Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 18 - இந்தியக் கல்வியின் எதிர்காலம்!

கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கல்வி

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 18 - இந்தியக் கல்வியின் எதிர்காலம்!

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கல்வி

நம் நாட்டில் உள்ள பல்வேறு வகையான மேற்படிப்புகள், அவற்றுக்கான எதிர்காலம், அவற்றில் சேர வழிமுறைகள் ஆகியவற்றை கடந்த சில வாரங்களில் விரிவாகவே பார்த்தோம். இந்த ஆண்டுக்கான கலை அறிவியல் கல்லூரிகளின் அட்மிஷனும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அட்மிஷனும் ஓரளவுக்கு முடிந்துவிட்டன என்று சொல்லலாம். பொறியியல், விவசாயம், சட்டம் ஆகியவற்றின் அட்மிஷன் நடைமுறைகள் தொடர்கின்றன. மருத்துவச் சேர்க்கை எப்போதும்போல மிகத் தாமதமாகவே இப்போதும் நடைபெறுகிறது.

இந்தியக் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், வளர்ச்சி, எதிர்காலம் மற்றும் சந்திக்க உள்ள சவால்கள் ஆகியவற்றை விரிவாக சற்று அலசுவோம். இந்தியாவில் 5 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் சுமார் 58 கோடிப் பேர். இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை என்பதால் கல்வித்துறையின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்பதே அறிஞர்களின் கருத்து. புள்ளிவிவரங்களும் இதை உறுதி செய்கின்றன.

கொரோனாத் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வியை எந்த அளவுக்கு பாதித்ததோ, அதே அளவிற்கு புதிய கோணத்தில் வளர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஆன்லைன் கல்விதான் இதற்கான மிகப்பெரிய உதாரணம். தற்காலிகமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கத் தொடங்கிய இந்த நடைமுறை, இனி ஆன்லைனில் பட்டம் பெறலாம் என்கிற அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. மத்திய அரசும் ஆன்லைன் கல்விக்கான நெறிமுறைகளை வகுத்து, அதைப் பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. ஒரு காலத்தில் தொலைதூரக் கல்விக்கெனப் பல்கலைக்கழகங்கள் தனியாக ஒரு பிரிவைத் தொடங்கியதுபோல, தற்போது பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் கல்வியில் பெரிய அளவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. சென்னை ஐஐடி போன்ற முன்னணிக் கல்வி நிறுவனங்கள்கூட ஆன்லைன் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளன. இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்கிற யுஜிசி அறிவிப்பு, ஆன்லைன் கல்வி வளர கண்டிப்பாக உதவும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 18 - இந்தியக் கல்வியின் எதிர்காலம்!
triloks

ஒரு சில விஷயங்களில் ஆன்லைன் கல்வி சமூகக் கண்ணோட்டத்தில் நல்லதாகவே கருதப்படுகிறது. குறைந்த செலவில் பட்டம் வாங்க முடியும் என்பது ஒரு ஆறுதல். தவிர, ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எப்படி தொலைதூரக்கல்வி பயன்பட்டதோ அதுபோல இன்று வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏராளமான பெண்களுக்கு ஆன்லைன் கல்வி புதிய வாசல்களைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

முழுநேரப் பட்டப்படிப்புகள் ஆன்லைனில் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, பல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவைப்படும் குறுகிய காலப் பயிற்சி வகுப்புகளும் ஆன்லைனில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இவை சில வாரங்களில் தொடங்கி சில மாதங்கள் வரையிலான கால அளவுகளில் கொடுக்கப் படுகின்றன. குறிப்பாக மென்பொருள் துறை சார்ந்த பல கோர்ஸ்களும் இப்போது ‘Edutech’ என்று அழைக்கப்படும் ஏராளமான நிறுவனங் களால் வழங்கப்படுகின்றன. இந்த கோர்ஸ்கள் மாணவர்களுக்குப் பயன் அளிப்பதோடு, வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், ஏற்கெனவே பல்வேறு துறைகளில் வேலையில் உள்ளவர்களுக்கு அடுத்த நிலைக்கு உயர்வதற்கும் உதவுகின்றன.

KPMG ஆய்வறிக்கையின்படி ஆன்லைன் கல்வியில், அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் கல்வி மார்க்கெட் 18,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ‘Edutech’ நிறுவனங்களில் மட்டும் சென்ற ஆண்டு சுமார் 37,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கல்வி இந்த அளவுக்கு வளர்ந்தாலும், இது கிராமப்புற மக்களைச் சென்றடைவது இன்னும் சவாலாகவே உள்ளது. கிராமங்களைச் சரியாகச் சென்றடையாத இன்டர்நெட் வசதி, டேட்டா கட்டணம் அதிகமாக இருப்பது போன்றவை இந்த ஆன்லைன் கல்வி விஷயத்தில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொடுக்கப்படும் இலவச லேப்டாப் மற்றும் டேட்டா கார்டு ஆகியவை ஓரளவுக்கு ஆறுதல் என்று எடுத்துக் கொண்டாலும், அவை மட்டுமே முழுமையான தீர்வு ஆகிவிட முடியாது.

சமீப ஆண்டுகளில் அதிகமாக வளர்ந்து வருகிற, எதிர்காலத்தில் மிகப்பெரிய வீச்சில் வளரப்போகிற இன்னொரு துறை கோச்சிங் பிசினஸ். JEE போன்ற நுழைவுத்தேர்வுகள் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் சமீபத்திய NEET மற்றும் இப்போது அறிமுகமாகியுள்ள CUET போன்ற பல்வேறு தேர்வுகளும் கோச்சிங் சென்டர் கலாசாரத்தை மிகப்பெரிய அளவில் வளர்த்துவருகின்றன. தவிர, தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் எடுத்துவந்த டியூஷன் இப்போது பெரிய அளவில் டியூஷன் சென்டர் பிசினஸாக உருவெடுத்திருப்பதும் ஒரு புதிய கோணம். இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் கோச்சிங் பிசினஸில் ஒரு ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் புழங்குவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது.

புதிய தேசியக் கல்விக்கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் வேளையில் இன்னும் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். உதாரணமாக தற்போது உள்ள பல்கலைக்கழகங்கள் ‘Affiliation’ என்கிற பெயரில் நூற்றுக்கணக்கான கல்லூரிகளை மேய்க்கும் வேலையை நிறுத்திவிட்டு, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது இந்தக் கொள்கை. கூடவே விவசாயம், சட்டம், பொறியியல் எனத் தனித்தனியாக ஒரு துறை சார்ந்த பல்கலைக்கழகங்கள் இருப்பதைத் தவிர்த்துவிட்டு இனி எல்லாமே பல்துறைப் பல்கலைக்கழகங்களாக மாறினால் மட்டுமே வெவ்வேறு துறைகளோடு இணைந்து பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பதுதான் அதற்கான அடிப்படை. எனவே, ஆராய்ச்சி சார்ந்த வாய்ப்புகள் ஏராளமாக நமக்குக் கிடைக்கலாம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 18 - இந்தியக் கல்வியின் எதிர்காலம்!
aurielaki

புதிய தேசியக் கல்விக்கொள்கை கவனம் செலுத்தும் இன்னொரு முக்கியமான துறை ‘Vocational’ எனப்படும் தொழில் பயிற்சி. ஏற்கெனவே இதற்கென NSDC (National Skill Development Corporation) என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்களுக்குப் பல்வேறு துறைகளிலும் தனித்திறன் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், இனி அவை கல்லூரிகளிலும் ஊடுருவி பல்வேறு வகையான பட்டப் படிப்புகளாக மாறவேண்டும் என்கிற முயற்சி தீவிரமாக நடக்கிறது. அந்த வகையில் பல்வேறு பிரிவுகளிலும் B.Voc. என்கிற பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இவை உடனடி வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதோடு சுய தொழில் தொடங்கவும் உதவும்.

இந்தியக் கல்வியில் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால், ஆசிரியர்கள் பற்றாக்குறை. யுனெஸ்கோ அறிக்கையின்படி இந்தியாவின் ஒட்டுமொத்தப் பள்ளிக்கல்வியில் 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற நிலையும் அது மேல்நிலைப் பள்ளிகள் என்று வருகிறபோது 47 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற நிலையிலும் உள்ளது.

பள்ளிக்கல்வியில் இருக்கக்கூடிய இன்னொரு மிகப்பெரிய சவால், மாணவர்களின் இடைநிற்றல். கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் இது இன்னும் அதிகரித்துள்ளது. இது தொடராமல் பார்த்துக்கொள்வதோடு, ஏற்கெனவே இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி நீரோட்டத்திற்குக் கொண்டுவர அரசு முயலவேண்டும்.

நம் நாட்டில் பள்ளிக்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கைக்கும் உயர்கல்வி செல்பவர்கள் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்படுவதற்குப் பொருளாதாரச் சூழல் முக்கிய காரணம். அரசு என்னதான் வங்கிகளைக் கல்விக் கடன் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினாலும், நடைமுறையில் அது அவ்வளவு சுலபமாக இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இப்படி எத்தனையோ சவால்கள் இருந்தாலும் கூட, இந்தியப் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என அனைத்துமே உலக அளவில் பாராட்டப்படக் கூடியவையாகத் தொடர்கின்றன என்பது நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். எனினும் இப்போதுள்ள குறைபாடுகள் களையப்பட்டு, சவால்கள் சரிசெய்யப்பட்டு அடுத்த நிலைக்குக் கல்வியை எடுத்துச் செல்லும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் உண்டு.

(படிப்புக்கு இத்துடன் இடைவேளை)

பள்ளிக்கல்வி: ஒரு பார்வை!

* இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் ஒட்டுமொத்தமாக 26.45 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். இது உலகின் அனைத்து நாடுகளையும் கடந்த முதலிடம்.

* இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.59,819 கோடி.

* இந்தியாவில் மொத்தம் 15,07,708 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 70% அரசுப் பள்ளிகள்.

தேவைகள் அதிகம்!

* அடுத்த சில ஆண்டுகளில் இந்தியக் கல்வித் துறையில் செலவிடப்படும் தொகை சுமார் 17 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

* இந்த வளர்ச்சி விகிதத்தின்படி உடனடியாக இந்தியாவில் 2 லட்சம் பள்ளிகள், 35,000 கல்லூரிகள், 700 பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகின்றன.

* உடனடியாக 4 கோடி பேருக்குத் தொழிற்பயிற்சி இடங்கள் தேவைப்படுகின்றன.

* இந்தியக் கல்வித்துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி: ஒரு பார்வை!

* இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 3.85 கோடி. இதில் 1.96 கோடி மாணவர்களும் 1.89 கோடி மாணவிகளும் அடக்கம்.

* இந்தியாவில் 981 பல்கலைக்கழகங்களும் 42,343 கல்லூரிகளும் உள்ளன.

* இந்தியாவில் 8,997 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

* உலகின் மிகப்பெரிய விவசாய ஆய்வு நிறுவனமான ICAR அமைப்பின் கீழ் 67 பல்கலைக்கழகங்களும் 122 கல்லூரிகளும் இயங்குகின்றன.