Published:Updated:

முதலில் நீட்... இப்போது நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் என்ன?

நீட் தேர்வு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் சற்றே ஓய்ந்த நிலையில், அடுத்ததாக வந்திருக்கிறது ‘நெக்ஸ்ட்’ தேர்வு (National Exit Test).

பிரீமியம் ஸ்டோரி

‘முதுநிலை மருத்துவம் படிக்கவும் மருத்துவராகப் பணிபுரியவும் இனி ‘நெக்ஸ்ட்’ தேர்வு அவசியம்’ என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மசோதாவில் புது அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டில் ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வை எழுத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள்தான் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற முடியும். நெக்ஸ்ட் தேர்வில் வாங்கும் மதிப்பெண்தான் மருத்துவ முதுநிலைப் படிப்புக்குத் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுவரை, எம்.பி.பி.எஸ் மாணவர்கள் நான்கரை வருடக் கல்லூரிப் படிப்பை முடித்ததும், ஓர் ஆண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும். பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்து மருத்துவராகப் பணியாற்றலாம் என்கிற நடைமுறைதான் இருந்தது. அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். ஆனால், இவை இரண்டுக்கும் ‘இனி நெக்ஸ்ட் தேர்வு மட்டுமே’ என்கிறது மத்திய அரசு.

நாடாளுமன்றத்தில், தி.மு.க எம்.பி-க்கள் இந்தத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில், ஆளுங்கட்சி மற்றும் தி.மு.க இருதரப்பும் ஒருசேர இந்தத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்படி அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கும் அளவுக்கு ஆபத்தானதா நெக்ஸ்ட் தேர்வு? இதுகுறித்து சமூக, சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்.

சாந்தி, தமிழிசை சௌந்தரராஜன், ஹண்டே
சாந்தி, தமிழிசை சௌந்தரராஜன், ஹண்டே

“மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவன், முதல் மூன்று ஆண்டுகள் கல்லூரி நடத்தும் தேர்வை எழுதி, அதன் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இறுதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் ஒரே பொதுத்தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவர் ஆக முடியும் என்கிறது மத்திய அரசு. இது எப்படி நியாயமாகும்? எம்.பி.பி.எஸ் படிப்பில் நான்கரை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 20 தாள்கள் இருக்கின்றன. இறுதியாண்டில் மட்டும் நான்கு தாள்கள். நெக்ஸ்ட் தேர்வில் 20 தாள்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுமா அல்லது இறுதியாண்டுக்கான நான்கு பாடங்களில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுமா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. 20 தாள்களையும் இணைத்த தேர்வாக இருந்தால் அது மாணவர்களுக்குத் தண்டனையாகவே அமையும். நான்கு பாடங்களுக்கு மட்டும் என்றால், அதன்மூலம் எப்படி ஒட்டுமொத்த மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்த முடியும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் 3, 4, 5 மதிப்பெண் கேள்விகள், வழக்கமான தேர்வுமுறைப்படி இருக்குமா அல்லது அப்ஜெக்டிவ் கேள்விகளாக இருக்குமா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை, அப்ஜெக்டிவ் கேள்விகளாக பதிலை ‘டிக்’ அடிக்கும் விதத்தில் இருந்தால், அது எப்படி தரத்தை மேம்படுத்தும்?, தகுதித்தேர்வை எப்படி ஒரு போட்டித் தேர்வாக நடத்த முடியும்? எழுத்து, செய்முறை, வாய்மொழித் தேர்வுகள் உண்டா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.

தற்போதுள்ள முறையில், எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் தங்களின் சூழலுக்கு ஏற்ப, விரும்பும்போது தேர்வு எழுதி முதுநிலைப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், ‘நெக்ஸ்ட்’ தேர்வில் அதற்கான வாய்ப்பு இல்லை.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு, ‘நெக்ஸ்ட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்வதும் சரியான முறையல்ல. தற்போதுள்ள முறையில், எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் தங்களின் சூழலுக்கு ஏற்ப, விரும்பும்போது தேர்வு எழுதி முதுநிலைப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், ‘நெக்ஸ்ட்’ தேர்வில் அதற்கான வாய்ப்பு இல்லை. பொதுவாகப் போட்டித் தேர்வுகள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நடைமுறைதான் இருந்துவருகிறது. நீட் தேர்வும் அப்படித்தான். ஆனால், நெக்ஸ்ட் தேர்வில் இறுதியாண்டு தேர்வாக எழுதும்போது அதற்கான வாய்ப்பு ஒருமுறைதான் கிடைக்கும். இதனால் முதுநிலை படிக்கும் வாய்ப்பைப் பலரும் இழப்பார்கள்” என்றார்.

முதலில் நீட்... இப்போது நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் என்ன?

“நெக்ஸ்ட் தேர்வு குறித்து மருத்துவர் களுக்கே இன்னும் முழுமையான விவரம் தெரியவில்லை. அதற்குள் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கல்வி தொடர்பான விஷயங்களை, கல்வியாளர்கள் பார்க்கட்டும். அரசியல்வாதிகள் இதை அரசியலாக்க வேண்டாம். மருத்துவ மாணவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் சரியாகப் படித்திருக்கிறார்களா என்பதைச் சோதிக்கவே இந்தத் தேர்வு நடத்தப் படுகிறது. திறமையான மருத்துவர்களை உருவாக்குவதே இந்தத் தேர்வின் நோக்கம்’’ என்றார், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் பி.ஜே.பி தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஹெச்.வி.ஹண்டேவிடம் இது தொடர்பாகப் பேசினோம்.

“தேவையில்லாத தேர்வு இது. உயர்நிலையில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு சிலர் ஆதிக்கம் செலுத்துவதற்கே ‘நெக்ஸ்ட்’ தேர்வு உதவும். பி.ஜே.பி ஆளும் மாநிலங்களே இந்தத் தேர்வை விரும்பவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் எழுதவிருக்கிறேன்’’ என்றார்.

‘நெக்ஸ்ட்’ என்ன என்பதை மத்திய அரசுதான் விளக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு