Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே
மைதானத்தில் வெற்றிக் கோட்டை நோக்கி ஓடிவரும் குழந்தைகளுக்குச் சாக்லேட்டுடன் காத்திருக்கும் ஆசிரியைப்போல... இந்தப் புத்தம் புதிய வருடம் நமக்காகக் காத்திருக்கிறது!

சமதளத்தில் நடப்பவர்களைவிட, மேடு பள்ளங்களில் செருப்பில்லாமல் நடப்பவர்களின் கால்களில்தான் வலு அதிகரிக்கும். அப்படித்தான், இந்த 2020 ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில் தள்ளி நம்மை வலிமையாக்கியுள்ளது. அந்த வலிமையுடன், 2021-ம் ஆண்டை வரவேற்போம்.

இந்தத் தலைமுறை, இதுவரை அறிவியல் பாடங்களில் மட்டுமே அறிந்திருந்த பெருந்தொற்றை, நேரடியாகச் சந்தித்தோம். பச்சிளம் குழந்தை முதல் 100+ முதியவர்கள்வரை பலரும் `பாசிட்டிவ்' ஆகிப் பிழைத்தோம். குறிப்பாக, கோவிட்-19 நுழைந்த குடும்பங்களில் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் நடைமுறைகளால் அனுபவித்த உடல், மனச் சிக்கல்கள் அவர்களுடைய தன்னம்பிக்கையின் கடைசி சொட்டுவரை சீண்டிப் பார்த்தன. கடந்து நிமிர்ந்தோம்.

நமக்குள்ளே...

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்னைகள், தொழில் முடக்கம், வேலையிழப்பு, மருத்துவமனை நாள்கள், அனைத்துக்கும் மேலாக உயிரிழப்பு என ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த நுண்ணுயிரி ஏற்படுத்திய விளைவுகள் சொற்களுக்கு அப்பாற்பட்டவை. அழுதாலும் கரைந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டோம். கொள்ளை நோய்க்கு எதிரான இந்தப் போரில் ஒவ்வொரு தனி மனிதனுமே ஒரு போர்வீரனாக நின்றோம். வென்றோம். மனச் சிதைவுக்கு ஆளானோம். அதையே மீம்ஸ்களாக்கிச் சிரித்தோம். இதோ... 2021-ஐ எட்டிவிட்டோம்.

`எவ்வளவோ பார்த்துட்டோம், இத பார்க்க மாட்டோமா' - பெரும் தொழில் நிறுவனங்களின் கான்ஃபரன்ஸ்கள் முதல் ரோட்டுக்கடை அக்காவின் பேச்சுவரை, இனி எந்த நெருக்கடியை எதிர்கொள்ளும்போதும் கொரோனா காலத்தைச் சுட்டிக்காட்டி, இந்த மனநிலைதான் மந்திரமாகச் சொல்லப்படும். நாமும் அதே புது நம்பிக்கையுடன், பாசிட்டிவிட்டியுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்.

கடைசி கோவிட்-19 வைரஸும் உலகைவிட்டு ஒழியும் நாள் இந்த ஆண்டின் ஏதோ ஒரு மாதத்தில்தான் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சரிந்த பொருளாதாரமும் சந்தோஷமும், இப்போது நேர்கோடு நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்தப் புத்தாண்டில் அதை மேல் நோக்கிச் செல்ல வைப்போம் மீண்டும். உறவுகளின் இழப்புகளைச் சந்தித்தவர்களுக்கு முற்றிலும் ஆறுதல் தரும் வார்த்தைகள் எந்த மொழியிலும் இல்லை. என்றாலும், அந்த வீட்டின் அன்றாடங்கள் தொடரப்பட்டு, மீண்டும் புது மகிழ்ச்சிகள் துளிர்விடும்போது, மாண்டவர்கள் நிச்சயம் அதில் நம்முடன் வாழ்வார்கள்.

தோழிகளே... முழுமையான ஈடுபாட்டுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வோம். நம்பிக்கையாலும் வலிமையாலும் நம்மை நிரப்பி, இலக்குகளை அடைவோம். நிம்மதியை எப்போதும், யாருக்காகவும் தியாகம் செய்யாதிருப்போம். இந்த உலகத்தின் மீதும் நம் மீதும் புதிய, பெரிய நம்பிக்கை வைத்துச் சொல்வோம்... வெல்கம் 2021.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்