Election bannerElection banner
Published:Updated:

`ஒரு காலத்துல ஃப்ரெஷர்ஸ் பார்ட்டினு ஒண்ணு இருந்ததாகவும்..!' ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ் பரிதாபங்கள்

கல்லூரி
கல்லூரி ( Pixabay )

``அட்மிஷன் போடப்போகும்போதாவது, நம்ம காலேஜ்ஜை கண்ணால ஒரு தடவை பார்த்துட்டு வந்துடலாம்னு நெனச்சேன். அதையும் ஆன்லைன்லேயே போடச் சொல்லிட்டாங்க.''

``காலேஜ்ல முதல் நாள், சீனியர்ஸ் எல்லாம் ஜூனியர்ஸுக்கு வெல்கம் பார்ட்டி கொடுப்பாங்களாமே? ஆடிட்டோரியமே கலகலனு இருக்குமாமே? காலேஜ் டூர்னு சொல்லி, ஆடிட்டோரியம், லைப்ரரி, கேன்டீன், டிப்பார்ட்மென்ட்ஸ்னு ஒவ்வொண்ணா சுத்தி காட்டுவாங்களாமே? இது எதுவுமே எங்களுக்கு இல்லாம போச்சே..!" - முதலாமாண்டு சேர்ந்திருக்கும் கல்லூரி மாணவர்களின் புலம்பல்கள் இவை.

மாணவர்கள்
மாணவர்கள்
Pixabay

பன்னிரண்டாம் வகுப்பு கடைசி தேர்வு எழுதி முடித்ததுமே, `இனி நாம காலேஜ் ஸ்டூடன்ட்' என்று மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிடும் மாணவர்களுக்கு. `யூனிஃபார்மிலிருந்து விடுதலை, ஸ்கூல் பேக் தேவையில்லை, க்ளாஸ் முடிச்சுட்டு கேன்டீனுக்குப் போகலாம், காலேஜ் முடிச்சுட்டு காபி ஷாப் போகலாம்' என உற்சாகமாக இருப்பார்கள். ஆனால், கொரோனா ஆண்டான இந்த 2020-ல் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு, கல்லூரிக் கனவுகள் எல்லாம் இன்னும் கானல் நீராகவே உள்ளன. எப்போது கல்லூரி திறக்கப்படும் எனத் தெரியாத சூழலில், பல கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் க்ளாஸ்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்நிலையில், கலர் டிரெஸ், புது பைக், காலேஜ் பங்க், நண்பர்கள்கூட சினிமா என்று தங்கள் இயல்பான ஆசைகள் எல்லாம் பக்கெட் லிஸ்ட்டுக்குச் சென்றுவிட்ட சோகத்தை பகிர்ந்துகொண்டார்கள், மதுரையைச் சேர்ந்த சில முதலாமாண்டு மாணவர்கள்.

சிவானி

``இனி நாம காலேஜ் ஸ்டூடன்ட்னு அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். முக்கியக் காரணம், இனி யூனிஃபார்ம் நகி. பொதுவா, காலேஜ்ல சேரும்போது எல்லாருக்கும் வீட்டுல நிறைய புது டிரெஸ் எடுத்துக்கொடுப்பாங்க. இன்னும், புது பேக், புது செப்பல்னு பல `புதுசு' மகிழ்ச்சிகள் கிடைக்கும். ஆனா இப்போ எங்க வீட்டுலயெல்லாம், `ஆன்லைன் க்ளாஸுக்கு இதெல்லாம் எதுக்கு?'னு சட்டுனு சொல்லிட்டாங்க ஜி.

சிவானி
சிவானி

ப்ளஸ் டூ முடிச்சப்போ, கொரோனாவால நிறைய நாள் லீவ் கிடைச்சது. படிப்புலயிருந்து ஒரு பெரிய பிரேக் ஆகிடுச்சு. கல்லூரி திறந்திருந்தா, மறுபடியும் பிக்-அப் பண்ணியிருப்போம். ஆனா, இப்போ ஆன்லைன் க்ளாஸ்ல உட்காரும்போது பாடங்கள் எதுவும் சரியா புரியலை. ஆசிரியர்களுக்கும் எங்களுக்குமான கனெக்ட்டும் இன்னும் ஏற்படலை. அதனால, ஒரு டவுட் கேட்கக்கூட முடியலை.

`காலேஜ் போனதும் மொபைல் வாங்கித் தர்றேன்'னு வீட்டுல சொல்லியிருந்தாங்க. அதுக்காகக் காத்திருந்த எனக்கு, இப்போ அதில் தினமும் ஆன்லைன் க்ளாஸ் அட்டண்ட் பண்ணி மொபைல் ஆசையே போயிடுச்சு. காலேஜ் ஜாலிக்காக காத்திருந்த எங்களுக்குத் தலைவலியும் கண்வலியும்தான் கிடைச்சிருக்கு!"

நவீன்

``ஸ்கூல்ல படிக்கும்போதே, காலேஜுக்கு முதல் நாள் நான் பைக்ல போற கனவு கண்ணு முழிச்சிட்டு இருக்கும்போதும் வந்து வந்து போகும். பைக் வாங்குறதுக்காக பணம் சேர்த்துட்டு வந்தேன். அட்மிஷன் முடிச்சுட்டாலும் இப்போ காலேஜ் திறக்கிறதை தள்ளிவெச்சிருக்கிறதால, வேலைக்குப் போயிட்டிருக்கேன். காலேஜ் திறக்கிறதுக்குள்ள பணம் சேர்த்து பைக் வாங்கிடுவேன்.

நவீன்
நவீன்

ஆனா, போற போக்கை பார்த்தா பைக் வாங்கினதுக்கு அப்புறமும் காலேஜ் ஓபன் ஆகாது போல. காலேஜ் ஃபீலிங் வர்றதுக்குள்ளேயே, அது கொஞ்சம் கொஞ்சமா எங்களை விட்டுப் போயிட்டிருக்கிறது போல இருக்கு. காலேஜ் முதல் நாள், `ஹாய்... நான் நவீன்'னு முன்னபின்ன தெரியாத க்ளாஸ்மேட்ஸ்கிட்ட அறிமுகமாகிக்கிற ஃபீலை எல்லாம் மிஸ் பண்றோம். இனி காலேஜ் திறந்ததுக்கு அப்புறம், ஓரளவு எல்லாரும் ஆன்லைன் க்ளாஸில் ஏற்கெனவே அறிமுகமாகியிருப்போம் என்பதால, அந்தப் பரவசம் எல்லாம் குறைஞ்சுபோகும்தானே? இன்னும் எத்தனை மாசம் இந்தக் கொரோனா எங்களை வீட்டுலேயே வெச்சிருக்கப்போகுதோ தெரியல!''

அபிர்தனா

``எனக்கு இன்னும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கலை. ஆன்லைன் வகுப்புகளுக்காகத்தான் எங்க வீட்டுல எனக்கு மொபைல் வாங்கிக் கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க. அதில்தான் பாடம் கவனிக்கணும், படிக்கணும்ங்கிறதால, நியூ மாடல் மொபைலாவே வாங்கிக்கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க. ஆன்லைன் க்ளாஸ் மட்டும் இல்லைன்னா, நிச்சயமா எங்க வீட்டுல இப்போதைக்கு எனக்கு மொபைல் வாங்கிக்கொடுத்திருக்க மாட்டாங்க. அந்த வகையில ஆன்லைன் க்ளாஸுக்கு ஒரு ஹைஃபைவ்.

அபிர்தனா
அபிர்தனா

இன்னொரு பக்கம், கொரோனாவால பல காலேஜ் கனவுகள் கசங்கிப்போயிருக்கு. நானும் என் தோழியும் ஒரே காலேஜ்ல சேர்ந்து, ஒரே மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போய், வாரம் ஒரு தடவை ஃப்ரெண்ட்ஸ்கூட அவுட்டிங் ப்ளான் பண்ணினு, எல்லாம் போச்சு. சரி அட்மிஷன் போடப்போகும் போதாவது, காலேஜை கண்ணால ஒரு தடவை பார்த்துட்டு வந்துடலாம்னு நெனச்சேன். அதையும் ஆன்லைன்லேயே போடச் சொல்லிட்டாங்க. ஸ்கூல்ல டீச்சர்ஸ், `இன்னும் கொஞ்ச நாள் மட்டும் கஷ்டப்பட்டு படிங்க... காலேஜ் போனதும் ஜாலியா இருக்கலாம்'னு சொல்லிட்டே இருந்தது ஞாபகம் வருது. நாங்க ரொம்ப பாவம்ல?!"

அருண்

``பாய்ஸ் ஸ்கூல்ல படிச்ச பசங்க எல்லாம், கோ-எட் காலேஜ்ல சேரப்போற நாளுக்காகக் காத்திட்டிருப்பாங்க. எனக்கும் ஒரு கோ-எட் காலேஜ்ல சீட் கிடைச்சது. என்ன பிரயோஜனம்? விதவிதமா டிரெஸ் பண்ணனும்னு எடுத்துவெச்ச ஷர்ட், பேன்ட் எல்லாம் பீரோல தூங்குது. செகண்ட் இயர், தேர்ட் இயர் மாணவர்களுக்கும் ஆன்லைன் க்ளாஸ் நடந்தாலும், தெரிஞ்ச நண்பர்கள், ஆசிரியர்களோடு அதில் அவங்க கலந்துக்கிறாங்க. ஆனா, நாங்க முன்ன, பின்ன தெரியாத க்ளாஸ்மேட்ஸ், புர்ஃபர்ஸர்ஸோடு ஆன்லைன் வகுப்பில் கனெக்ட் ஆகும்போது, கண்ணைக் கட்டி காட்டுலவிட்ட மாதிரி இருக்கு.

அருண், மதுரை
அருண், மதுரை

ஒவ்வொரு வருஷமும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஃப்ரெஷர்ஸ் பார்ட்டி நடக்கும்னு தெரிஞ்ச அண்ணா, அக்கா சொல்ற கதையை எல்லாம் கேட்கும்போது, `ஒரு காலத்துல ஃப்ரெஷர்ஸ் பார்ட்டினு ஒண்ணு இருந்ததாகவும், அதுல முதலாமாண்டு மாணவர்கள் எல்லாம் ஜாலியா இருந்ததாகவும்...' மோடுல அதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கோம்!"

கல்லூரிக் காலம்
கல்லூரிக் காலம்
Pixabay

கோ கொரோனா கோ!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு