Published:Updated:

இன்ஜினீயரிங் கல்லூரிகளில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூல்... தீர்வு என்ன?!

சக்தி தமிழ்ச்செல்வன்
துரைராஜ் குணசேகரன்

இன்றளவும் தனியார் கல்லூரிகளில், கவுன்சலிங் மூலம் படிக்க வரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக பல மாணவர்கள் படிக்க விரும்புவது இன்ஜினீயரிங் படிப்புகள். அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளைகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான தனியார் இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்லூரிகளில் கவுன்சலிங் மூலம் படிக்கவரும் மாணவர்களுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என, கவுன்சலிங்கின்போதே தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தனியார் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கிகளில் கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இது பெரும் சுமையாகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் சார்பில், பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க மறுசீரமைக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது குறித்த குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

2017-ம் ஆண்டு என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு, சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் 2017-2018 முதல் 2019-2020-ம் ஆண்டு வரையிலான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அந்தக் குழு நிர்ணயம் செய்த கட்டண விவரத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.  அந்தக் குழு பரிந்துரை செய்த கட்டணத்தைவிட, கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூல் செய்தால், அது தொடர்பாக மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். அந்தப் புகார் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கல்விக் கட்டணம்
கல்விக் கட்டணம்

ஆனால், இன்றளவும் தனியார் கல்லூரிகளில், கவுன்சலிங் மூலம் படிக்க வரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல கல்லூரிகளில் இந்தக் கட்டணம் அரசு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது. இது கவுன்சலிங்கில் பங்கேற்காமல் தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்தில், நன்கொடை (Donation) கொடுத்து படிக்கும் மாணவர்கள் செலுத்தும் கல்வித் தொகையை நெருங்கி விடுகிறது.

இதுகுறித்து கல்வியாளர் ராஜராஜனிடம் பேசினோம். அதிக கட்டணம் வசூலிப்பதை வன்மையாகக் கண்டித்த அவர், ``மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் முடிந்த பிறகே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். ஆனால், நிறைய கல்லூரிகளில் கவுன்சலிங்கிற்கு முன்பாகவே மாணவர் சேர்க்கை தொடங்கிவிடுகிறது.

model fee structure
model fee structure

இதனால் அரசு ஒதுக்கிய சீட்டுகளுக்கான கவுன்சலிங் நடைபெறும்போது குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு `டிமாண்ட் 'அதிகம் என்பது போலத் தோற்றம் இருக்கும். மேலும், பல கல்லூரிகளில் இந்தக் கட்டணத்தைத் தாண்டி, காலை உணவு கல்லூரியில்தான் சாப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். தங்கள் கல்லூரி வாகனத்தில்தான் வரவேண்டுமென்றும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதற்கெல்லாம் வருடத்துக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தினாலே கட்டணம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசு அப்படி கடுமையான சட்டங்கள் இயற்றி இதைக் கண்டிப்பதில்லை. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னாட்சி (Autonomous) கல்லூரிகளின் பாடத்திட்டம் எளிமையாக இருக்கும்.

model fee structure
model fee structure

அந்தக் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் நகர இந்த பாடத்திட்டம் ஒரு காரணமாக உள்ளது. இதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு அந்தக் கல்லூரிகள் பலவிதமான கட்டணங்களை வசூலிக்கிறது. மாணவர்களும், பெற்றோர்களும் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். பேருந்து, உணவு உள்ளிட்ட கட்டணங்கள் குறித்து கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏற்பாடு செய்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர், முனைவர் T. புருஷோத்தமனிடம் பேசினோம்.  ``அரசுக் கல்லூரிகளைப் பொறுத்தவரை 7,500 முதல் 8,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை 50,000 முதல் 85,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர்த்து, வேறெந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அப்படி கல்லூரி நிர்வாகம், மாணவர்களை அதிக கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினால் மாணவர்கள் `Excess Fee Committee’–யில் புகார் தெரிவிக்கலாம். இந்தக் குழுவின் தலைவராக எம். அருளரசு பொறுப்பில் உள்ளார். இவருடன் மூன்று உறுப்பினர்கள் பொறுப்பில் உள்ளனர்.  எம். அருளரசுவை tncapitation@gmail.com/ +917598728698 என்ற மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்றார்.