Published:Updated:

`கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை; பள்ளிகளுக்கு மெமோ! - புதுக்கோட்டையில் நடவடிக்கை

முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பல்வேறு பள்ளிகளில் ஆய்வுசெய்தார். பின்பற்றாத 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மெமோ அனுப்பப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் மூடப்பட்ட பள்ளிகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனாலும், அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளி
பள்ளி

பல இடங்களில் அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் களத்தில் இறங்கி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களாகவே அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச் செல்வம் பல்வேறு பள்ளிகளில் இந்தப் பணியில் ஈடுபட்டார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களிடமும், ஆசிரியர்களிடமும் அறிவுறுத்தப்பட்டது.

அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பல்வேறு பள்ளிகளில் ஆய்வுசெய்தார். இதில், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிதம்பர விடுதி, மழையூர், கீரனூர், வெட்டன்விடுதி, வடவாளம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளும், வைரம் மெட்ரிக் பள்ளி, எஸ்.எஃப்.எஸ் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பள்ளிகள் அனைத்துக்கும் அதன் தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மெமோ கொடுத்திருக்கிறார்.

முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

இது பற்றிக் கூறிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ``அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தி ஆசிரியர்களிடம் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுவிட்டது. இந்தநிலையில்தான், 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக எளிதில் தொற்று பரவும் அபாயம் உருவாகிறது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும். எந்தவித பயமும் யாருக்கும் இருக்காது. வரும் காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரி: திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா! - ஒரே கிராமத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வாரம் ஆலங்குடி அருகே முள்ளங்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு மாவட்டத்தில் முதன்முதலாக கொரோனா தொற்று அறிகுறி இருக்க, அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாணவி உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உடனே அன்றே மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
ம.அரவிந்த்

பரிசோதனை முடிவில் வேறு யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானதும், ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். தொடர்ந்து அந்தப் பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதற்கிடையே, அடுத்த நாளே அறந்தாங்கி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி அருகே குளமங்கலம் தெற்கு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு செப்.8-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு