Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 9 - ஊடகத்துறையில் ஆர்வமா?

ஊடகத்துறையில் ஆர்வமா?
பிரீமியம் ஸ்டோரி
ஊடகத்துறையில் ஆர்வமா?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 9 - ஊடகத்துறையில் ஆர்வமா?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
ஊடகத்துறையில் ஆர்வமா?
பிரீமியம் ஸ்டோரி
ஊடகத்துறையில் ஆர்வமா?

கடந்த பத்தாண்டுகளில் ஊடகத்துறையின் வேகமான வளர்ச்சி, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியா மற்றும் சோஷியல் மீடியாவின் அபார வளர்ச்சி பலரை தொழில்முனைவோராகவே மாற்றியிருக்கிறது. நிறுவனம் சார்ந்த வேலை செய்யாமல் தனி மனிதர்களாக கணிசமான அளவு இதன் மூலம் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது. எனவே ஊடகத்துறை சார்ந்த படிப்புகள் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒரு காலத்தில் திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதும், அங்கு சேர்ந்தால் கெட்டுப்போய்விடுவாய் என்று சொல்லி பெற்றோர்கள் தடை போடுவதும் சகஜம். கிட்டத்தட்ட அதே நிலைதான் இன்று Visual Communication படிப்புக்கும். தமிழகத்தின் ஏராளமான கல்லூரிகளில் B.Sc (Visual Communication) படிப்பு இருந்தாலும், இதில் பெற்றோர் சம்மதத்துடன் சேர்ந்து படிப்பவர்கள் மிகக் குறைந்த சதவிகிதமாகவே இருக்கும். இது ஒருபுறம் இருக்க, Visual Communication படிக்க ஆசைப்பட்ட பலர் இன்ஜினீயர்களாகவும் டாக்டர்களாகவும் பெற்றோர்களால் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதற்கு பெற்றோர்களைக் குற்றம் சொல்வதைவிட, இதுவரை Visual Communication முடித்த மாணவர்களையும் அவர்கள் படித்த பெரும்பாலான கல்லூரிகளையும்தான் சொல்ல வேண்டும். காரணம், Visual Communication முடித்தவர்களில் பலர் சினிமா டைரக்டர் ஆக முயற்சி செய்கிறார்கள். அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. என்றாலும், இன்றும் சினிமாத்துறையில் நுழைய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் Visual Communication சேரும் மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தவிர, கல்லூரிகளில் Visual Communication துறை சார்ந்த எந்த விழாவாக இருந்தாலும் திரைத்துறையைச் சார்ந்தவர்களையே அதிகம் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, ‘இது சினிமா சார்ந்த படிப்பு' என்பதுபோன்ற தோற்றத்தை மேலும் வலுப்படுத்திவருகிறார்கள். Visual Communication முடித்தால் சினிமா தவிர மற்ற எந்தெந்தத் துறைகளில் எல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது என்று இந்தக் கல்லூரிகள் வழிகாட்டினால், மாணவர்கள் அதைப் பற்றி யோசிக்கவோ மற்ற பல துறைகளில் ஈடுபாடு காட்டவோ வாய்ப்பாக அமையும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 9 - ஊடகத்துறையில் ஆர்வமா?

உதாரணமாக, தொலைக்காட்சித் துறையை எடுத்துக்கொள்ளலாம். கடந்த 20 ஆண்டுகளில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட சாட்டிலைட் சேனல்களில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இருந்தும், அதில் Visual Communication படித்தவர்கள் பங்களிப்பு மிகச்சொற்பம்தான். தொலைக்காட்சியிலும்கூட திரையில் தோன்றுபவர்கள் பற்றித் தெரியும் அளவுக்கு திரைக்குப் பின்னால் உள்ள Visual Editor, Sound Engineer, Art Director, Programme Executive, Programme Producer, Marketing Executive, Event Manager போன்ற பத்துக்கும் மேற்பட்ட பதவிகள் பற்றித் தெரிவதில்லை.

தொலைக்காட்சியைப் போலவே சமீப ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள இன்னொரு துறை ரேடியோ. ஒரு காலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மட்டும் இருந்த நிலை மாறி இன்று நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உள்ள ஏராளமான தனியார் பண்பலை வானொலி நிலையங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புதான் இந்த Visual Communication.

இணையதள மற்றும் ஸ்மார்ட்போன் புரட்சியால் வேகமாக வளர்ந்துவருகிற இன்னொரு ஏரியா Digital Media. இதோடு இணைந்ததுதான் அரசியல், சமூகம், சினிமா மூன்றையும் ஆட்டிப்படைக்கும் Social Media. டிஜிட்டல் மீடியா வெகு வேகமாக வளர்ந்து வருகிற சூழலில் டிஜிட்டல் ஜர்னலிசம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகள் உருவாகி வருகின்றன. இவை கல்லூரிகளில் பட்டப் படிப்பாகச் சொல்லித் தரப்பட்டாலும், நிறைய தனியார் நிறுவனங்களும் குறுகியகாலப் படிப்புகளாக இவற்றை நடத்திவருகின்றன. பல மீடியா நிறுவனங்களுமேகூட தங்களுக்குத் தொடர்ந்து ஆட்கள் தேவை என்கிற நோக்கில் இந்தக் குறுகியகாலப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

Visual Communication படிப்பு பரவலாக அறியப்பட்டுவந்த காலத்தில் தொலைக்காட்சி, பண்பலை வானொலி, சினிமா, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றை மட்டும் முதன்மைப்படுத்தித் தொடங்கப்பட்ட இன்னொரு படிப்புதான் Electronic Media. இந்த இரண்டு படிப்புகளிலுமே கிராபிக்ஸ், அனிமேஷன் போன்ற விஷயங்கள் ஓரளவுக்குச் சொல்லித் தரப்பட்டாலும், அதில் மட்டுமே முழுக்கவனம் செலுத்த விரும்புபவர்களுக்கெனத் தனியாக Animation துறையில் பட்டப்படிப்பும் உள்ளது.

பாரம்பரியம் மிக்க சென்னைத் தரமணியின் அரசு திரைப்படக் கல்லூரியில் ஆறு வகையான பிரிவுகளில் பட்டப் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. ஒரு காலத்தில் D.F.Tech என்கிற டிப்ளோமா படிப்புதான் இங்கு இருந்தது. இது பிறகு B.V.A என்கிற பட்டப்படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. படத்தொகுப்பு, இயக்கம், ஒளிப்பதிவு போன்ற ஆறுவகையான துறைகளில் பட்டப்படிப்பு இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் 14 இடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் ஒரு இடம் மற்ற மாநிலத்தவருக்கும், ஒரு இடம் திரைத்துறையில் உள்ளவர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை சார்ந்து படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் இன்னும் சில துறைகள் PR எனப்படும் மக்கள் தொடர்புத் துறை (Public Relations) மற்றும் பலதரப்பட்ட விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் வடிவமைத்து நடத்திக் கொடுக்கும் Event Management ஆகியவற்றைச் சொல்லலாம். இன்று பல்வேறு அரசு நிறுவனங்களிலும்கூட மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற பதவி தனியாக உள்ளது. இதில் பெரும்பாலும் அந்தத் துறை சார்ந்து படித்தவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையைப் பொறுத்தவரை விளையாட்டு, சினிமா போன்ற பிரபல துறைகளோடு சம்பந்தப்பட்டுப் பணிபுரிவதோடு, ஒரு காலகட்டத்தில் தனியாகவே நீங்கள் நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்திக் கொடுப்பவராக உயர முடியும்.

மேலே சொன்ன அத்தனை துறைகளையும் தாண்டி மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளைத் தரும் இன்னொரு ஏரியா விளம்பரத்துறை. இதிலும் இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான விளம்பர நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்பு. குறிப்பாக, பத்திரிகை விளம்பரங்களை உருவாக்கும் பொறுப்பில் உள்ள ஆர்ட் டைரக்டர் ஆகவோ, காப்பி ரைட்டர் ஆகவோ மிக உயர்ந்த சம்பளத்தில் வேலை செய்யலாம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கித் தரும் நிறுவனத்தில் வேலை செய்யவோ, பிறகு ஒரு காலத்தில் அப்படி ஒரு நிறுவனத்தை சொந்தமாகத் தொடங்கவோ வாய்ப்பு அமைவது இன்னொரு வகை.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 9 - ஊடகத்துறையில் ஆர்வமா?

எல்லாக் காலங்களிலுமே புகழ்பெற்று விளங்குகிற ஊடகத்துறை சார்ந்த இன்னொரு படிப்பு Journalism எனப்படும் இதழியல் துறை. இதை முடித்தால் பத்திரிகைகளில் மட்டுமே பணிபுரியலாம் என்பதைத் தாண்டி இன்று நியூஸ் சேனல்களில் வேலை செய்யும் வாய்ப்பு உலக அளவில் விரிவடைந்துள்ளது.

மீடியா துறைப் படிப்புகள் ஆண்களுக்கே சரிவராது என்று பெரும்பாலான பெற்றோர்கள் அபிப்பிராயம் வைத்திருக்கிற நிலையில், பெண்கள் இதைப் படிக்க ஆசைப்படும்போது எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று சொல்லவே வேண்டாம். எனினும் அதைத்தாண்டி பெற்றோர்களை சமாதானப்படுத்தி, துணிந்து ஊடகத்துறைப் படிப்புகளைப் படித்த பெண்கள் பலருமே நல்ல வேலைகளில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பட்டப்படிப்பு படித்தவர்கள் மீடியா நிறுவனங்களில் தொடக்கநிலைப் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள். PGDM (Media Management) போன்ற பட்ட மேற்படிப்பைப் படிக்கும்போது நேரடியாக உயர் பதவிகளில் அமர வாய்ப்புள்ளது.

ஊடகத்துறையைத் தேர்வு செய்பவர்கள், படிப்பைத் தாண்டி செய்தி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த ஆர்வம், ரசனை, எழுத்து மற்றும் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வது முக்கியம். புதிய தொழில்நுட்பங்களுக்குத் தங்களை அப்டேட் செய்துகொள்வதும் அவசியம்.

+2-வில் எந்த குரூப் எடுத்திருந்தாலும், மீடியா சார்ந்த படிப்புகளில் சேரலாம். மீடியா துறையில் சேர்ந்தாலே கெட்டுப்போய்விடுவார்கள் என்ற தவறான அபிப்ராயத்தைப் பெற்றோர்கள் மாற்றிக்கொண்டு தங்கள் பிள்ளைகளின் படைப்புத்திறனை ஊக்குவித்தால், பிள்ளைகள் கவர்ச்சிகரமான சம்பளத்தை ஈட்டும் பதவிகளை அடைவார்கள்; எதிர்காலத்தில் சுய தொழில் தொடங்கும் தொழிலதிபர்களாகவும் உருவாக வாய்ப்பு உண்டு.

*****

தமிழில் வாய்ப்புகள் அதிகம்!

இந்திய ஊடகத்துறையில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணியில் இருந்துவந்திருக்கிறது. எண்ணிக்கையில் இந்திக்கு அடுத்தபடியாக இருந்தாலும்கூட, வணிகரீதியாக இந்தியோடு போட்டி போடும் அளவுக்கு தமிழ்ப் பத்திரிகைத்துறை எப்போதுமே இருந்துவருகிறது. இதோ அந்தப் புள்ளிவிவரம்:

தினசரி 180 - வார இதழ்கள் 67 - மாதமிருமுறை 97- மாத இதழ்கள் 523 - காலாண்டிதழ் 8 - வருடாந்திர இதழ் 1 - சிறப்பு இதழ் 9  - மொத்தத் தமிழ் இதழ்கள் 885

*****

மீடியாவின் அசுர வளர்ச்சி!

இந்திய மீடியா உலகம் எப்போதுமே சக்தி வாய்ந்ததாக இருந்துவந்தாலும்கூட இதில் சமீபத்திய வளர்ச்சி அசுரத்தனமானது என்றே சொல்லலாம். கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள் அதை உணர்த்தும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 9 - ஊடகத்துறையில் ஆர்வமா?

மீடியாவில் விதவிதமான படிப்புகள்!

மீடியா மற்றும் விளம்பரத்துறை சார்ந்து தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகளில் சில:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 9 - ஊடகத்துறையில் ஆர்வமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism