Published:Updated:

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

கல்விக் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 60 மாதங்கள் வழங்கப்படும்!

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

கல்விக் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 60 மாதங்கள் வழங்கப்படும்!

Published:Updated:
கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்
தற்போது கலைக் கல்லூரியில் மாணவர் களின் சேர்க்கை முடிந்துவிட்டது. பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்போகிறது. இந்த நிலையில், மகனை/மகளை கல்லூரியில் சேர்த்த பின், கல்விக் கட்டணத்துக்கான செலவை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு வங்கிக் கல்விக் கடன்தான் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனெனில், பட்டப் படிப்புகளுக்கான கல்விச் செலவுகள் அதிகரித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் 68% பெற்றோர்கள் தங்களின் வருவாயைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு பணத்தைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

முன்பு கல்விக் கடனைப் பெற வங்கிகளை நேரடியாக அணுகிக் கேட்கலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், இன்று அந்த நடைமுறை பெரிதும் மாறியுள்ளன. எனவே, கல்விக் கடன் பெறுவது குறித்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

எந்தப் படிப்புக்கெல்லாம் கல்விக் கடன்?

பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கல்விக் கடன் பெறலாம். நான்கு ஆண்டுகாலப் பொறியியல் / தொழில்நுட்பம் (பி.இ / பி.டெக்), ஐந்து ஆண்டுக்கால மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்) படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும். மூன்று ஆண்டுக் கால பி.ஏ, பி.எஸ்ஸி பட்டப் படிப்புகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ) ஆகியவற்றுக்கும் கல்விக் கடன் பெறலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

எவையெவை அடங்கும்?

அரசாங்கமே ஒவ்வொரு கல்லூரிக்கும் அதன் தரத்தைப் பொறுத்து, கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும். அந்தக் கட்டணம் முழுவதும் கல்விக் கடனாக வழங்கப்படும். இந்தக் கல்விக் கடனில், கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதி மற்றும் உணவுக்கான கட்டணம் ஆகியவை அடங்கும்.

தேவைப்படும் ஆவணங்கள்!

10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பெற்றோரின் ஆதார் கார்டு மற்றும் வருமானச் சான்றிதழ், கல்லூரியில் இடம் கிடைத்ததை உறுதிப்படுத்த கல்லூரியிலிருந்து பெறப்படும் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை வங்கிக் கடன் வாங்கும்போது அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வங்கியை எப்படித் தேர்வு செய்வது?

கல்விக் கடன் பெற விரும்புவோர், வீட்டுக்கு அருகிலுள்ள வங்கிகளைத்தான் முதலில் அணுக வேண்டும் என்று முன்பு விதிமுறை வைத்திருந்தார்கள். பின்னர், வார்டு வாரியாகப் பிரித்து, அந்தந்த வார்டுகளுக்கான வங்கிகளில் மட்டுமே கடன் பெற முடியுமென்று மாற்றினார்கள். தற்போது, கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள வங்கிகளை அணுக வேண்டுமென்று வரையறுத்துள்ளார்கள். அப்படியிருந்தால்தான் அந்தக் கல்லூரியின் தரம் குறித்து அறிந்துகொள்வது எளிது என்பதால், இந்த விதிமுறை கொண்டுவரப் பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

வட்டி விகிதமும் மானியமும்

இதுவரை எந்தக் கல்லூரியில் படித்தாலும், கல்விக் கடனுக்கு வட்டி மானியம் தரப்பட்டது. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வட்டி மானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உதாரணமாக, பொறியியல் படிப்புகள் எனில், அந்தக் கல்லூரிகள் நாக் (The National Assessment and Accreditation Council (NAAC)), என்.பி.ஏ (The National Board of Accreditation (NBA) )அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இதேபோல், இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்கள், பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆகியோர் கடனுக்கான வட்டி மானியம் பெற முடியும்.எனவே, கல்லூரியைத் தேர்வு செய்யும்போது தேசிய அங்கீகாரம் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

யாருக்கு மானியம் கிடைக்கும்?

இதற்கு முன், ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு மட்டுமே வட்டி மானியம் வழங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த ரூ.7.5 லட்சக் கடனுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் ரூ.7.5 லட்சத்துக்குமேல் கடன் பெற்றால், சொத்து பிணை வைப்பதுடன் வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வட்டி எவ்வளவு?

கல்விக் கடனுக்கு ஆண்டு வட்டி 12% - 16% வரை வட்டி வசூலிக்க வங்கிகள் அனுமதிக்கப் பட்டுள்ளன. மேலும், அரசின் மானியம் பெறுவதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இதற்கு வருமானச் சான்றிதழ் காட்டப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி செலுத்தியதற்கான சான்றும் காட்ட வேண்டும்.

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

கல்விக் கடன் எளிதாகப் பெறும் நடைமுறை..!

கல்விக் கடன் குறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடியிடம் பேசினோம். “கல்விக் கடன் பெறும் நடைமுறைகள் இப்போது எளிதாக்கப் பட்டுள்ளன. முன்பெல்லாம் கல்விக் கடன் பெற ‘நாம் எந்த வங்கியை அணுக வேண்டும், அந்த வங்கி கடன் தருமா’ என்றெல்லாம் பார்க்க வேண்டும். ஆனால், இப்போது அந்தச் சிக்கலெல்லாம் கிடையாது. கல்விக் கடனுக்காக வித்யா லக்‌ஷ்மி என்ற பிரத்யேக வெப்சைட் உள்ளது. அந்த வெப்சைட்டில் அனைத்து வங்கிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

கல்விக் கடன் வேண்டும் என்ற மாணவர்கள் வித்யா லக்‌ஷ்மி வெப்சைட்டில் பதிவு செய்தால் போதும். அவர்களுடைய ஊர், அவர்கள் விரும்பும் படிப்புக்கு எந்தெந்த வங்கிகள் சிறப்புச் சலுகைகள் உள்ளன என்பதையெல்லாம் கணக்கில்கொண்டு அவர்களுக்கான வங்கியைப் பரிந்துரை செய்வார்கள். கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் திரும்பச் செலுத்துவதற்கான விதிமுறைகள் போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதில் பதிவு செய்தவுடன் பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு அந்த வங்கிக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரிக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது.

அந்த வெப்சைட் பரிந்துரைக்கும் வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது. புதிதாக கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம். வெப்சைட்டில் பதிவு செய்யாமல் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலும் கல்விக் கடன் பெற முடியும். முன்பே சொன்னதுபோல, சில வங்கிகள் குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. அதேபோல, முந்தைய ஆண்டுகளுடைய ரெக்கார்டு களின்படி, சில படிப்புகளுக்குக் கடன் வழங்க மாட்டார்கள். காரணம், அந்தப் படிப்புக்காகக் கடன் வாங்கிய பலர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பார்கள். அப்படி இருந்தால், அந்தப் படிப்புக்கான கடன் கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான். எங்கள் வங்கியிலும் இதே நடைமுறைதான்’’ என்றார்.

வித்யாலக்‌ஷ்மி இணையதளம் பயன்படுத்தும் முறை!

இந்தியா முழுவதும் மாணவர்கள் எளிதாக ஆன்லைன் வாயிலாக கல்விக் கடன் பெறும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள இணையதளம்தான் வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in/Students/index). இந்த இணைய தள சேவையை என்.எஸ்.டி.எல் (NSDL - National Security Depository Limited) நிறுவனம் உருவாக்கியுள்ளது. கல்விக் கடன் பெற விரும்புவோர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தனக்கென்று நிரந்தரக் கணக்கை உருவாக்க வேண்டும். இதில் மொபைல் எண், இ-மெயில் முகவரி, மாணவர் பெயர், தந்தை பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டால் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, லாக்-இன் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். இதில், தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். பின்பு எந்தத் துறையைச் சார்ந்த படிப்பு, எத்தனை வருட படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் தேவை உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறுந்தகவல் வரும். அதன் பிறகு, கல்விக் கடன் விண்ணப்பித்ததுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

இதைத் தொடர்ந்து விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். பிறகு, வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். வங்கி அதிகாரியைச் சந்தித்த பின் கல்விக் கடன் எந்தக் கிளை வங்கியின் வாயிலாக வழங்கப்படும் என்பது முடிவாகும். மேலும், கல்விக் கடனை வங்கிகள் வழங்கவில்லை எனில், அது குறித்து அந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட சுமார் 36 வங்கிகள் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளன.

எந்த அடமானமும் இல்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன்

கல்விக் கடன் விதிமுறைகள் குறித்து கனரா வங்கியின் முன்னாள் சீனியர் மேனேஜர் ராமச்சந்திரனிடம் பேசினோம். “படிக்கப் போகும் கல்லூரிக்கான கல்விக் கட்டணமாக அரசாங்கம் எவ்வளவு நிர்ணயித்துள்ளதோ, அந்தத் தொகை முழுவதையும் நீங்கள் வங்கியில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெற பெற்றோர் உத்தரவாதம் மட்டுமே போதுமானது. நீங்கள் வேறு எவ்வித அடமானமும் கொடுக்கத் தேவையில்லை. ரூ.4 லட்சத்துக்கும் மேல் ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வேண்டும் எனில், அதற்கு மூன்றாம் நபர் ஒருவர் ஷூரிட்டி தர வேண்டும். ரூ.7.5 லட்சத்துக்குமேல் கல்விக் கடன் பெற வேண்டுமானால் வீடு, மனை போன்ற சொத்துகளை அடமானமாகத் தர வேண்டும். இப்படி அதிகபட்சமாக ஒரு மாணவர் ரூ.25 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம். எனவே, வருமானம் குறைவாக உள்ள ஏழைப் பெற்றோர்களுக்கு கல்விக் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் வேண்டாம்.

