Published:Updated:

`குழந்தைச் செல்வங்களே... எங்கே நீ எங்கே..!' - வைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியையின் பாடல்

அரசுப் பள்ளி மாணவர்கள் -Representational Image
அரசுப் பள்ளி மாணவர்கள் -Representational Image

கொரோனா பரவல், ஊரடங்கின் காரணமாகக் கடந்த 14 மாதங்களாகப் பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை முருகேஷ்வரி, பள்ளி மாணவர்களை ஏக்கத்துடன் தேடும் விதமாகப் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் மட்டும் சில நாள்கள் பள்ளி சென்று வந்தனர். ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தற்போது வரை பள்ளி திறக்கவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆசிரியை 
 முருகேஷ்வரி
ஆசிரியை முருகேஷ்வரி

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியை முருகேஷ்வரி, பள்ளி மாணவர்களைத் தேடும் விதமாக ஒரு பாடலைப் பாடியுள்ளார். `ரோஜா’ திரைப்படத்தில் வரும் `காதல் ரோஜாவே... எங்கே... நீ எங்கே... கண்ணில் வழியுதடி கண்ணீர்...” என்ற பாடல் மெட்டில், ``குழந்தை செல்வங்களே... எங்கே... நீ எங்கே... ஜூன் மாதம் வந்ததடா கண்ணா...” எனப் பாடல் வரிகளை மாற்றிப் பாடியுள்ளார். 03.09 நிமிடம் வரையுள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடல் குறித்து ஆசிரியை முருகேஷ்வரியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``பழைய வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில இடைநிலை ஆசிரியையாகப் பணி செய்துட்டு வர்றேன். இதோட 30 வருஷத்தை நிறைவு செஞ்சுட்டேன். ஆசிரியையாகப் பணியில சேர்ந்த நாள்ல இருந்து இப்போ வரைக்கும் என் பிள்ளைகள்தாம் என்னோட உலகம். பெத்த பிள்ளைகள் வேற, எங்கிட்ட படிக்கிற பிள்ளைகள் வேறன்னு நான் பிரிச்சுப் பார்த்ததே இல்ல. தொடக்கப்பள்ளிங்கிறதுனால, ஒண்ணாம் வகுப்புல இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்குமான குழந்தைகள்தாம் எங்ககிட்ட படிக்கிறாங்க. வீட்ல அவங்க அம்மா, அப்பாகூட இருக்குற நேரத்தைவிட எங்களுடன் பள்ளியில இருக்குற நேரம்தான் அதிகம்.

மாணவர்களுடன் ஆசிரியை முருகேஷ்வரி
மாணவர்களுடன் ஆசிரியை முருகேஷ்வரி

அதே மாதிரி ஆசிரியர்களாகிய நாங்களும் மாணவர்கள் கூட இருக்குற நேரமும் அதிகம். வகுப்புல பாடங்களைக்கூட மனசுல பதியும்படி கதை, பாடல்கள் மூலமாகத்தான் சொல்லிக் கொடுக்குறோம். மாணவர்களிடம் அவங்களோட வயசுக்கு ஏற்றாற்போல இறங்கி வந்து பேசுறதாலயும், அதிக கண்டிப்பு இல்லாம கனிவு காட்டுறதுனாலயும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எங்க மேல அவங்களோட அம்மா, அப்பாவுக்கு இணையான பாசம் இயற்கையாவே வந்துடுது.

காலையில ஸ்கூலுக்குள்ள நுழையும்போதே `குட் மார்னிங் டீச்சர்’னு எங்களுக்கு சிரிச்ச முகத்தோட வணக்கம் சொல்லி எங்ககூடயே வகுப்பு வரைக்கும் நடந்துக்கிட்டே வருவாங்க. ஒரு நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டாகூட, `எதுக்கு டீச்சர் நேத்து ஸ்கூலுக்கு வரல’ன்னு கேட்பாங்க. ரெண்டு நாள், மூணு நாள் தொடர்ந்து லீவு போட்டா வீட்டுக்கே வந்து கேட்ட சுட்டி மாணவர்களும் இருக்காங்க. வீடுகள்ல அவங்க அம்மா ஏதாவது இனிப்புகள் செஞ்சா ஆசையா கொண்டு வந்து டீச்சர்களுக்குக் கொடுக்குறதும், அதே நேரத்துல வீட்டுல நடந்த பிரச்னைகளைக்கூட ஒளிவு மறைவில்லாமச் சொல்லி அழுறதும் எங்ககிட்டதான்.

அரசுப்பள்ளி மாணவர்கள் - Representational Image
அரசுப்பள்ளி மாணவர்கள் - Representational Image

இப்படி… சொந்தப் பிள்ளைகளாகவே இருந்த பிள்ளைகளை 14 மாசமா பார்க்க முடியல, பேச முடியல, கதை சொல்ல முடியல. பாடம் நடத்த முடியல, பாட்டு, யோகா, நடனம்னு எதையும் சொல்லிக் கொடுக்க முடியல. பிள்ளைகளைப் பிரிஞ்சு தவிக்கிற அம்மாக்களா ஆசிரியர்கள் நாங்க தவிக்கிறோம். ஜூன் மாசம் 1-ம் தேதியில இருந்து அதிகபட்சமா 4-ம் தேதிக்குள்ள பள்ளிகள் திறந்துடும். ஆனா, போன வருச ஜூன் மாசத்தைப் போலவே இந்த வருசமும் பள்ளிக்கூடம் திறக்கலை.

தினசரி காலண்டர்ல ஜூன் 1-ம் தேதியைப் பார்த்தப்போ எனக்கு அழுகையே வந்துடுச்சு. அந்த அழுகையோடதான் இந்தப் பாடலை எழுதினேன். பொதுவா, குழந்தைகளுக்கு மனப்பாடப் பாடலைக்கூட சினிமா பாடல்கள்ல வரிகளை மாற்றிப் பாடி சொல்லிக் கொடுப்போம். அதேமாதிரி, `ரோஜா’ திரைப்படத்துல கவிஞர் வைரமுத்துவின் வரிகள்ல, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில வெளியான `காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே... கண்ணீர் வழியுதடி கண்ணில்...' என்ற பாடலில், அதே மெட்டில் எனது வரிகளை மாற்றிப் பாடியிருக்கேன்” என்றவர், அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தார்,

ஆசிரியை முருகேஷ்வரி
ஆசிரியை முருகேஷ்வரி

``குழந்தைச் செல்வங்களே... எங்கே நீ எங்கே... ஜூன் மாதம் வந்ததடா கண்ணா... படிக்கவும் இல்லை, எழுதவும் இல்லை, வகுப்பு மாறி நீயும், போகவும் இல்லை... எண்ணானதோ? ஏதானதோ? சொல் சொல்... வகுப்பறைக்குள் வருகையில் வணக்கம் சொன்ன ஞாபகம்! பாடம் சொல்லிக் கொடுக்கையில் பதிலைச் சொன்ன ஞாபகம்! நோட்டில் எழுதச் சொல்கையில் சேட்டை செய்த ஞாபகம்! ஒரு மணி அடிக்கையில் சத்துணவு ஞாபகம்! ஸ்கூலில்லாமல் போனால், படிப்பு இல்லை கண்ணே!

நீயில்லாமல் போனால், நானும் இல்லை கண்ணே! எண்ணானதோ? ஏதானதோ? சொல் சொல்... குழந்தைச் செல்வங்களே... எங்கே நீ எங்கே... கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான், கண்மூடிப் பார்த்தால், நெஞ்சுக்குள் நீதான்... எண்ணானதோ ஏதானதோ? சொல் சொல்... பரவுகின்ற கொரோனாவே, படிக்க வேண்டும் நின்று போ! பள்ளிப்பருவக் குழந்தைகள், சேர வேண்டும் ஓய்ந்து போ! கற்பித்தலைத் தொடங்கணும், நீயும் நின்று ஓய்ந்து போ! பள்ளிக்கூடம் திறக்கணும், பாடம் படிக்க வேண்டுமே, கொடுமை என்ன கொடுமை! கொரோனாவின் கொடுமை... படிக்கும் குழந்தை எங்கே? பரிசு கொடுத்து மகிழ, வீட்டில்தான் குழந்தைகளா! சொல்? சொல்.?” எனக் கண்ணீருடன் பாடி முடித்தவர், இறுதியாக,

அரசுப்பள்ளி மாணவர்கள் - Representational Image
அரசுப்பள்ளி மாணவர்கள் - Representational Image

``மீண்டும் பள்ளி திறக்கும் அந்த நாளுக்காகவும், சீருடையில தோளில் புத்தகப் பையோட, சிரிச்ச முகத்தோட `டீச்சர்’னு சொல்லிக்கிட்டு எங்க புள்ளைங்க புள்ளிமானைப்போல துள்ளி ஓடி வருவதைப் பார்க்கும் அந்த சந்தோஷமான தருணத்துக்காகவும் ஆசிரியர்கள் நாங்க காத்துக்கிட்டிருக்கோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு