Published:Updated:

மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்... நாட்டில் குழந்தை தொழிலாளர்களே இல்லையா?

பள்ளிகள்
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிகள்

விருதுநகர் சுற்றுவட்டாரங்களில் வேலைபார்த்த ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இங்கு படித்துவருகிறார்கள்

மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்... நாட்டில் குழந்தை தொழிலாளர்களே இல்லையா?

விருதுநகர் சுற்றுவட்டாரங்களில் வேலைபார்த்த ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இங்கு படித்துவருகிறார்கள்

Published:Updated:
பள்ளிகள்
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிகள்

கொரோனா ஏற்படுத்திய இழப்புகளால் நாடெங்கும் வறுமை அதிகரித்துள்ள சூழலில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சொல்லப்போனால், பெருநகரங்களின் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், சிறுமிகள் அனைவருமே குழந்தைத் தொழிலாளர்கள்தான். இந்த இக்கட்டான சூழலில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து, அவர்களுக்குக் கல்வி கற்பித்துவந்த சிறப்புப் பள்ளிகளை இந்த மாதத்துடன் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு!

குடும்ப வறுமையால் சிறுவர்கள் கல்வி கற்காமல் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், 1986-ல் தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்பு ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. அந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சிறப்புப் பள்ளிகள் இயக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அவற்றை மத்திய அரசு மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள கல்வியாளர்கள், `இந்தத் திட்டத்தை முடக்குவதால் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்’ என்று எச்சரித்திருப்பதுடன், `தற்போது நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதா?’ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்... நாட்டில் குழந்தை தொழிலாளர்களே இல்லையா?

தமிழகத்தில் 1988-ல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமுள்ள விருதுநகர், கோவை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, சென்னை உட்பட 15 மாவட்டங்களில் சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. அங்கெல்லாம் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மாதம் 400 ரூபாய் ஊக்கத்தொகையுடன் சேர்க்கப்பட்டார்கள். தற்போது இந்தப் பள்ளிகளை மூடச் சொல்லி உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, இங்கு படிக்கும் மாணவர்களை ரெகுலர் பள்ளிகளில் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால், தமிழகத்திலுள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் 3,213 மாணவர்களின் கல்வியும், 724 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து விருதுநகரில் இயங்கிவரும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஆசிரியர் செபாஸ்டின் மேரியிடம் பேசினோம். ‘‘விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 15 சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. விருதுநகர் சுற்றுவட்டாரங்களில் வேலைபார்த்த ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இங்கு படித்துவருகிறார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் நான் ஆசிரியராக பணியாற்றிவந்தாலும், ஏழாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குகிறேன். கடந்த 17 மாதங்களாக அந்தச் சம்பளமும் தரப்படவில்லை. அதேபோல மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவந்த 400 ரூபாய் ஊக்கத்தொகையும் 2016-லிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த வாரத்திலிருந்து பள்ளிகளையும் மூடப்போவதாக அறிவித்திருப்பதால், மாணவர்களுடன் சேர்த்து இங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி யிருக்கிறது” என்றார் கவலையுடன்!

மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்... நாட்டில் குழந்தை தொழிலாளர்களே இல்லையா?

இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அழகுஜோதி நம்மிடம், ‘‘இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுப் படிக்க வைத்துள்ளோம். கொரோனா காலகட்டத்தில் வேலையிழப்புகள், வறுமை அதிகரித்து குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துவிட்டார்கள். விருதுநகரில் கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 200 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, சிறப்புப் பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம். நாங்கள் தொழிலாளர் நலத்துறையின்கீழ் வந்தாலும், மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடை, பை, செருப்பு இவையெல்லாம் பள்ளிக் கல்வித்துறையிலிருந்து கிடைக்கின்றன. மதிய உணவு, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கிடைக்கிறது. தற்போது இந்தத் திட்டத்தை முடக்கப்போவதாக அறிவிப்பு வந்த நிலையில் இதை எங்கு சென்று முறையிடுவது என்று தெரியவில்லை” என்றார் வேதனையுடன்!

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட தங்கப்பாண்டியன்தான் தற்போது ஆனையூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருக்கிறார். அவரிடம் பேசினோம்... ‘‘1990-கள்லனு நினைக்குறேன்... பத்து வயசு இருக்கும். ஒரு அச்சாபீஸுல வேலை பார்த்தேன். காலையில ஒன்பது மணிக்குப் போனா நைட் வீட்டுக்கு வர பத்தாகிடும். உடம்பெல்லாம் கறுப்பு மசியோடு வருவேன். ஒருநாள் என்னைப் பார்த்த ஒரு டீச்சர் அக்கா, ‘படிக்கிறியா?’னு கேட்டாங்க. அப்ப எங்க வீட்டுல ரேஷன் அரிசி வாங்கக்கூட வழியில்லை. நான் வேலை செஞ்சாதான் ரெண்டு வேலை கஞ்சி குடிக்க முடியும். அதனால ரொம்பத் தயங்குனேன். ஆனா அந்த அக்கா, ‘நீ படிச்சா அரசாங்கம் உனக்குக் காசு கொடுக்கும்’னு சொன்னாங்க. சரின்னு தலையாட்டுனேன். அப்புறம் அவங்களே கையைப் பிடிச்சு கூட்டிட்டுப்போய் ஸ்கூல்ல சேர்த்தாங்க. நல்ல டிரெஸ், சாப்பாடு கொடுத்தாங்க. அந்த டீச்சர் அக்கா இல்லைன்னா நான் இன்னைக்கு ஒரு தலைவரா உசந்திருக்க மாட்டேன். படிப்புதான் என்னை இங்கே உட்கார வெச்சிருக்கு. இப்ப அந்தத் திட்டத்தையே முடக்கப் போறாங்கன்னு கேள்விப்பட்டதும் ரொம்ப கஷ்டமா இருக்குங்க” என்றபடி கண்கலங்கினார்!

செபாஸ்டின் மேரி, அழகுஜோதி, தங்கப்பாண்டியன்
செபாஸ்டின் மேரி, அழகுஜோதி, தங்கப்பாண்டியன்

இந்தத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் நம்மிடம், ‘‘ரெகுலர் பள்ளிகளில் இந்த மாணவர்களை சேர்க்கச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. ஒரு குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டால் கல்வியாண்டின் நடுவே திடீரென்று பள்ளியில் சேர்க்க வேண்டும். ரெகுலர் பள்ளிகளில் அப்படிச் சேர்ப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. மாணவரின் வயது, கல்வியாண்டின் இடையே சேர்ப்பதால் கற்பதில் குறைபாடு, ரெகுலர் மாணவர்களுடன் பழகுவதில் பிரச்னை எனப் பல்வேறு சிரமங்களைக் குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே வறுமை அதிகரித்துள்ளதால், ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிவருகிறார்கள். அவர்களை மீட்டு, கல்வி கற்பிப்பதற்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்துவது மிகப்பெரிய தவறு” என்றார்!

ஓர் அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியைவைத்துத்தான் ஒரு சமூகத்தின் நிலை மேம்படும். அந்த வகையில் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் திட்டத்தை முடக்குவது ஆரோக்கியமானது அல்ல!