நன்றாகப் படிக்கும் மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்விக் கடனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்திவிடுகின்றனர். ஒரு மாணவர் கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேடுவதற்கு ஓர் ஆண்டு அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த ஆரம்பித்துவிட வேண்டும். படித்து முடித்ததுமே வேலை கிடைத்துவிட்டதென்றால் வேலை கிடைத்த அடுத்த மாதத்திலிருந்தே தவணைத் தொகையைச் செலுத்த ஆரம்பித்துவிடலாம். படிப்பை முடித்து ஒரு வருடத்துக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லையென்றால் கால அவகாசம் கேட்டு வங்கி மேலாளரை அணுகலாம். கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பெற்ற கல்விக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனில் பிற்காலத்தில் வங்கிகளில் நீங்கள் எந்த விதமான கடனும் பெற முடியாது” என்றார்.

கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த அவகாசம்

கல்விக் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) வழங்கப்படும். கல்விக் கடன் தொகை அதிகமாக இருந்தால், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படும். அதற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேலும் ஆறு மாதங்கள் கால அவகாசம் தர வாய்ப்புள்ளது.

கல்விக்கடன் என்பது நடுத்தரக் குடும்பங் களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மாணவர்களின் கடமை!

கல்விக் கடனை கட்டாயம் திரும்பச் செலுத்த வேண்டும்!

கே.மனோஜ், காஞ்சிபுரம்.

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

“ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்கான சிறந்த கல்லூரியைப் படிப்பதற்காகத் தேர்வு செய்தேன். 4 வருடத்துக்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும் என்றார்கள். என் அப்பா மெக்கானிக். அவருக்கு பெரிய வருமானம் இல்லை; இவ்வளவு பெரிய தொகையைக் கையைவிட்டு கட்டுவது கடினம். அதனால் கல்விக் கடன் விண்ணப்பித்துப் படித்து முடித்தேன். தற்போது வேலைக்குச் சென்று வாங்கிய தொகையைச் சரியாகத் திருப்பிக் கட்டி வருகிறேன். என் முதல் வேலையின் சம்பளத்தைவிட மாதம்தோறும் வங்கிக்குச் செலுத்தும் தொகை அதிகம் இருந்தது. வங்கியில் பேசி அதைக் குறைத்தேன். தற்போது அதைவிட அதிகம் சம்பாதிப்பதால் கடன் தொகையையும் அதிகமாகத் திருப்பிச் செலுத்தி வருகிறேன். கடன் வாங்கும்போது மாணவர்களுக்கு இருக்கும் அதே ஆர்வம், கடனை திருப்பிச் செலுத்துவதிலும் இருக்க வேண்டும்.”

‘‘கவலை இல்லாமல் படிக்கிறேன்!’’

எஸ்.பூஜா, திருச்சி.

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

“நான் பொறியியல் படிக்கிறேன். என் நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.4 லட்சம். அதற்காக நான் கல்விக் கடன் வாங்கியுள்ளேன். என் அப்பா பேருந்து நடத்துனராக இருப்பதால், நான் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்த உடனேயே கடன் வழங்கப்பட்டது. கடன் வாங்குவதற்கான நெறிமுறையும் மிக எளிதாகவே இருந்தது. நான் முதல் செமஸ்டருக்கான கல்விக் கட்டணத்தைக் கல்விக் கடன் மூலம் செலுத்தியுள்ளேன். இரண்டாம் பருவத்துக்கு இனிதான் கடன் வாங்க வேண்டும். வங்கி எனக்கு கல்விக் கடன் கொடுத்திருப்பதால், பொருளாதாரத் தடையின்றி என்னால் படிக்க முடிகிறது.”

‘‘வட்டியில்லா கல்விக் கடன் தேவை!’’

ஸ்நேகா, பெரம்பலூர்.

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்!

‘‘பெரம்பலூர் பக்கத்தில் இலுப்பைகுடி கிராமம்தான் என் ஊர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பிரிவில், பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் அப்பா ஒரு விவசாயி. என்னுடைய கல்விக் கட்டணம் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய். கல்விக் கடன் பெறலாம் என வங்கியை அணுகினேன். நான் முதல் தலைமுறை பட்டதாரி என்பதால் ரூ.55,000 மட்டுமே கடன் கொடுக்க முடியும் என்றனர். அதற்கு மேல் அதிகம் பெற முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. கடனுக்கான வட்டி குறைவாக உள்ளது என்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. கடன் பெறுவதற்கான நடைமுறைகள் முடிந்த உடன் கடன் தாமதமின்றி கிடைத்துவிட்டது. அரசாங்கம் வட்டியில்லாமல் கல்விக் கடன் கிடைக்க வழிவகை செய்தால் என்னைப் போன்ற ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவியாக இருக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism