Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 12 - உடனடி வேலை தரும் பாலிடெக்னிக் & ஐடிஐ படிப்புகள்!

நாளை என்ன வேலை
பிரீமியம் ஸ்டோரி
நாளை என்ன வேலை

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 12 - உடனடி வேலை தரும் பாலிடெக்னிக் & ஐடிஐ படிப்புகள்!

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
நாளை என்ன வேலை
பிரீமியம் ஸ்டோரி
நாளை என்ன வேலை

பட்டப்படிப்பு படிக்க வேண்டுமானால் +2 முடித்திருக்க வேண்டியது அவசியம். குடும்பச் சூழ்நிலை காரணமாக +2 வரை போக முடியாதவர்கள், உடனடி வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆகியோரின் விருப்பத் தேர்வாக பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகள் இருந்துவருகின்றன.

பாலிடெக்னிக்: பத்தாம் வகுப்புப் படிப்பு இதற்குப் போதுமானது. எனினும் சமீப ஆண்டுகளில் +2 முடித்த நிறைய பேர் பாலிடெக்னிக்கில் சேர்கிறார்கள். சரி, பாலிடெக்னிக்கில் என்ன சொல்லித் தரப்படுகிறது என்று கேட்டால், டிப்ளோமா எனப்படும் பட்டயப் படிப்பாகும். இது மூன்று வருடப் படிப்பு. இதை முடித்தவுடன் நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறீர்களோ, அந்தத் துறையில் டிப்ளோமா வழங்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தால் DME (Diploma in Mechanical Engineering) என்ற பட்டயம் வழங்கப்படும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 12 - உடனடி வேலை தரும் பாலிடெக்னிக் & ஐடிஐ படிப்புகள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை தரமணியில் ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாக உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக்குகள் சுமார் 500 உள்ளன. இவையும் பொறியியல் கல்லூரிகளைப் போலவே ஒர்க்‌ஷாப் மற்றும் லேப் வசதிகளைக் கொண்டவை என்பதால், அந்தந்தத் துறையில் பிராக்டிகலாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்பவர்களாக டிப்ளோமா முடித்த மாணவர்கள் திகழ்கிறார்கள். டிப்ளோமா படிக்கும் காலத்திலேயே அந்தந்தத் துறை சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மாணவர்கள் அனுப்பப்பட்டு இண்டஸ்ட்ரியல் டிரெய்னிங் பெறுவார்கள். அதனால், நாம் பிற்காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் வேலை செய்யப்போகிறோம் என்பதை அறிந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாலிடெக்னிக் சீட் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போதைக்கு பாலிடெக்னிக்கில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே அட்மிஷன் நடைபெறுகிறது.

+2 முடித்த மாணவர்களாக இருந்தால், அவர்கள் லேட்டரல் என்ட்ரி முறையில் நேரடியாக டிப்ளோமா இரண்டாம் வருடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அந்த வகையில் +2-வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் எடுத்திருப்பவர்களுக்கு 10% இடங்களும், வொக்கேஷனல் குரூப் எடுத்தவர்களுக்கு இன்னொரு 10% இடங்களும் என மொத்தம் 20% இடங்கள் லேட்டரல் என்ட்ரி முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவை தவிர நான்கு வருட பகுதிநேர டிப்ளோமா படிப்புகளும் உள்ளன. நீங்கள் சேர விரும்பும் துறை சார்ந்த அனுபவத்திற்கென 20% மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அட்மிஷன் நடைபெறும். பத்தாம் வகுப்பு முடித்து 2 வருட ஐடிஐ படிப்பு படித்தவர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த மூன்று வகை படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnpoly.in

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 12 - உடனடி வேலை தரும் பாலிடெக்னிக் & ஐடிஐ படிப்புகள்!

பாலிடெக்னிக்கில் டிப்ளோமா முடித்தவர்கள் பிற்காலத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து B.E அல்லது B.Tech பட்டம் பெற விரும்பினால் அதற்கும் வழியுண்டு. இவர்கள் லேட்டரல் என்ட்ரி எனப்படும் முறையில் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தவிர, டிப்ளோமா முடித்துத் தொழிற்சாலைகளில் சில வருடங்கள் அனுபவம் பெற்ற பிறகு வேலை செய்துகொண்டே மாலையில் பகுதிநேரமாகப் படித்தும் இன்ஜினீயரிங் பட்டம் பெற முடியும்.

இதுதவிர சாண்ட்விச் படிப்பும் உண்டு. வழக்கமான டிப்ளோமா 3 ஆண்டுகள் என்றால், சாண்ட்விச் மூன்றரை ஆண்டுப் படிப்பு. சிலபஸும் கூடுதலாக இருக்கும். ஆறு மாத காலம் ஏதேனும் தொழிற்சாலையில் நேரடிப் பணி அனுபவம் பெறலாம் என்பதால், இந்த கோர்ஸுக்குக் போட்டி அதிகம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 12 - உடனடி வேலை தரும் பாலிடெக்னிக் & ஐடிஐ படிப்புகள்!

ஐடிஐ: 30 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்தால் பாலிடெக்னிக், ஃபெயிலானால் ஐடிஐ என்று நிலைமை இருந்துவந்தது. அதனால் ஐடிஐ என்பதே ஏதோ தேர்வில் தோல்வியுற்றவர்கள் படிக்கும் படிப்பு என்பது போல் ஒரு தோற்றம் இருந்தது. ஆனாலும் அதில் சேர்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே குறைந்தது கிடையாது. இன்று பாஸ் ஆனவர்களும் சேரக்கூடிய படிப்பாக ஐடிஐ அந்தஸ்து பெற்றிருக்கிறது. காரணம், ஐடிஐ முடித்தால் எப்படியாவது ஒரு தொழிற்சாலையில் ஏதாவது ஒரு பணியில் சேர்ந்துவிட முடியும். பல சமயங்களில் ஐடிஐ முடித்தவர்கள் வெற்றிகரமாக சுயதொழில் செய்து பிராக்டிகல் மனிதர்களாக முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் பாலிடெக்னிக்குகளும் உள்ள நிலையிலும்கூட ஐடிஐ கல்வி நிறுவனங்கள் தங்கள் மதிப்பை இழக்கவில்லை என்றே சொல்லலாம். இதற்கான படிப்புக்காலம் என்று சொல்வதைவிட பயிற்சிக்காலம் என்று சொல்வதே பொருத்தம். நாம் தேர்ந்தெடுக்கும் பிரிவுக்கேற்ப 6 மாதங்கள் தொடங்கி 2 ஆண்டுகள் வரை பயிற்சி தரப்படுகிறது.

ஐடிஐ என்பது Industrial Training Institute என்பதன் சுருக்கம்தான். மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அங்கீகரிக்கப்படுகிற இந்த ஐடிஐ படிப்புகள் அனைத்துமே அந்தந்த மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நெறிப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இதில் 8-ம் வகுப்பு பாஸ் செய்தவர்கள், 10-ம் வகுப்பு பாஸ் செய்தவர்கள் என இரண்டு பிரிவுகளாகக் கல்வித் தகுதி பிரிக்கப்பட்டு அவர்கள் சேர்வதற்கெனத் தனித்தனியாகப் படிப்புகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பாஸ் செய்தவர்கள் சேர்வதற்கென 31 வகை பயிற்சிகளும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்வதற்கென 18 வகை பயிற்சிகளும் உள்ளன. இவற்றில் ஒரு வருடப் பயிற்சிகள் 28, இரண்டு வருடப் பயிற்சிகள் 22 உள்ளன. பொறியியல் சார்ந்த பிரிவுகள், பொறியியல் சாராத பிரிவுகள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எதுவும் கிடையாது.

தமிழக அரசு கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 61 ஐடிஐ பயிற்சி நிறுவனங்களை நடத்துகிறது. பெண்களுக்கு மட்டும் தனியாக 10 நிறுவனங்களும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கெனத் தனியாக தலா ஒரு பயிற்சி நிறுவனமும் உள்ளன. அரசு நடத்தும் நிறுவனங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 700 தனியார் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் மட்டும் சுமார் 70,000 ஐடிஐ சீட்டுகள் உள்ளன. ITI படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப இணையதளம்: skilltraining.tn.gov.in.

பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளில் சேர விரும்புவோர், அந்தக் கல்வி நிறுவனத்தில் ஒர்க்‌ஷாப் மற்றும் லேப் வசதிகள் முழுமையாக உள்ளனவா, நல்ல பயிற்சியாளர்கள் உள்ளார்களா, சிறந்த பயிற்சி தருகிறார்களா, துறை சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி முறையாக இண்டஸ்ட்ரியல் டிரெய்னிங் தருகிறார்களா என்பதையெல்லாம் முறையாக விசாரித்துக்கொண்டு சேர்வது நல்லது.

- படிப்பு தொடரும்...

******

பாலிடெக்னிக் பாடப்பிரிவுகள்!

ஒரு காலத்தில் பாலிடெக்னிக்கில் வழக்கமான சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ற குறிப்பிட்ட பிரிவுகள் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று இன்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அத்தனை துறைகளுமே பாலிடெக்னிக் படிப்புக்கு வந்துவிட்டன. அவரவர் விருப்பம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பைப் பொறுத்து இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். தமிழகத்தின் பாலிடெக்னிக்குகளில் உள்ள சில முக்கியப் படிப்புகளின் பட்டியல் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 12 - உடனடி வேலை தரும் பாலிடெக்னிக் & ஐடிஐ படிப்புகள்!

ஐடிஐ பாடப்பிரிவுகள்!

* ஐடிஐ-களில் டிரோன் பைலட், மெக்கானிக் ரிப்பேர் & மெயின்டனன்ஸ்-டூவீலர், பில்டிங் மெயின்டனன்ஸ், ஹவுஸ் கீப்பிங், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஈவன்ட் மேனேஜ்மென்ட் அசிஸ்டென்ட் போன்றவை 6 மாத காலப் படிப்பாக சொல்லித் தரப்படுகின்றன.

* டி.டி.பி ஆபரேட்டர், இன்டீரியர் டெக்கரேஷன், மெக்கானிக் (டீசல்), மெக்கானிக் ரிப்பேர் & மெயின்டனன்ஸ் - லைட் வெஹிக்கல்ஸ், மெக்கானிக் ரிப்பேர் & மெயின்டனன்ஸ் - ஹெவி வெஹிக்கல்ஸ், மெக்கானிக் - கம்யூனிகேஷன் எக்யூப்மென்ட் மெயின்டனன்ஸ், மெக்கானிக் - லென்ஸ் / பிரிஸ்ம் கிரைண்டிங், ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டன்ட், ஹேர் & ஸ்கின் கேர், ஸ்டூவர்ட், டிரஸ் மேக்கிங், டைரியிங், பேக்கர் & கன்ஃபெக்‌ஷனர், போட்டோகிராபர் போன்றவை ஓராண்டுக்காலப் பாடப்பிரிவுகள்.

* ஃபிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், மெக்கானிஸ்ட் (கிரைண்டர்), எலெக்ட்ரோ பிளேட்டர், லிஃப்ட் மெக்கானிக், மெக்கானிக் - மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்-கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்-மோட்டார் வெஹிக்கல்ஸ், மெக்கானிக் - ரேடியோ & டிவி, மெக்கானிக்-ரெஃப்ரிஜிரேஷன்& ஏர்கண்டிஷனர், எலெக்ட்ரீஷியன், டிராஃப்ட்ஸ்மேன், சர்வேயர், டென்டல் லேபரட்டரி டெக்னீஷியன் போன்றவை 2 ஆண்டுக்காலப் பாடப்பிரிவுகள்.