Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

வாழ்க்கை வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கை வழிகாட்டல்

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
வாழ்க்கை வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கை வழிகாட்டல்

வேலை கிடைக்கத் தேவையான திறன்கள்!

படித்தும்கூட வேலை கிடைக்காமல் இருப்பதற்கு Employability ஸ்கில்ஸ் இல்லாததுதான் காரணமென்று சொல்லியிருந்தேன். சரி, அது என்ன Employability Skills? அது தானாக இருக்க வேண்டுமா, அல்லது, நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? இந்த இதழில் அதை விரிவாகவே பார்ப்போம்.

ஒருவருடைய வேலைவாய்ப்புக்கான திறன்களை அவர் முழுமையாக உருவாக்கிக் கொள்வதுதான் Employability Skills எனப்படுகிறது. வேலைவாய்ப்புக்கான திறன்கள் சாஃப்ட் ஸ்கில்ஸ் மற்றும் Hard ஸ்கில்ஸ் என இரண்டு வகைப்படுகிறது. நாம் வேலையில் சேர்வதற்கு முன்பே கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டியவை Soft Skills. இது எந்தத் துறை சார்ந்த வேலையாக இருந்தாலும் பொருந்தும். Hard Skills நீங்கள் குறிப்பாக எந்தத் துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்தத் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதாகும். இந்த இரண்டும் ஒருசேர ஒருவருக்கு இருக்கும்போது வேலை கிடைப்பதும் எளிது, பிறகு அந்த வேலையைத் தக்க வைத்துக்கொள்வதும் சாத்தியம்.

Communication Skill: வேலைவாய்ப்புத் திறன்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது கம்யூனிகேஷன் ஸ்கில். இன்று வேலைக்கான இன்டர்வியூவுக்குப் போகும் பலர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இன்னும் பலர் நிராகரிக்கப்படுவதும் இந்த கம்யூனிகேஷன் ஸ்கில் அடிப்படையிலேயேதான். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் முழுமையான பதிலை உரிய விதத்தில் சொல்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதைச் சரியாகச் செய்ய முடியாதவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இப்படி சிறப்பாகச் சொல்லப்படும் பதில்களுக்குப் பாட அறிவு மற்றும் பொது அறிவு அவசியம் என்றாலும்கூட அந்த இரண்டையும் சிறப்பாக வெளிப்படுத்தத் தேவையானது கம்யூனிகேஷன் ஸ்கில் மட்டுமே.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

இதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சவால் இங்கிலீஷ் கம்யூனிகேஷன். தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியில் பள்ளி வரை படித்து, பிறகு ஒரு பொறியியல் கல்லூரியில் சேரும்போது ஆங்கில வழியில் நடத்தப்படும் பாடத்தைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச காலம் தேவைப்படுகிறது. பிறகு இன்டர்வியூவில் பேசுகிற அளவுக்கு ஆங்கிலப் பயிற்சி என்பது முறையாக வளர்த்துக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம். ஆனால், அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் கிடையாது. கல்லூரியில் உள்ள நான்கு ஆண்டுகளில் கல்லூரியே ஆங்கிலப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறது. அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. என்னதான் 30 நாள்களில் ஆங்கிலம் போன்ற புத்தகம் படித்தாலும் ஏதாவது ஒரு கோர்ஸில் சேர்ந்தாலும் அதையெல்லாம் தாண்டி ஆங்கிலத்தில் பேசுவதற்கான சிறந்த வழி, உங்களது முதல் ஆண்டில் இருந்தே கல்லூரி நண்பர்களிடம் எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவது என்று முடிவெடுத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சரி செய்துகொள்வதுதான். ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பதும் ஆங்கில நியூஸ் சேனல்கள் பார்ப்பதும் நீங்கள் ஆங்கிலத்தில் தவறு இல்லாமல் பேச, உங்கள் ஆங்கிலப் பேச்சை நெறிப்படுத்திக்கொள்ள உதவும். இன்று அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான நமது ஐ.டி ஊழியர்களில் பெரும்பகுதியினர் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களே. ஆனால் இன்று அவர்களால் அங்கு சென்று சாதிக்க முடிகிறது என்றால் காலப்போக்கில் அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சி மட்டுமே காரணம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

Teamwork: அடுத்த முக்கியமான ஸ்கில் என்னவென்றால் டீம் ஒர்க். அதாவது எந்த ஒரு செயலையும் குழுவாக இணைந்து செய்வது. நம்மில் பலரும் நமக்கென்று தனியாக ஒரு வேலையைக் கொடுத்தால் பிரித்து மேய்ந்துவிடுவோம். ஆனால் அதையே பத்துப் பேரோடு இணைந்து செய்யச் சொன்னால் அது முடியாது. ஆனால் நிறுவனத்திற்குத் தேவையான ஒரு அடிப்படை ஸ்கில் பலர் இணைந்து செயல்படுவதுதான், அப்போதுதான் வெற்றி சாத்தியம். இதற்கு கிரிக்கெட்டை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில தனி நபர்கள் என்னதான் நிறைய ஸ்கோர் எடுத்தாலும் விக்கெட் எடுத்தாலும், அவர்கள் குழுவோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே அந்த அணி வெற்றி பெறும். டீம் ஒர்க் என்பதும் கல்லூரிக் காலத்திலேயே வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒரு திறன்தான். அடிப்படையில் டீம் என்று வரும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவர் நாம் சொல்வதைக் கேட்கவே மாட்டார். இன்னொருவர் நம்மை எப்போதுமே கோபமூட்டிக்கொண்டு இருப்பார். ஒருவர் ஏதாவது குதர்க்கமாகப் பேசிக்கொண்டே இருப்பார். டெக்னிகலாக எந்த விஷயமும் தெரியாதவருக்கும் கூட அதிர்ஷ்டவசமாக வேலை கிடைத்திருக்கும், அவரும் நம்மோடு இருப்பார். எதையும் உடனே முடித்தாக வேண்டும் என்று உற்சாகம் கரைபுரளும் நபரும் நம்மோடு இருப்பார். கிடக்குது, நாளைக்குப் பார்த்துக்கலாம் என்கிற சோம்பேறியும் நம் கூடவே தான் இருப்பார். இப்படி அத்தனை பேரோடும் தனிப்பட்ட முறையில் நீங்கள் நட்பு பாராட்டலாம்; வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் வேலை, நிறுவனம் என்று வரும்போது பல்லைக் கடித்துக்கொண்டு அத்தனை பேரோடும் ஒற்றுமையாக இணைந்து வேலை செய்வதைத்தான் நிறுவனம் எதிர்பார்க்கும்.

Leadership: நிறுவனத்துக்குத் தேவையான இன்னொரு முக்கியமான திறன் லீடர்ஷிப் எனப்படும் தலைமைப்பண்பு. எந்த ஒரு விஷயத்தையும் தனது மேலதிகாரி சொல்லும்வரை காத்திருக்காமல் தானாக முன்வந்து செய்வதில் தொடங்கி ஒரு பிரச்னை என்று வரும்போது அதைப் பதற்றமில்லாமல் தீர்ப்பது, வாடிக்கையாளர்களிடம் தனது நிறுவனத்தின் பெருமையை கம்பீரமாக நிலைநிறுத்துவது வரை பல்வேறு கோணங்களிலும் ஒரு தனி நபருக்குத் தலைமைப் பண்பு தேவைப்படுகிறது. நமக்கு எதுக்கு வம்பு என்று எல்லாவற்றிலும் ஒதுங்கிப்போகாமல் பொறுப்புகளைத் தானாக முன்வந்து தோளில் ஏற்றிக் கொள்வதுதான் தலைமைப் பண்பின் அழகு. இதைத்தான் ஒரு நிறுவனம் உங்களிடம் எதிர்பார்க்கிறது, கூடவே ஒரு நிறுவனத்தில் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியும் தலைமைப் பண்பு சார்ந்து மட்டுமே அமையும். தொழிற்சாலைகளில் இன்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்தவர் மேனேஜராக உயர்வதும் ஐ.டி நிறுவனங்களில் பத்துப் பேர் கொண்ட குழுவில் வேலை செய்யும் ஒருவர் அந்தக் குழுவுக்கு டீம் லீடராக உயர்வதும் முழுக்க முழுக்க தலைமைப் பண்பு அடிப்படையில்தான்.

டீம் ஒர்க் மற்றும் லீடர்ஷிப் இந்த இரண்டு திறன்களையும் வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் பெரிதாக எங்கும் போய்ப் பயிற்சி எடுக்க வேண்டியதில்லை; கல்லூரிக் காலத்திலேயே எல்லாவிதமான எக்ஸ்ட்ரா கரிகுலர் எனப்படும் அத்தனை போட்டிகளிலும் கலந்துகொள்வதும், குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டிப் பங்கேற்பதும் இந்த குணாதிசயங்களைத் தானாகவே உங்களுக்கு வளர்த்துவிடும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து பல்வேறு குணாதிசயங்களில் ஒன்றுசேரும் நமது வகுப்பு மாணவர்களோடு அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யக் கற்றுக் கொண்டாலே, அதேபோன்ற சிலரோடு நாளை நிறுவனத்திலும் நாம் ஒருங்கிணைந்து வேலை செய்யச் சுலபமாக இருக்கும். தலைமைப் பண்போடு நீங்கள் ஒரு குழுவை ஒருங்கிணைத்து வெற்றி கண்டது இன்டர்வியூ சமயத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுப்பவர்களால் கவனிக்கப்படுகிறது.

Technical: டெக்னிக்கல் ஸ்கில் என்று சொல்லும்போது அதில் கம்ப்யூட்டர் சார்ந்த உங்களுடைய அடிப்படை அறிவில் தொடங்கி உங்கள் துறை சார்ந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பல்வேறு கோர்ஸ்கள் வரை அடங்கும். தவிர, பிரசென்டேஷன் ஸ்கில் மற்றும் மார்க்கெட்டிங் ஸ்கில் ஆகியவையும் இதோடு இணைந்ததுதான். டெக்னிக்கல் ஸ்கில் பொறுத்தவரை வேலைவாய்ப்பைப் பெறுவதற்குக் குறிப்பிட்ட சதவிகிதமும் பிறகு நிறுவனத்தின் உள்ளே வேலையில் வளர்ச்சி காண்பதற்கு அதிக சதவிகிதமும் தேவைப்படும். இவை தவிர Analytical, Problem Solving, Self Management, Time Management என்று காலப்போக்கில் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஸ்கில்ஸ் நிறையவே உண்டு.

- படிப்பு தொடரும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

எதைக் கற்றால் வேலை?

ஐ.டி மற்றும் சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை டெக்னிக்கலாக எதையெல்லாம் கூடுதலாகக் கற்றுக்கொண்டால் வாய்ப்புகள் அதிகம் என்று ஐ.டி துறை வல்லுநர்களிடம் பேசியபோது கிடைத்த பட்டியல் இது. இவை எல்லாமே ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் சர்ட்டிபிகேட் கோர்ஸ்களாகப் பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. ஒரு மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் வரை பல்வேறு கால அளவுகளில் இந்த கோர்ஸ்கள் அமைந்துள்ளன. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோர்ஸ்களைக்கூட தேர்ந்தெடுத்து நீங்கள் படிக்கலாம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

எந்தத் துறையில் எத்தனை பேர்?

இந்தியாவில் ஒவ்வொரு துறை சார்ந்த பட்டப்படிப்பையும் முடித்தவர்களில் வேலை வாய்ப்புக்கான திறன் பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்கிற புள்ளி விவரம் இதோ :

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 3

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/3vEihHU

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism