Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?

வானத்தில் பறக்க விருப்பமா?
பிரீமியம் ஸ்டோரி
வானத்தில் பறக்க விருப்பமா?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
வானத்தில் பறக்க விருப்பமா?
பிரீமியம் ஸ்டோரி
வானத்தில் பறக்க விருப்பமா?

இந்தியாவில் சமீப ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமானதாக இருந்தது விமானப் பயணம். சமீப ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த கட்டண டிக்கெட்டுகள், நாடெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் நவீனமயமாகிவருதல், உள்நாட்டில் நிறைய சிறு நகரங்களையும் சென்றடையும் வசதி, உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் கணிசமான அந்நிய நேரடி முதலீடு ஆகிய காரணங்களால் உலக விமானப் போக்குவரத்து வரைபடத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் தற்போது உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச விமானப் போக்குவரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்தத் துறை சார்ந்த வேலைவாய்ப்பும் எந்த அளவுக்கு உயரும் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனவே, பைலட் மற்றும் விமானப் பணிப்பெண்களின் தேவையும் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.

பைலட்: இது படித்து வாங்கக்கூடிய ஒரு பட்டம் அல்ல, மத்திய அரசின் DGCA எனப்படும் Director General of Civil Aviation கொடுக்கிற ஒரு லைசென்ஸ் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். அது, CPL எனப்படும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ். ஒரு விமானத்தை சுயமாக 200 மணி நேரம் வெற்றிகரமாக இயக்கும் திறன் பெற்றவர்களுக்கு பைலட் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கு +2 படிப்பு போதுமானது, ஆனால் அதில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும். மெடிக்கல் ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். ‘கண்ணாடி போட்டவர்களை பைலட்டாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்' என ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. அனுமதிக்கப்படும் அளவில் பார்வைத்திறன் உள்ளதா என சோதித்து அப்படி இருக்கும் பட்சத்தில் கண்ணாடி போட்டவர்களும் பைலட் ஆக முடியும் என்பதுதான் உண்மை.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?
avid_creative

ஒரு காலத்தில் அயல்நாட்டில் மட்டுமே சென்று பைலட் பயிற்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இன்று இந்தியாவிலேயே நிறைய கல்லூரிகள் தோன்றியுள்ளன என்பது நல்ல செய்தி. சரி, பைலட் பயிற்சியில் அப்படி என்னவெல்லாம் சொல்லித் தரப்படுகிறது?

ஆகாயம் சார்ந்த சர்வதேச சட்டதிட்டங்கள், வானில் திசை மாற்றம், வானிலை, விமானம் சார்ந்த தகவல் தொடர்பு சாதனங்களைக் கையாள்வது, விமானங்களின் என்ஜின்கள் இயங்கும் விதம் ஆகியவை அடங்கும். இந்தப் புரிதல்களோடு விமானத்தை இயக்கும் பயிற்சி தொடங்கும். நீங்கள் சேரும் கல்லூரி அல்லது பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமாக விமானம் உள்ளதா என்பதை மட்டும் பார்த்துச் சேர வேண்டும்.

பைலட் படிப்பைப் பொறுத்தவரை பலருக்குத் தடையாக இருக்கக்கூடிய ஒரே விஷயம் கல்விக் கட்டணம்தான். வெளிநாட்டில் சென்று படித்தால் சுமார் 50 லட்ச ரூபாயும், அதுவே இந்தியாவில் படித்தால் சுமார் 20 லட்ச ரூபாயும் செலவாகும் என்கிற சூழலில் இது எல்லோருக்கும் சாத்தியமாகும் ஒன்றாக இருப்பதில்லை. எனினும், வங்கியில் கல்விக்கடன் கிடைத்துப் படிக்க முடியும் என்றால் நீங்கள் துணிந்து செய்யலாம். காரணம், பைலட் சம்பளம் கவர்ச்சிகரமானது. பைலட் வேலைக்கு இந்திய விமான நிறுவனங்களுக்கே நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். நீங்கள் வாங்கும் கடனை எளிதில் அடைத்துவிட முடியும். பைலட் என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொருத்தனமானது. சொல்லப்போனால் சமீப ஆண்டுகளில் கணிசமான பெண்கள் பைலட்டாக நம் ஊரில் இருக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?

ஏர் ஹோஸ்டஸ்: ஒரு காலத்தில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனங்கள் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே இருந்தன. இந்த நிலை மாறி இன்று தமிழகத்திலேயே நிறைய பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. சென்னை போன்ற பெருநகரில் மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் நிறைய தனியார் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

ஏர் ஹோஸ்டஸ் என்பதைத் தமிழில் நாம் விமானப் பணிப்பெண் என்று அழைத்தாலும்கூட, நடைமுறையில் பார்க்கும்போது நிறைய விமானப் பணி ஆண்களும் உண்டு என்பதுதான் உண்மை. ஆம், ஏர் ஹோஸ்டஸ் பதவியில் உலகெங்கிலுமே ஆண், பெண் இருபாலரும் சம அளவில் இருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியைப் பொறுத்தவரை 6 மாதத்தில் தொடங்கி 2 வருடங்கள் வரையிலான பல்வேறு டிப்ளோமா படிப்புகள் உள்ளன. எனினும் ஒரு வருடப் பயிற்சி என்பதே அதிகம் காணப்படுகிறது. ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் சேர்வதற்கு +2 முடித்தாலே போதுமானது என்றாலும்கூட, பல சமயங்களில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில் அதிகம் சேர்கிறார்கள். நமது இந்திய விமானங்களே அயல் நாடுகளுக்கும் செல்கின்றன. அயல்நாட்டு விமான நிறுவனங்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சூழலில் பட்டப்படிப்பு அவசியம் என்பதை உணர்ந்து, பெரும்பாலான விமான நிறுவனங்களில் பட்டப் படிப்பு முடித்தவர்களை வேலைக்கு எடுப்பதையே விரும்புகிறார்கள். எனினும் இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் எனப் பகுதிநேரமாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்பதால், பலர் ஒரு முழுநேரக் கல்லூரியில் பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டே ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியைப் பகுதிநேரமாக எடுத்து ஒரே சமயத்தில் இரண்டையும் வெற்றிகரமாக முடித்துவிடுகிறார்கள்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?
CraigRJD

சரி, ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் அப்படி என்னவெல்லாம் சொல்லித் தரப்படுகின்றன? விமானம் சார்ந்து, சுற்றுலா சார்ந்து, ஹோட்டல் துறை சார்ந்து எனப் பல்வேறு விஷயங்கள் அடக்கம். முதலில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் அனைவரோடும் பழகுவதற்குத் தேவையான அடிப்படைப் பயிற்சி தரப்படும். ஏனென்றால், ஒரு விமானத்தை எடுத்துக்கொண்டால் நன்கு சிரித்துப் பேசுபவர்களில் தொடங்கி எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவர்கள் வரை பலதரப்பட்ட பயணிகளும் இருப்பார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் நாம் பொறுமையோடு சிரித்துக்கொண்டே அவர்களைக் கையாள்வது அவசியம் என்பதால் இந்தத் தன்னம்பிக்கைப் பயிற்சி முக்கியம். இந்தப் பயிற்சியைப் பொறுத்தவரை சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உங்களுக்கு ஊட்டப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலம் தவிர இந்தி மற்றும் பல்வேறு மாநில மொழிகள் நன்கு தெரிந்தவர்களுக்கான வாய்ப்பு சற்று பிரகாசமாக அமைகிறது.

அடுத்து, உங்களை உடல்ரீதியாகவும் தோற்றம் சார்ந்தும் எப்படிச் சீர்ப்படுத்திக்கொள்வது என்பதை விரிவாகவே சொல்லித் தருவார்கள். இதையடுத்து விமானத் துறை சார்ந்த விரிவான அறிமுகம் வழங்கப்படும். தவிர, விமானத்துக்கு டிக்கெட் கொடுப்பதை, அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதால், ஏர் டிக்கெட்டிங் சம்பந்தமான பயிற்சியும் வழங்கப்படும். கூடவே, சுற்றுலாத் துறை சார்ந்த அறிவும் ஊட்டப்படும். இவற்றையெல்லாம் தாண்டிய மிக முக்கியமான பயிற்சியாக நீங்கள் எடுத்துகொள்ள வேண்டியது நீச்சல் பயிற்சி. அவசர காலங்களில் முதலுதவி செய்வது பற்றியும் கற்றுத் தரப்படும். இவை தவிர, விமானத்தின் உள்ளேயே பிராக்டிகல் டிரெய்னிங் எடுத்துக்கொள்வதும் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் முக்கியமான பகுதி.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?
mnbb

ஹோட்டல் துறை சார்ந்த நிர்வாகம் மற்றும் உணவுத்துறை சார்ந்த பரிமாறுதல் பயிற்சி ஆகியவையும் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படும். இதனால், ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி முடித்தவர்கள் விமானத்தில் மட்டுமல்லாது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். சமீப ஆண்டுகளில் உலகளாவிய நாடுகளில் அதிகரித்து வரும் க்ரூஸ் எனப்படும் சொகுசுக் கப்பல்களிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனங்களில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள் என்பதால் அட்மிஷன் வழிமுறைகளை அவரவர் வசதிக்கேற்ப வடிவமைத்துக்கொள்கிறார்கள். நுழைவுத்தேர்வு, கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தாலும்கூட, ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் சேர்வது அவ்வளவு சிரமமான விஷயம் இல்லையென்றே சொல்லலாம்.

(படிப்பு தொடரும்)

எந்த ஊர் பிஸி?

இந்திய அளவில் நூற்றுக்கணக்கான விமான நிலையங்கள் இருந்தாலும், முக்கிய மெட்ரோ நகரங்களில் உள்ள 6 விமான நிலையங்கள்தான் அதிக பயணிகளைக் கையாள்கின்றன. சென்ற ஆண்டு சரியான உதாரணம் இல்லை என்பதால் கோவிட் காலகட்டத்துக்கு முந்தைய 2019-ம் ஆண்டின் புள்ளிவிவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?

யார் உயரத்தில்?

இந்திய அளவில் பிரபலமாக உள்ள சில விமான நிறுவனங்களும் அவற்றைப் பற்றிய முக்கியப் புள்ளிவிவரங்களும்:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 16 - வானத்தில் பறக்க விருப்பமா?

இந்திய விமானப் போக்குவரத்து- ஒரு பார்வை!

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் சமீபகால வளர்ச்சி, உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்தத் துறையில் நடைபெறவுள்ள அபார வளர்ச்சி குறித்து ஒரு சில தகவல்கள் இதோ:

* இந்தியாவில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து 2027-ல் 1,100 விமானங்கள் நம் நாட்டில் இருக்கும்.

* 2025-க்குள் இந்தியாவில் புதிதாக 220 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

* விமான நிலைய உருவாக்கத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு 100% வரிவிலக்கு உண்டு.

* சென்னை அருகே பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் புதிதாக அமையவிருக்கிறது.