Published:Updated:

தனியார் பள்ளிகள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

எஸ்.உமா மகேஸ்வரி - நந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.உமா மகேஸ்வரி - நந்தகுமார்

உண்மையில் மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரே உத்தரவில் இவை அனைத்தையும் மாற்ற வேண்டும். துணிந்து முடிவெடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

உண்மையில் மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரே உத்தரவில் இவை அனைத்தையும் மாற்ற வேண்டும். துணிந்து முடிவெடுக்க வேண்டும்.

Published:Updated:
எஸ்.உமா மகேஸ்வரி - நந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.உமா மகேஸ்வரி - நந்தகுமார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவியின் மர்ம மரணம் தமிழ்நாட்டையே பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த ஓராண்டில் பாலியல் தொந்தரவு, படிப்புச்சுமை, ஆசியர்களின் அழுத்தம் எனப் பல காரணங்களால் தனியார் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பத்மா சேஷாத்ரி, சுஷில் ஹரி, சின்மயா வித்யாலயா, தூய இருதய மேல்நிலைப்பள்ளி, சக்தி மெட்ரிக் எனப் புகாரில் சிக்கும் தனியார் பள்ளிகளின் பட்டியலும் நீண்டுகொண்டிருக்கிறது.

கணியாமூர் விவகாரத்தில் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடியதைத் தொடர்ந்து, ‘தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்’ எனத் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைவைத்திருக்கின்றனர். எதிர்த்தரப்பில், `தொடர் குற்றச்சாட்டுகளில் சிக்கும் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர். இரு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்தோம்.

`தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும்!’ - எஸ்.உமா மகேஸ்வரி, கல்வியாளர்

``சமீபத்தில் தனியார் பள்ளிக் குழந்தைகள் சிலரிடம் பேசினேன். பள்ளியில் அவர்களுக்கு என்னென்ன கொடுமை கள் நடக்கின்றன, பாலியல் சுரண்டல்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் 13 வயதுக்குள்ளான குழந்தைகளே சொல்கிறார்கள். வெளியில் வருவது 10%-தான், வராதது 90%. தனியார் பள்ளியாக இருந்தாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தானே வருகிறது... ஒரு பள்ளியில் நடக்கும்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாப் பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த வேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். காரணம், எல்லாமே இங்கு பணம்தான். பணத்தைக் கொடுத்து அதிகாரிகளைச் சரிக்கட்டிவிடுகின்றன தனியார் பள்ளிகள். இதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள்தான் பெரும்பாலும் தனியார் பள்ளிகளை யும் கல்லூரிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை.

பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், ஆசிரியர்களின் அறிவுறுத்தலாலும் தனியார் பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவைக்கப்படும் மாணவர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் உத்தரவுகளைத் தனியார் பள்ளிகள் மதிப்பதேயில்லை; நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

உண்மையில் மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரே உத்தரவில் இவை அனைத்தையும் மாற்ற வேண்டும். துணிந்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இருப்பதுபோல தனியார் பள்ளிகளிலும் `பள்ளி மேலாண்மை கமிட்டி (SMC)’ ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து பிரச்னை வரக்கூடிய தனியார் பள்ளிகளை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும். முதலில் ஒரு நான்கு பள்ளிகளை அரசுடைமையாக்கிப் பாருங்கள், பிறகு எல்லாம் தன்னால் மாறும்” என்கிறார்.

எஸ்.உமா மகேஸ்வரி - நந்தகுமார்
எஸ்.உமா மகேஸ்வரி - நந்தகுமார்

`தனிச் சட்டம் வேண்டும்!’ - நந்தகுமார், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர்.

``தமிழ்நாட்டில் 15,000 தனியார் பள்ளிகள் இருக்கின்றன. சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர் கள் பணியாற்றுகிறார்கள். தனியார் பள்ளிகள் இல்லையென் றால் இந்த 6 லட்சம் பேரின் குடும்பங்களை யார் காப்பாற்று வார்கள்... அரசு விதிப்படி, அனைத்து அனுமதிகளையும் பெற்றுத்தான் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன. பள்ளிகளின் தரம், தேவையைப் பொறுத்து கட்டணங்கள் நியமிக்கப்படுகின்றன. ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதற் காகத் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கிவிடலாமா... இன்றைய அரசாங்கத்தால் மாணவர்களுக்குப் புதிதாக பஸ் பாஸ்கூட கொடுக்க முடியவில்லை; கடந்த ஆண்டு பஸ் பாஸைப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறார்கள். இன்னும் நோட்டுப் புத்தகங்களே அரசுப் பள்ளிகளில் கொடுத்த பாடில்லை; போதுமான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பவில்லை; இந்த லட்சணத்தில் தனியார் பள்ளிகளை அரசாங்கம் நடத்தினால் என்னவாகும்?

தனியார் பள்ளிகளில் பல்வேறு கட்சிக்காரர்கள் சீட் கேட்பார்கள், டொனேஷன் கேட்பார்கள்; கொடுக்கவில்லை என்றால் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்னையைக் கிளப்புவார்கள். எத்தனையோ ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் தனியார் பள்ளிகள்மீது போடப்பட்டிருக் கின்றன. அதனால்தான், மருத்துவமனைகளுக்கு இருப்பதுபோல் தனியார் பள்ளிகளைப் பாதுகாக்கவும் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறோம்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பலமுறை அழைப்பு விடுத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

கல்வியின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?