சட்டம்: ஒருகாலத்தில் அரசியலின் நுழைவாயிலாக சட்டக் கல்லூரிகள் இருந்தன. புகழ்பெற்ற அரசியல்வாதிகள் பலரும் அங்கிருந்தே உருவானார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே சமீப ஆண்டுகளில் மீண்டும் சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே இருந்த சட்டப்படிப்பு சமீப ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. தவிர, பிளஸ் 2 வகுப்பில் என்ன குரூப் எடுத்திருந்தாலும் சட்டம் படிக்கலாம் என்பது இன்னொரு வசதி. சில குறிப்பிட்ட பட்டப்படிப்புகள் இதற்கு விதிவிலக்கு. தமிழகம் தாண்டி இந்தியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் சட்டம் படிக்கும் ஆர்வமும் நம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் படிக்க நல்லவேளையாக நுழைவுத்தேர்வு கிடையாது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் BA LLB என்கிற ஐந்து வருட சட்டப் படிப்பில் சேர, உங்கள் பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே போதும். இதற்கு Cut off எப்படிக் கணக்கிடப்படுகிறது? பிளஸ் 2-வில் மொழிப் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களைத் தவிர்த்து விட்டு மற்ற நான்கு பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் சராசரியைக் கணக்கில் எடுத்து அது நூற்றுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுக்க விண்ணப்பித்தவர்கள் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு ஒவ்வொரு சுற்றாக கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுகிறார்கள். பிளஸ் 2-வில் சட்டம் சார்ந்த Vocational குரூப் எடுத்தவர்களுக்கு நான்கு சதவிகித இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை. தற்போது பணியில் இருப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளும், திண்டிவனத்தில் சரஸ்வதி சட்டக்கல்லூரி என்கிற தனியார் சட்டக் கல்லூரியும் உள்ளன. இவை அனைத்துக்கும் சேர்த்து சிங்கிள் விண்டோ கவுன்சலிங் மூலமாக பொறியியல் பட்டப்படிப்பு போலவே, ஒரே ஒரு விண்ணப்பம் மூலம் நாம் அட்மிஷன் பெறலாம். இவற்றில் ஒருசில அரசு சட்டக் கல்லூரிகளில் மட்டும் தமிழ் வழியில் பயிலும் வாய்ப்பும் உள்ளது. இதற்கென தனியாக 60 இடங்கள் கொண்ட ஒரு வகுப்பு உள்ளது. இவற்றில் இருக்கும் வசதிகள் குறித்துப் பெட்டிச் செய்தியில் பார்க்கவும்.
இந்தக் கல்லூரிகள் பற்றிக் காலம்காலமாக நாம் தெரிந்து வைத்திருக்கும் நிலையில் சென்னையில் உள்ள இன்னொரு சிறப்பு சட்டக்கல்லூரி பற்றி நம்மில் பலருக்கு அதிகம் தெரிவதில்லை. சென்னைத் தரமணி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள SOEL எனப்படும் School of Excellence in Law சட்டக்கல்லூரிதான் அது. இங்கு BA LLB(Hons), BBA LLB(Hons), B.Com LLB(Hons), BCA LLB(Hons) என நான்கு வகையான ஹானர்ஸ் பட்டப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் BCA LLB(Hons) படிப்புக்கு மட்டும் பிளஸ் 2 வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும். B.Com(Hons) படிப்புக்கு பிளஸ் 2 வகுப்பில் காமர்ஸ் பாடம் எடுத்திருக்க வேண்டும். மற்ற இரண்டு படிப்புகளுக்கும் பிளஸ் 2 வகுப்பில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்தான். SC, ST வகுப்பினர் பிளஸ் 2-வில் 60 சதவிகித மதிப்பெண்ணும், மற்ற அனைவரும் பிளஸ் 2 வகுப்பில் 70 சதவிகித மதிப்பெண்ணும் எடுத்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இங்கும் நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ் 2 வகுப்பில், மொழிப் பாடங்கள் தவிர்த்து மற்ற நான்கு பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சிங்கிள் விண்டோ கவுன்சலிங் மூலம் அட்மிஷன் நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அட்மிஷன் நடைபெறும்.
சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பொறுத்தவரை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரி இவற்றுக்கு என ஒரு விண்ணப்பமும், பிறகு SOEL எனப்படும் School of Excellence in Law சட்டக்கல்லூரிக்குத் தனியாக ஒரு விண்ணப்பமும் போட வேண்டும். சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான இந்த ஆண்டுக்கான ஆன்லைன் அப்ளிகேஷன் தொடங்கிவிட்டதால் அத்தனை விவரங்களையும் நீங்கள் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைய முகவரிக்குச் சென்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். இதோ அந்த இணைய முகவரி: www.tndalu.ac.in
சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் பார் கவுன்சிலில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி செய்வது என்பது ஒரு புறமிருக்க, ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்களில் Law Officer என்கிற பதவியும் அவர்களுக்குக் காத்திருக்கிறது என்பது நல்ல விஷயம். சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்புகளில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

வேளாண்மை: தமிழ்நாட்டில் காலங்காலமாகப் புகழ்பெற்றதுதான் அக்ரி என்று அழைக்கப்படும் விவசாயப் படிப்புகள். நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவம் முயற்சி செய்து கிடைக்காத மாணவர்களின் வடிகாலாக விளங்கிவருபவை இந்த வேளாண் படிப்புகள்தான். எப்போதுமே அதிக போட்டி உள்ள இந்தப் படிப்புக்கு சமீப ஆண்டுகளில் இதனால் இன்னும் கூடுதலாக விண்ணப்பங்கள் வரத்தொடங்கியுள்ளன. கோவை வேளாண் பல்கலைக்கழகம் 18 அரசுக் கல்லூரிகளையும் 28 தனியார் விவசாயக் கல்லூரிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் மொத்தம் 2,148 அரசு இடங்களும் 2,337 தனியார் கல்லூரிகளின் இடங்களும் உள்ளன. இவை அனைத்திற்கும் சிங்கிள் விண்டோ கவுன்சலிங் மூலம் ஒரே விண்ணப்பத்தில் அட்மிஷன் நடத்தப்படுகிறது. இந்த வருடத்துக்கான அக்ரி அட்மிஷன் தொடங்கிவிட்ட நிலையில் இதற்கான ஆன்லைன் அப்ளிகேஷன் போடவேண்டிய இணைய முகவரி: tnau.ucanapply.com
அக்ரியைப் பொறுத்தவரை அனைத்து பி.எஸ்ஸி படிப்புகள் மற்றும் பயோ டெக்னாலஜி இன்ஜினீயரிங் ஆகியவற்றிற்கு கண்டிப்பாக பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் படித்திருப்பது அவசியம். தவிர அக்ரி பிரிவில் Vocational குரூப் எடுத்த மாணவர்களுக்கு ஒரு சில பட்டப்படிப்புகளில் 5% இட ஒதுக்கீடு உண்டு. பயோடெக்னாலஜி தவிர மற்ற மூன்று இன்ஜினீயரிங் படிப்புகளுக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கான cut off எப்படிக் கணக்கிடப்படுகிறது? மொழிப்பாடங்கள் தவிர்த்த மற்ற நான்கு பாடங்களிலும் வாங்கும் மதிப்பெண்களை தலா 50 மதிப்பெண் வீதம் கணக்கில் எடுத்து மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கு cut off கணக்கிடப்பட்டு அதன்மூலம் ரேங்க் லிஸ்ட் போடப்படுகிறது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் படிப்புகள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவை என்றாலும், ஒரு சில படிப்புகள் சற்று வித்தியாசமானவை. உதாரணமாக, வனத்துறை சார்ந்து சொல்லித்தரப்படும் Forestry படிப்பு மேட்டுப்பாளையத்தில் வனத்தின் நடுவிலேயே உள்ள அரசுக் கல்லூரியில் இருக்கிறது. தவிர இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான Energy and Environmental Engineering பொறியியல் படிப்பு இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழகத்தில் உச்ச பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு IAS மற்றும் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு IPS இருவருமே கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.
- படிப்பு தொடரும்

விதவிதமான வேளாண் படிப்புகள்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆறு வகையான B.Sc.(Hons) படிப்புகளும், நான்கு வகையான இன்ஜினீயரிங் படிப்புகளும் உள்ளன. தவிர, இரண்டு பட்டப்படிப்புகள் தமிழ் வழியிலும் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் சொல்லித் தரப்படுகின்றன. இங்குள்ள இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு நேரடியாக இங்குதான் விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. படிப்புகள் விவரம் இதோ:
