Published:Updated:

`கற்பித்தலிலும் கையாடல்!'- அடுத்த சர்ச்சையில் பெரியார் பல்கலைக்கழகம்

அந்த கமிட்டி 5 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் எந்த ஓர் அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தாமலேயே நடத்தியதாகச் சொல்லி பல்கலைக்கழக நிதி கையாடல் செய்யப்பட்டது. இதைக் கண்டுபிடிப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியும் காணாமல் போனதால் பெரியார் பல்கலைக்கழக நிதி அலுவலகம் வரவு வைக்க முடியாமல் தவித்து வருகிறது.

குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் எடுக்காமல் சிறப்பு வகுப்புகள் எடுத்ததாக பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் பெற்றார்.
பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் கேட்டதற்கு, ``பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முத்துசெழியன் இருந்தபோது 2013-ம் ஆண்டு கற்றல்சார் குறை தீர்க்கும் மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகத்தில் குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு வெளியிலிருந்து திறமை வாய்ந்த சிறப்பு ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களின் கற்றல் திறனை மேம்படச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.

இதற்காக 11-வது ஐந்தாண்டுத் திட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இதழியல் பேராசிரியர் நடராஜன் செயல்பட்டு வந்தார். அவர் குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் எடுக்காமல் சிறப்பு வகுப்புகள் எடுத்ததாக பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் பெற்றார். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள சில பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு போலி பில் தயாரித்து நிதி அலுவலகத்தில் சமர்பித்தார்.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்
க .தனசேகரன்

ஆனால் பல்கலைக்கழக நிதி அலுவலகம் அந்த பில்லை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தது. அதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுவாமிநாதன் இருந்த போது இதைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி 5 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இதனால் கற்றல் சார் குறை தீர்க்கும் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பெற்ற நிதி ரூ.6.5 லட்சத்தை கணக்கில் ஏற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள்'' என்கிறார்கள்.

இதுபற்றி பல்கலைக்கழக நிதி அலுவலகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, ''ஆமாம் இது உண்மைதான்''. எப்படி இப்படிப்பட்ட தகவலெல்லாம் உங்களுக்கு கிடைக்கிறது என்றவர்கள், ''ஒவ்வொரு ஆண்டு தணிக்கையின் போதும் கற்றல் சார் குறை தீர்க்கும் மையத்தின் சார்பில் பெறப்பட்ட ரூ.6.5 லட்சம் நீண்ட காலமாக வரவு வைக்க முடியாமல் இருக்கிறோம்'' என்றார்கள். இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் கற்றல் சார் குறை தீர்க்கும் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன், ''பல்கலைக்கழகத்தில் குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு ஆய்வு மாணவர்களை வைத்து முறையாக வகுப்புகள் எடுக்கப்பட்டு அனைவரையும் தேர்ச்சி பெற வைத்துள்ளேன்.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியும் காணாமல் போனதால் பெரியார் பல்கலைக்கழக நிதி அலுவலகம் வரவு வைக்க முடியாமல் தவித்து வருகிறது.

ஒரு வகுப்பிற்கு 200 வீதம் பல ஆய்வு மாணவர்களை கொண்டு பல வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதற்கான பில் நிதி அலுவலகத்தில் சமர்ப்பித்தேன். அப்போது பதிவாளராக இருந்த அங்கமுத்து பேராசிரியர்கள் மீது இருந்த காழ்புணர்ச்சியின் காரணமாக பில் நிராகரிக்கப்பட்டது. பிறகு கமிட்டி ஆய்வு நடத்தி முடித்தது. ஆனால் இன்னும் அந்த கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வரும் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்யும் என நம்புகிறேன்'' என்றார்.