Published:Updated:

`ஆன்லைன் வகுப்புகளை இப்படிக் கையாளுங்கள் மாணவர்களே!' - வழிகாட்டும் கல்லூரி முதல்வர்

ஆன்லைன் வகுப்புகளை எப்படி பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவுக்கு முடிவு எப்போது தெரியவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் இன்னும் சில மாதங்களுக்குக் கற்றலுக்கான வழி. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்கு உள்ள தயக்கங்கள், தேக்கங்கள், குழப்பங்கள் தீர்ந்து அதை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார், குமரகுரு வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர், முனைவர் ப. வெங்கடாசலம்.

``கொரோனா லாக்டௌனால் இந்த 2020-ல் ஆன்லைன் வகுப்பு என்ற புதிய கற்றல் முறைக்கு நாம் அறிமுகமாகியிருக்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு நம் கற்றலும் கற்பித்தலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களாகிய எங்களுக்கும் இது ஒரு புதிய பாடமாக அமைந்துள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகளை எப்படி பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

உங்களின் பங்கெடுப்பு முக்கியம்!

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களின் பங்களிப்பு ஒரு பகுதிதான். மீதிப் பொறுப்பு உங்களுடையதுதான். உங்களுடைய உதவி இல்லாமல் அவர்களுடைய பணி நிச்சயமாக முழுமையடையாது.

சொல்லப்போனால், ஆன்லைன் வகுப்புகளில் உங்கள் பங்கெடுப்பு வழக்கமான வகுப்பறையைவிட கூடுதலாக இருக்க வேண்டும். உடலளவில் கணினி அல்லது கைப்பேசி முன் அமர்ந்திருக்கும் பங்கெடுப்பை பற்றி நான் கூறவில்லை. மனதளவில் உங்களின் பங்கெடுப்பை பற்றி குறிப்பிடுகின்றேன்.

ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும்போது நீங்கள் கவனிப்பதும், குறிப்புகள் எடுப்பதும், கேள்விகள் கேட்பதும், அவ்வப்போது தலையசைத்து ஆமோதிப்பதும், புரியாதபோது சந்தேகத்தை வெளிப்படுத்துவதும், புரியும்போது முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டுவதும் என உங்கள் பங்கெடுப்பை ஆசிரியர்களுக்கு உணர்த்துங்கள். அது அவர்கள் பாடமெடுக்கும், கற்பிக்கும் முறைகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

சில ஆசிரியர்களின் பாடங்கள் `மொக்கை'யாக இருந்தால், அதையும் பக்குவமாக அவர்களிடம் சொல்லுங்கள். அது அவர்கள் புதிய கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள உதவும். கவனத்தைச் சிதறவிட்டு, கவனிப்பதுபோல நடிப்பது யாருக்கும் பயனளிக்காது. ஒவ்வொரு வகுப்பிலும் கேள்வி கேட்கவேண்டும் என்பதில்லை. கவனிப்பதும், அவசியத்தை ஒட்டிப் பேசுவதும் முக்கியம். வகுப்பு முடிந்த பின்னரும் உங்கள் கேள்விகள், சந்தேகங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பலாம்.

உங்கள் பங்கெடுப்பு இல்லாதபோது, தட்டில் பரிமாறப்பட்ட உணவை ரசனையின்றி கடமைக்காகச் சாப்பிடும்போது, அந்த உணவைத் தயாரித்தவர்களின் நிலைபோல, ஆசிரியர்களின் மனநிலை மாறிவிடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

education
education

சுயமாகக் கற்றுக்கொள்ளப் பழகுங்கள்!

ஆசிரியர், டியூஷன் ஆசிரியர் என்றே இதுவரை படித்துவந்த உங்களுக்கு, இப்போது சுயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஆன்லைன் வகுப்பு வழங்குகிறது. இந்த செல்ஃப் லேர்னிங், உங்கள் தன்னம்பிக்கையையும் வளர்க்கும். சுய சிந்தனையுடன், நீங்களாக, உங்களுக்குள் கேள்விகள் எழுப்பி பதில் காண முயலும்போது, உங்கள் திறன் இன்னும் சிறப்பாக வெளிப்படும்.

திட்டமிட்டால் கஷ்டமில்லை!

ஆன்லைன் கற்றலை எளிமையாக எடுத்துச்செல்ல, திட்டமிடல் அவசியம். பாடங்களை பகுதி பகுதியாகப் பிரிது, எதை, எப்போது படிக்க வேண்டும் என காலக்கெடுவோடு திட்டமிட வேண்டும். ஆசிரியரிடம் ஆலோசனை பெற்று திட்டமிடலாம், அல்லது உங்கள் திட்டத்தை அவரிடம் காட்டி கூராக்கிக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திட்டத்தை செயல்படுத்துவதில் தீர்க்கம்!

திட்டமிட்டதை நீங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். திட்டமிட்டதை, தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். இங்கு கற்கும் வடிவம், காலம் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால், உங்கள் முனைப்புக்கு ஏற்ப வெற்றி அமையும். படிப்பதற்கான முறைகளையும், நேரத்தையும் ஆசிரியர் உதவியுடனோ, சக மாணவரை பார்த்தோ தீர்மானித்துக்கொள்ளலாம்.

சுயபரிசீலனை செய்யுங்கள்!

இறுதியாக, ஆன்லைன் வகுப்பில் உங்களின் செயல்பாட்டை நீங்களே சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டும். பங்கெடுப்பு முதல் திட்டத்தை செயல்படுத்துதல்வரை உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் உங்களை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்களா? அல்லது, படிப்பதைத் தள்ளிப்போட்டு, படிக்காமல் இருக்க காரணம் தேடுகிறீர்களா? உங்களுக்கு நீங்களே மதிப்பெண் போட்டுக்கொள்ளுங்கள்.

கொரோனாவுக்கு முடிவு எப்போது என தெரியவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் இன்னும் சில மாதங்களுக்கு...

Posted by Vikatan EMagazine on Saturday, October 3, 2020

மாணவ நண்பர்களே, இடர் நிறைந்த, சங்கடமான இந்தச் சூழலை சவாலாகப் பாருங்கள். இந்தத் தடைகளை வாய்ப்புகளாக மாற்றி, உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளுங்கள். ஏற்கெனவே வகுப்புகளில் ஆர்வத்துடன் முழுமையாகப் பங்கெடுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரும் அதுபோல பங்கெடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு