Published:Updated:

ஹலோ ஸ்டூடண்ட்ஸ்... மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 13 படிப்புகளுக்கு அட்மிஷன் ஸ்டார்ட்!

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கத் தயாராகலாம்.

Tamil Nadu Fisheries University
Tamil Nadu Fisheries University

மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியிருக்கிறது.

Fisheries University opens admission
Fisheries University opens admission

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University) வழங்கும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc. - Masterr of Fisheries Science), முதுநிலை மீன்வளப் பொறியியல் (M.Tech) மற்றும் மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc)

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழாகச் செயல்பட்டுவரும் கல்வி நிறுவனங்களில் 13 வகையான சிறப்புப் பாடப்பிரிவுகளின் கீழ் முதுநிலை மீன்வளப் படிப்புகள் (M.F.Sc.) இடம்பெற்றிருக்கின்றன.

இடங்கள்:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Fisheries College and Research Institute) ஒன்பது வகையான சிறப்புப் பாடப் பிரிவுகளின் கீழ் 22 இடங்கள்.

இடங்கள்:

சென்னை, பொன்னேரியிலிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Dr.M.G.R Fisheries College and Research Institute) ஐந்து வகையான சிறப்புப் பாடப் பிரிவுகளில் 11 இடங்கள்.

Fisheries University
Fisheries University

சென்னை, வாணியன்சாவடியிலுள்ள முதுநிலை மீன்வளப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனத்தில் (Institue of Fisheries Post Graduate Post Graduate Studies, OMR Campus, Vaniyachavadi) நான்கு வகையான பாடப் பிரிவுகளின் கீழ் 11 இடங்கள்.

மொத்தம்: 44 இடங்கள்

நாகப்பட்டினத்திலிருக்கும் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் Acuaculture Engineering, Fish Processing Engineering எனும் இரு சிறப்புப் பாடப் பிரிவுகளின் கீழ் முதுநிலைத் தொழில்நுட்பப் (M.Tech) படிப்புகளில் 6 இடங்கள் இருக்கின்றன.

எம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது! பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு

கல்வித் தகுதி

முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்புக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கவிருக்கும் நான்காண்டு கால அளவிலான இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை மீன்வளப் பொறியியல் (M.Tech) படிப்புக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் நான்காண்டு கால அளவிலான இளநிலை மீன்வளப் பொறியியல் (B.Tech) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். தரக்குறியீடு (Grade) எனில், மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான 10-க்கு 6.5 புள்ளிகள் அல்லது 4-க்கு 2.75 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Fisheries University in Nagapattinam
Fisheries University in Nagapattinam

மொத்தம் இருக்கும் இடங்களில் 75% இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும், 25% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள், பின்னர் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பை வேறு மாநிலங்களில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு இருப்பிடச் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பில் சேர்ந்து, படிப்பைத் தொடர முடியாமல் இடையில் விட்டுவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு முறை

முதுநிலை மீன்வள அறிவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் (M.F.Sc / M.Tech) படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

மதிப்பெண்

நுழைவுத்தேர்வு - 100

கல்வித்தகுதி - 90

கல்விக்கான பதக்கம் / விருது - 5

பணி அனுபவம் - 5

மொத்தம் - 200

Admission open in Fisheries University
Admission open in Fisheries University

எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் குறைந்தது நுழைவுத்தேர்வில் 40% மதிப்பெண்களும் மற்ற பிரிவினர் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு மாணவர்களுக்குத் தனித் தகுதிப் பட்டியலும், பிற மாநிலத்தவருக்குத் தனிப் பட்டியலும் பல்கலைக்கழக வலைதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கையில் இருவர் சமமான மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நிலையில், நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்குச் சேர்க்கை அளிக்கப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்களும் சமமாக இருக்கும் நிலையில், அவர்களின் கல்வித் தகுதிக்கான படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்குச் சேர்க்கை அளிக்கப்படும். அதுவும் சமமாக இருக்கும் நிலையில் பிறந்த தேதியைக் கொண்டு வயது அதிகமிருப்பவருக்குச் சேர்க்கை அளிக்கப்படும்.

தகுதியுடைய மாணவர்கள் மட்டும் தகுதி அடிப்படையில் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

கல்லூரி மாணவர்களுக்கு ஓஎன்ஜிசி ஸ்காலர்ஷிப்... எப்படி விண்ணப்பிப்பது?

மீன்வள அறிவியல் முனைவர் பட்டம் (Ph.D)

இடங்கள்:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Fisheries College and Research Institute) 9 சிறப்புப் பாடப் பிரிவுகளில் 13 இடங்கள்.

பொன்னேரியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 5 சிறப்புப் பாடப் பிரிவுகளில் 9 இடங்கள்.

சென்னை, வாணியன்சாவடியிலுள்ள முதுநிலை மீன்வளப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனத்தில் 3 சிறப்புப் பாடப் பிரிவுகளில் 4 இடங்கள். மொத்தம் 26 இடங்கள்.

TNFU
TNFU

கல்வித் தகுதி

மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) படிப்புக்கான அனைத்து இடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. முனைவர் பட்டத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும், அதற்கான சிறப்புப் (Specialization) பாடங்களைக்கொண்ட முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். தரக்குறியீடு (Grade) எனில், மேற்காணும் மதிப்பெண்ணுக்கு இணையான 6.5 குறியீட்டைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. கடந்த ஆண்டுகளில் முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர முடியாமல் இடையில் விட்டுவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

மாணவர் தேர்வு முறை

மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D) படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கீழ்க்காணும் மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

மதிப்பெண்

நுழைவுத்தேர்வு - 40

கல்வித்தகுதி - 40

வெளியீடுகள் - 10

கல்விக்கான பதக்கம் / விருது - 5

பணி அனுபவம் - 5

மொத்தம் - 100

எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் நுழைவுத்தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnfu.ac.in/ எனும் இணையதளத்தில் `Admission’ எனும் பக்கத்துக்குச் சென்று இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி பிரிவினர் - ரூ.500/-

மற்ற பிரிவினர் ரூ.1,000/-

விண்ணப்பக் கட்டணத்தை மின் பரிமாற்ற முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30.09.2019.

Tamil Nadu Fisheries University
Tamil Nadu Fisheries University

நுழைவுத் தேர்வு

விண்ணப்பித்தவர்கள் அனைவரும் நுழைவுத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டை 5.10.2019 முதல் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc), முதுநிலை மீன்வளப் பொறியியல் (M.Tech) மற்றும் மீன்வள அறிவியல் முனைவர் பட்டம் (Ph.D) என அனைத்துக்கும் 11.10.2019 அன்று காலை நுழைவுத் தேர்வு நடைபெறும். அன்று மாலையிலேயே தரப்பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, 12.10.2019 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 14.10.2019 முதல் வகுப்புகள் தொடங்கும்.

கூடுதல் தகவல்களுக்கு...

மேலே குறிப்பிட்டிருக்கும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 0461–2340154, 044-27971556, 27470696 ஆகிய தொலைபேசி எண்களிலோ, pgadmission@tnfu.org.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பெறலாம்.