Published:Updated:

``ஏன் வாசிப்புத் திறனில் பின் தங்கியிருக்கிறார்கள்?'' - பள்ளியிடம் விளக்கம் கேட்ட கல்வி அலுவலர்

வி.எஸ்.சரவணன்

வாசிப்புத் திறனில் பின்தங்கியுள்ள மூன்று மாணவர்கள் குறித்து விளக்க அறிக்கை கேட்டிருக்கிறார் சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தைக் குறைத்து மதிப்பிடுவதே சமூகத்தில் நிலவும் சூழலாக இருக்கிறது. ஆனால், வாசிப்பில் பின்தங்கியிருக்கும் மாணவர்களையும் படிக்க வைப்பதில் ஆசிரியர்கள் பலரும் முயற்சி எடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் சோளிங்கர் வட்டாரக் கல்வி அலுவலர், சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அனுப்பிய அறிக்கை சமூக ஊடகத்தில் வெளியாகி, விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

government
government

அந்த அறிக்கையில், `இக்கல்வியாண்டில் (2019 -20) சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயின்று பின்னர், உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வித் தரம் குறித்த நிலையை ஆய்வு செய்ததில் தங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வாசிப்புத் திறனில் மிகவும் பின்தங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, தங்கள் பள்ளியில் கடந்த ஐந்தாண்டுகளாக மேற்படி மாணவர்களுக்குக் கல்வி போதித்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாசிப்புத் திறன் குறைபாட்டுக்கான தக்க விளக்கத்தை இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற ஏழு தினங்களுக்குள் அளிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழ், பள்ளியின் பெயரும் மாணவர்களின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.

வழக்கமாக, ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி குறைந்தால் அப்பள்ளி தலைமையாசிரியரிடம் விளக்கத்தை கல்வித் துறை கேட்கும். தற்போது, கல்வி ஆண்டு தொங்கியதுமே, வாசிப்புத் திறன் குறைந்த மாணவர்களைப் பற்றி, அவர்கள் படித்த பள்ளியில் விளக்கம் கேட்பதைப் பலரும் வரவேற்றுள்ளார்கள்.