Published:Updated:

`வரையும் திறனும் வாசிப்பும் டிசைனிங் துறையில் ஜெயிக்க உதவும்’ - வெபினாரில் வழிகாட்டிய நிபுணர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்

`டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ கல்வி நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.ஆர்.ராமநாதன், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் க.சத்தியசீலன், ‘கேலக்ஸி இன்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.ரமேஷ்பிரபா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ (Dot School of Design) - ஆனந்த விகடன் சார்பில் ‘என்ன படிக்கலாம்..? எங்கு படிக்கலாம்..?’ என்ற மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ழோம் காணொலி மூலம் ஜூலை 19-ம் தேதி நடைபெற்றது. வடிவமைப்பு (Design) மற்றும் நுண்கலை (Fine Art) துறைகளில் உள்ள படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ கல்வி நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.ஆர்.ராமநாதன், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் க.சத்தியசீலன், ‘கேலக்ஸி இன்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.ரமேஷ்பிரபா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டினர். வடிவமைப்பு (Design) என்ற திறமையானது, வாழ்க்கையிலும் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை தன் சொந்த அனுபவங்களிலிருந்து க.சத்தியசீலன் எடுத்துரைத்தார்.

க.சத்தியசீலன்
க.சத்தியசீலன்

“ஓவியக் கல்லூரியில் சேர்ந்து எதிர் காலத்தில் சிறந்த ஓர் ஓவியராக ஆக வேண்டும் என்பது என் சிறு வயது கனவாக இருந்தது. சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கம் எனக்கு அதிகம். மதிப்பெண்களுக்காகப் பாடிப்பதைத் தாண்டி, நிறைய இலக்கிய நூல்களையும் பத்திரிகைகளையும் வாசிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அது என் கற்பனைத் திறனையும் சிந்திக்கும் திறனையும் வளர்ப்பதற்கு துணை செய்தன. ஓவியராக ஆக வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தபோதிலும், பொறியியல் கல்லூரியில் ‘எலக்ட்ரிக் அண்டு எலக்ட்ரானிக்ஸ்’ படிப்பில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, தஞ்சாவூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தேன். மாணவர்களுக்கு பாடங்களைத் தாண்டி நிறைய விஷயங்களைச் சொல்லித் தர வேண்டும் என்பதற்காக நிறைய படித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கட்டத்தில் ‘டிசைன்’ என்பது எவ்வளவு பெரிய ஏரியா என்பது புரிய ஆரம்பித்தது. பொதுவாக, ஜவுளிக்கடை விளம்பரங்களில் எண்ணற்ற டிசைன்கள் என்று குறிப்படுவார்கள். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்து ஐ.ஐ.டி-க்குள் போய் பார்த்தபோது, இன்டஸ்ட்ரியல் டிசைன் பற்றி தெரிந்துகொண்டேன். நாம் பணியாற்ற வேண்டிய ஏரியா இதுதான் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

டிசைனிங் பாட வகுப்பு
டிசைனிங் பாட வகுப்பு

இன்டஸ்ட்ரியல் டிசைன் குறித்து சொல்லித்தரக்கூடிய கல்வி நிறுவனங்கள் இங்கு இல்லை. வெளிநாட்டில் போய் படிக்க வேண்டுமென்றால், நிறைய செலவாகும். டெல்லி ஐ.ஐ.டி-யில் அந்த கோர்ஸ் இருந்தது. எனவே, போட்டித் தேர்வு எழுதிய டெல்லி ஐ.ஐ.டி-யில் சேர்ந்தேன். அங்கு படிப்பு முடிந்தவுடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தபோது சராசரி மாணவராக இருந்தநான், டெல்லி ஐ.ஐ.டி-யில் ஸ்டார் ஆக மாறினேன். அதற்குக் காரணம், டிசைன் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான். கூடவே, அதற்குத் தேவையான கற்பனைத் திறனும் சிந்தனை ஆற்றலும் எனக்கு அதிகமாக இருந்ததும் முக்கியக் காரணம். புத்தக வாசிப்பின் மூலமாக எனக்குள் சமூக உணர்வு ஏற்பட்டிருந்தது. நல்ல கதை சொல்லியும்தான். எனக்கு ஒரு கற்பனை, கனவு வரும். அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக விவரிப்பேன். டெல்லி ஐ.ஐ.டி-யில் படித்தபோது புராஜெக்ட்டில் ஏ கிரேடு வாங்கினேன். வரையும் திறன், இலக்கிய வாசிப்பு ஆகிய இரண்டும் டிசைனர் ஆவதற்கு மிகப்பெரிய பலமாக இருந்தன. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் படித்திருந்த நான், டிரான்ஸ்போர்டேசன் டிசைனராக மாறினேன்.

உயர்கல்வி சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்தந்த `ஆனந்த விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ வெபினார்!’

மெக்கானிக்கல் படித்தவர்கள் நிறைய பேர் இருந்தபோதிலும், டிரான்ஸ்போர்ட்டேஷன் டிசைனிங் வேலைக்கு என்னைத்ததான் தேர்வு செய்தார்கள். காரணம், புதுமையாக டிசைன் குறித்து சிந்தித்து செயல்படுபவனாக நான் இருந்தேன். இது என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு, என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியது. ஒரு மாடலுக்கு உருவம் கொடுப்பதை ‘விஷன் மாடல்’ என்று சொல்வார்கள். அதில் நான் பணியாற்றினேன். அதை வைத்துதான், டாடா நிறுவனத்தின் ‘நானோ’ கார் உருவானது.

நானோ கார்
நானோ கார்

கார் டிசைன் என்பது முற்றிலும் வேறானது. கார் டிசைன் என்பது காருக்குள் கிடையாது. அது வேறு எங்கோ ஓர் உணர்வில் இருக்கிறது. அது ஒரு பூவில் இருக்கலாம், புத்தரின் புன்னகையிலும் இருக்கலாம். நான் டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது, மூன்று சக்கர வாகனத்தை டிசைன் செய்தோம். அதன் அடிப்படையில் ஆட்டோ ரிக்ஷா தயாரிக்கப்பட்டது. இப்போது அது 11 நாடுகளுக்கு ஆட்டோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு 3,000 ஆட்டோக்களை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாதம் ஒன்றுக்கு 15,000 ஆட்டோக்கள் விற்பனையாகின்றன.

நம் மண்ணுக்கும் நம் மக்களுக்கும் நம் சமூகத்துக்கும் ஏற்ற வகையிலான டிசைன்கள்தான் தேவை. ஆனால், பீங்கான், டூத் பிரஷ் என எதை எடுத்தாலும் அன்றாடம் நாம் பயன்படுத்துகிற பொருள்களில் 99 சதவிகிதம் வெளிநாடுகளில் டிசைன் செய்யப்பட்டவைதான். ஒரு எல்.சி.டி-யைக்கூட நம்மால் சொந்தமாக டிசைன் செய்ய முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து வரும் கம்பெனியில் பொருள்களை உற்பத்தி செய்கிறோம். அவ்வளவுதான். நாம் டிசைன் செய்வது எதுவும் கிடையாது. எல்லாமே வெளிநாட்டவரின் டிசைன்தான்.

டிசைனிங்
டிசைனிங்

காரணம், டிசைன் பற்றிய விழிப்புணர்வு இங்கு குறைவு. இவ்வளவு பெரிய சென்னை நகரில் டிசைன் பற்றி சொல்லித்தர ஒரு கல்வி நிறுவனம்கூட இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய அரசு டிசைன் பற்றிய கொள்கையையே உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில்தான், சென்னையில் ‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ ஆரம்பிக்கப்படுகிறது. டிசைன் துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் நமக்கு விருப்பமான வேலையைத் தேர்வுசெய்துகொள்ள முடியும்” என்றார் க.சத்தியசீலன்.

கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பிரபா பேசியபோது, “இந்தியாவில் விளம்பரத்துறை என்பது வேலைவாய்ப்புகளிலும் வருமானத்திலும் மிகப்பெரிய அளவுக்கு பங்களிப்பை ஆற்றிவருகிறது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.75,000 கோடி விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது. அவ்வளவு பெரிய துறையில் டிசைனிங் படிப்பு படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது. லேஅவுட், டிஜிட்டல் டிசைன் சம்பந்தப்பட்ட துறைகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. இன்டீரியர் டிசைன் என்பது மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துவரும் ஏரியாவாக இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் ஒரு வீட்டுக்கு ரூ.30 லட்சம் செலவில் இன்டீரியர் செய்யப்படுகிறது. பெரிய பொருள் செலவில் கட்டப்படும் வீடுகள் புதுப்புது வடிவங்களில் கட்டப்படுகின்றன.

ரமேஷ்பிரபா
ரமேஷ்பிரபா

கார்ப்பரேட் நிறுவனங்களின் அலுவலகங்களும் வித்தியாசமான முறையிலான டிசைன்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. எனவே, டிசைனிங் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. டிசைன் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு, ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு அனுபவம்வாய்ந்த ஓர் இடத்தில் வேலையைக் கற்றுக்கொண்டு சொந்தமாக தொழில் தொடங்கினால், லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்” என்றார்.

‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ கல்வி நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.ஆர்.ராமநாதன் பேசியபோது, “எங்கள் கல்வி நிறுவனத்தில் இன்டஸ்ட்ரியல் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், ஃபேஷன் டிசைன், ஸ்பேஷியல் டிசைன், அப்பேரல் அண்டு டைக்ஸ்டைல் டிசைன், ஃபைன் ஆர்ட்ஸ் என டிசைன் தொடர்பான இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகள் பல உள்ளன. வெறும் புத்தகங்களை வைத்துக்கொண்டு தியரியாக சொல்லிக்கொடுப்பதுடன் நிற்காமல், சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படும். இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அளவுக்கு பாடங்கள் கற்றுத்தரப்படும்.

ஏ.ஆர்.ஆர்.ராமநாதன்
ஏ.ஆர்.ஆர்.ராமநாதன்

ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள் இங்கு சேரலாம். மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல், மாணவர்களின் திறனை அறிந்திட உதவும் 'கிரியேட்டிவ் க்வோஷன்ட் டெஸ்ட் (Creative Quotient Test) மூலமாக சேர்க்கை நடைபெறும். ப்ளஸ் 2 முடித்த மாணவர்களின் படைப்புத் திறன் (Creativity) மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனை (Problem Solving skills) சோதனை செய்து அவர்களுக்கேற்ற டிசைனிங் படிப்பு எது என்பதை அறிய டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கிரியேட்டிவ் க்வோஷன்ட் டெஸ்ட்டை நடத்தி வருகிறது. ப்ளஸ் 2 படித்த மாணவர்கள் எவரும் இந்தச் சோதனையில் இலவசமாக கலந்துகொள்ளலாம். இதன் முடிவுகள் மற்றும் மாணவரின் ஆர்வத்தைப் பொறுத்து அவருக்கான டிசைனிங் குறித்த ஆலோசனையை வழங்கக் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் காத்திருக்கிறது.

வடிவமைப்பு குறித்த பாடங்களுக்கு தேவையான நவீன வசதிகளை டாட் ஸ்கூல் ஆ1ப் டிசைன் கொண்டுள்ளது. இந்தக் கல்லூரியின் புற வடிவமைப்பு மூலமே டிசைனிங் குறித்த பாடங்களை மாணவர்களால் செயல்முறையாக உணர்ந்துகொள்ள முடியும் டிசைனிங்கில் பல வருட அனுபவம் கொண்ட நிபுணர்கள் பலர் நேரடியாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது டாட் ஸ்கூல்-ன் முக்கிய சிறப்பம்சம். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். இக்கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். டாட் ஸ்கூல் வழங்கும் பாடங்கள் குறித்து www.dotsod.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்” என்றார்.

டிசைனிங் பாட வகுப்பு
டிசைனிங் பாட வகுப்பு

இந்த ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் சந்தேகங்களுக்கு வல்லுநர்களும் மூவரும் பதிலளித்தனர். டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு 9500012166 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு