Published:Updated:

அடுத்த டார்கெட் கலை, அறிவியல் படிப்புகள்?- அரசின் அறிவிப்பால் கொதிக்கும் கல்வியாளர்கள்

``ஒரு குத்துச்சண்டை வீரருக்கும் ஒரு வலுவில்லாத நோயாளிக்கும் இடையில் நடக்கிற போட்டிபோலதான் இந்தப் போட்டியைப் பார்க்க முடிகிறது.''

மாணவர்கள்
மாணவர்கள்

மத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை, அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக பொதுநுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவிகள்
மாணவிகள்

இந்த நிலையில், ``மத்திய அரசின் இந்த முடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளை சிதைக்கும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ``தேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் பா.ம.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் நுழைவுத்தேர்வு கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக பல கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திருத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு மத்திய அரசு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

``தமிழகத்தில் ஊரக, ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்கு தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றினோம். அதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் மத்திய அரசு பறித்துக்கொண்டது. அடுத்தகட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானது" என்று கூறியுள்ள ராமதாஸ், ``நுழைவுத் தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுகள்தான் உதாரணம். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் தகுதி குறைந்தவர்களும், பணத்தை மட்டுமே வைத்திருப்பவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவது அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நீட் தேர்வுப் பயிற்சி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வணிகமாக மாற்றப்பட்டதுதான் மிச்சம். இப்போதும் அதேபோன்று புதிய கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகத்தான் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

``நாட்டில் உயர்கல்வி கற்போரின் அளவு 26.3 விழுக்காட்டைத் தாண்டவில்லை. இதற்கான காரணம் போதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன், உயர்கல்வி கற்க மாணவர்கள் முன்வராததும் ஆகும். இதை உணர்ந்துதான் உயர்கல்வி கற்போரின் அளவை 50% என்ற அளவுக்கு உயர்த்தும் நோக்கத்துடன் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, கூடுதல் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை ஓரளவுக்குப் பயனளிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுகளைத் திணிப்பது ஊரக மாணவர்களை கல்லூரிகள் பக்கமே வராமல் தடுத்துவிடும். மொத்தத்தில் இது தமிழகத்தில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி முறையைவிட மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்திவிடும். இது தவிர்க்கப்பட வேண்டும். முதலில் அனைவருக்கும் கல்வி இயக்கம், பின்னர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் என்பன போன்று புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்திய மத்திய அரசு, கல்லூரிக் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்குத் தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Vikatan

இதுதொடர்பாக கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமாரிடம் பேசினோம். ``பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு உயர்கல்விக்குச் செல்ல நினைக்கும் மாணவர்கள் இந்தியாவில் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாகத்தான் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வு மூலமாக மருத்துவ சேர்க்கை நடந்துவருகிறது. பொறியியல் படிப்புகளில் ஜே.இ எனப்படக்கூடிய joint entrance examination தேர்வு மூலமாக 2002-ம் ஆண்டில் இருந்தே ஐஐடி, என்ஐடி எனப்படக்கூடிய மத்திய அரசின் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் போக முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. இந்த நீட், ஜே.இ இல்லாமல் 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா முழுவதும் நடக்கிறது. அதாவது மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்றால், அந்த மாணவர்கள் இந்தப் பாேட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும். அப்படி ஒரு பாலிஸியை அரசு வைத்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்திருக்கிற தகவல் கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக கூறுகிறது.

செல்வகுமார்
செல்வகுமார்

சமீபத்தில் வந்த புதிய கல்விக்கொள்கையின் வரைவு திட்டத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்புகளுக்குப் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தினால் இது யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதை அரசு மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளின் நோக்கம் தவறாகத் தெரியவில்லை. தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும், தரமான மாணவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது என்று இதை நான் பார்க்கிறேன். இதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் இது யார், யாருக்கான போட்டி. ஒரு குத்துச்சண்டை வீரருக்கும் ஒரு வலுவில்லாத நோயாளிக்கும் இடையில் நடக்கிற போட்டிபோலதான் இந்தப் போட்டியைப் பார்க்க முடிகிறது. இந்த நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.