத மட்டும் அனுமதி கொடுத்துவிட்டு வழக்கை ஒத்தி வைத்துவிட்டது. இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு யு.ஜி.சி தடைவிதித்ததால், விண்ணப்பங்கள் வழங்குவ தும் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் நாங்கள் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டபோது, ‘இது ஒரு பிரச்னையே இல்லை... சரியாகிவிடும்’ என்றார்கள். ஆனால், கடந்த ஜூன் மாதம் கிழக்கு ரயில்வேயின் பணியாளர்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி (ODL - Open and Distance Learning) மூலம் படித்தவர்களின் பட்டப்படிப்புகள் செல்லாது என யு.ஜி.சி அறிவித்திருக்கிறது. அதனால் அந்தச் சான்றிதழ்கள் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப் படாது’ என்று கூறியிருக்கிறது. ஆனால், இப்போதும் பல்கலைக்கழக நிர்வாகம் எங்களுக்கு பதில் தர மறுக்கிறது. இவர்களால் எங்கள் வாழ்வே சூனியமாகிவிட்டது” என்று குமுறினார்கள்.

‘தொலைதூர பட்டங்கள் செல்லாது!’ - சிக்கலில் அண்ணாமலை பல்கலை... தவிக்கும் மாணவர்கள்!

இது குறித்துப் பேச பல்கலைக் கழகப் பதிவாளர், பேராசிரியர் சீதாராமனைத் தொடர்புகொண்ட போது, ‘‘தொலைதூரக் கல்வியை 1973-ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டதால், யு.ஜி.சி விதிகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. அதனால் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். தொலைதூரக் கல்வி இயக்குநரிடம் பேசுங்கள்” என்றார். தொலைதூரக் கல்வி இயக்குநர், பேராசிரியர் சிங்காரவேலை தொடர்புகொண்ட போது, ‘‘இந்த வருடத்துக்கான போர்ட்டல் திறக்கப்பட்டதும், யு.ஜி.சி அங்கீகாரம் கொடுத்துவிடுவார்கள். நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கிறது. நாங்களும் யு.ஜி.சி-யிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். உயர்கல்வித்துறைக்கும் கடிதம் கொடுத்திருக் கிறோம்” என்றார்.

 சிங்காரவேல்
சிங்காரவேல்

‘‘அரசு கையகப்படுத்திய பல்கலைக்கழகத்துக்கு யு.ஜி.சி விதிகள் பொருந்தாது என்பது ஏற்புடையதா... இந்தியா முழுவதும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்பது யு.ஜி.சி-யின் விதி. அப்படியிருக்கும்போது இனிமேல் எப்படி விண்ணப்பங்களை வழங்குவார்கள்... நீதிமன்றம் இவர்களின் வழக்கை ஒத்திவைத்துவிட்டது என்பதுதான் உண்மை. தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைதூரக் கல்வித் திட்டங்களுக்கு எல்லை வரையறை கிடையாது. அதனால் இந்தியா முழுவதும் தொலைதூரக் கல்வித் திட்டத்தை செயல்படுத்திவந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆனால், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள், மாவட்ட எல்லைகளை வரையறுத் துக்கொண்டுதான் செயல்பட முடியும். அதனடிப்படையில் 2012-ம் ஆண்டு அரசு கையகப்படுத்தியதும், இந்தியா முழுவதிலுமுள்ள பயிற்சி மையங்களை மூடி, மாவட்டங்களை வரையறுத்திருக்க வேண்டும். ஆனால், அது பணம் புழங்கும் ஏரியா என்பதால், பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை. கிழக்கு ரயில்வேயின் அறிவிப்பை தெற்கு ரயில்வேயும் வெளியிடும் போதுதான் இதன் தீவிரம் புரியும்” என்கின்றனர் அங்கிருக்கும் பேராசிரியர்கள்.

லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்னையில், தமிழக அரசு உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம்!